மு.க.ஸ்டாலின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மு.க.ஸ்டாலின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

இரட்டைக் காப்பியமாய், இருவண்ணக் கொடியாய் சுடர்விடும் அவர்தம் வியத்தகு நினைவிடங்களைக் காண வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே. - மு.க.ஸ்டாலின்

 எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! 

அது ஈராயிரமாண்டு ஆரிய மயக்கத்தினின்று நாம் விடுபட்ட 'விழிப்பின் அடையாளம்; எழுச்சியின் குறியீடு; தமிழின மீட்சியின் வரலாறு' என எடுத்துரைக்கும் வகையில் தலைவர் கலைஞரின் நினைவிடத்தை அமைத்துள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தையும் புதுப்பித்துள்ளோம்.

இரட்டைக் காப்பியமாய், இருவண்ணக் கொடியாய் சுடர்விடும் அவர்தம் வியத்தகு நினைவிடங்களைக் காண வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே. - மு.க.ஸ்டாலின் 


அலைகளின் தாலாட்டில்.. அண்ணனின் தலைமாட்டில்.. தலைவரின் நினைவிடம்!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் அழைப்பு மடல்.

எத்தனையோ நிகழ்வுகளின்போது உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். உங்களைப் போன்ற உணர்வுடன் அந்தக் கடிதங்களைப் படித்தவன்தான் உங்களில் ஒருவனான நான். இம்மண்ணை விட்டுச் சென்றாலும், நம் நெஞ்சில் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞர் அவர்கள் தன் மரணத்திலும் போராளியாக - சுயமரியாதை வீரராகச் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றியுடன் பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் அவருக்குரிய இடத்தில், அவரது நினைவிடம் கலைத்திறனுடன் உருவாகியிருக்கிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள அதன் திறப்புவிழாவுக்கு உடன்பிறப்புகளாம் உங்களை, உங்களில் ஒருவனான நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், கழகத்தின் தலைவராகவும் வரவேற்கக் கடமைப்பட்டுள்ளேன்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். காரணம், யானைதான் காட்டின் வளத்தைப் பெருக்கும். இயற்கையின் சமச்சீரான நிலையைத் தக்கவைக்கும். பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாக்கும். யானை வாழ்ந்ததற்கான அடையாளம் அது நடந்து சென்ற பாதை மட்டுமல்ல, அது உலா வந்த காட்டின் பசுமையும் செழுமையும்தான். தமிழ்நாட்டின் தாய் யானையாகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர். 95 ஆண்டுகாலம் வாழ்ந்தவர் 80 ஆண்டுகளுக்கு மேல் பொதுவாழ்க்கைக்காகத் தன்னை அர்ப்பணித்தார். இனம் காத்திடப் போராடினார். மொழிகாக்கச் சிறை சென்றார். மக்களின் மனங்களை வென்று 5 முறை முதலமைச்சர் ஆனார். இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத தலைவராக உயர்ந்தார். நவீனத் தமிழ்நாட்டைத் தன் சிந்தனை உளியால் செம்மையுறச் செதுக்கினார். எதிர்காலத் தலைமுறைக்கும் வாழ்வளிக்கும் திட்டங்களை வகுத்தளித்த பிறகே நிரந்தரமாக ஓய்வு கொண்டார்.

பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கம், மக்கள் பக்கம் நின்றது. அவர்களின் மனங்களில் குடியேறியது. மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தது. அந்த அண்ணா நம்மை விட்டு மறைந்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் முத்தமிழறிஞர் கலைஞர். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் தம்பி என்றவர் அண்ணா. அந்த அண்ணாவின் இதயத்தைக் இரவலாகக் கேட்டவர் தலைவர் கலைஞர்.

