செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

சாதி, மதம், மொழி மற்றும் பிராந்தியத்தைத் தவிர, நம் ஒவ்வொருவருக்கும் பல அடையாளங்கள் உள்ளன. - திருமதி திரௌபதி முர்மு உரை


 நமது 77வது சுதந்திர தினத்தன்று உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது நம் அனைவருக்கும் புகழ்வாய்ந்த நன்னாளாகும்.  ஏராளமான மக்கள்  இவ்விழாவைக் கொண்டாடுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.  நகரங்களிலும், கிராமங்களிலும், இந்தியாவின் எல்லா இடங்களிலும் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும்,  நமது சுதந்திர தின விழாவைக் கொண்டாட தயாராகி வருவது  பெருமிதமும், மகிழ்ச்சியும் அளிப்பதாகும். சுதந்திரத்தின்  அமிர்தப் பெருவிழாவை மக்கள் மகத்தான ஆர்வத்துடன் கொண்டாடிவருகிறார்கள்.

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எனது குழந்தைப் பருவ நாட்களை நினைவூட்டுகின்றன. எங்களின் கிராமப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற உற்சாகத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டபோது எங்களில், மெய்சிலிர்ப்பு ஏற்பட்டதை நாங்கள் உணர்ந்தோம். எங்கள் இதயங்களில் முழுமையான தேசபக்தப் பெருமிதத்துடன், தேசியக் கொடிக்கு நாங்கள் வணக்கம் செலுத்தி, தேசிய கீதம் பாடினோம்.  இனிப்புகள் வழங்கப்பட்டு, தேசபக்தப் பாடல்கள் பாடப்பட்டன. இவை எங்களின் மனங்களில்  பல நாட்களுக்கு ஒலித்துக் கொண்டிருந்தன. நான் ஒரு பள்ளி ஆசிரியரானபோது, இந்த அனுபவங்களை மீண்டும் பெறும் வாய்ப்பைப் பெற்றது என் அதிர்ஷ்டமாக இருந்தது.