“நீ இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில்

இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா

நான் வரும்போது கையோடு கொணர்ந்து அதை

உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா”

-என்று இரங்கற்பாவில் இலக்கியம் படைத்தவர் கலைஞர். சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்பதுதான் தலைவரின் அரசியல் இலக்கணம். சொன்னதுபோலவே, அவர் நிரந்தர ஓய்வெடுத்துக் கொண்டபோது, தன் அண்ணனின் அருகிலேயே உறக்கம் கொண்டார். இலக்கியமாய் நிலைத்துவிட்ட, ‘இரவல் கேட்ட இதயத்தை’யும் சொன்னது போலவே, அண்ணாவின் கால்மலரில் வைத்து வரலாற்றைப் படைத்தார்.

வங்கக் கடலோரம் தமிழ் அலைகள் தாலாட்ட 1969-இல் பேரறிஞர் அண்ணா நிரந்தர ஓய்வெடுக்கும்படி இடம் அமைத்துக் கொடுத்தவரே தலைவர் கலைஞர்தான். ஓங்கி உயர்ந்த தூணும், அணையா விளக்கும் கொண்ட அண்ணா சதுக்கத்தை அமைத்தவரும் அவர்தான். தன்னை அரசியல் களத்தில் ஆளாக்கிய அண்ணாவுக்கு மட்டுமல்ல, அரசியல் களங்களில் மற்போர் போல சொற்போர் நடத்தினாலும் தமிழருக்கேயுரிய பண்பாட்டுடனும் நாகரிகத்துடனும் மாற்று இயக்கத்தின் தலைவர்கள் மறைந்தபோதும் அவர்களுக்கு நினைவிடம் அமைத்த அரசியல் பண்பாளர் தலைவர் கலைஞர்.

மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் நினைவிடங்களை அமைத்தவர் கலைஞர்தான். எமர்ஜென்சி எனும் நெருக்கடிநிலைக் காலத்தில், 1975 அக்டோபர் 2-ஆம் நாள் காந்தி பிறந்தநாளன்று பெருந்தலைவர் காமராஜர் மரணமெய்திய போது, முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களே மழையையும் சகதியையும் பொருட்படுத்தாமல், கிண்டியில் உள்ள இடத்திற்கு இரவு நேரத்தில் நேரில் சென்று, கார் விளக்கொளியில் ஆய்வு செய்து, அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை, தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு மேற்பார்வையிட்டு, அரசு மரியாதையுடன் பெருந்தலைவர் காமராசரின் உடலை எரியூட்டச் செய்து, அந்த இடத்தில் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் சின்னமான ராட்டைச் சின்னத்துடன் கூடிய நினைவிடத்தை அமைத்தவர் கலைஞர்.

இராமாயணத்தைச் சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதியவர் மூதறிஞர் ராஜாஜி என்பதனால் அவரது நினைவிடத்தை இராமரின் பட்டாபிஷேக மகுடம் போல அமைத்தவரும் கலைஞர்தான். மாற்றுக் கருத்துடையவர்களேனும் அவர்தம் மனம் எதை விரும்பியதோ அதனையே நினைவிடத்தின் அடையாளமாக்கியவர் தலைவர் கலைஞர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிடத்தில் முதன் முதலில் குடை போன்ற வடிவமைப்பை அமைத்தவரும் கலைஞரே. பலருக்கும் நிழல் தருபவராக எம்.ஜி.ஆர். இருந்தார் என்பதன் அடையாளம் அது.

தேர்தல் களத்துப் பகையை நெஞ்சில் கொள்ளாமல், தன் காலத்துத் தலைவர்களுக்கு, உரிய மரியாதையுடன் நினைவிடம் அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர், அவர் விரும்பியபடி கடற்கரையில் அண்ணாவின் அருகே ஓய்வெடுக்க அன்றைய ஆட்சியாளர்கள் அனுமதி தரவில்லை. தம்பிடி இடம் கூடத் தரமாட்டோம் எனக் காழ்ப்புணர்வைக் காட்டினார்கள். கழகத்தினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாடே கலைஞருக்குக் கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் எனக் கண்ணீர்க் கோரிக்கை வைத்தது. இரக்கம் சுரக்கவில்லை ஆட்சியாளர்களுக்கு! இரத்தம் கொதித்தது உடன்பிறப்புகளுக்கு! சட்டப் போராட்டத்தைத் தொடங்கினோம். தந்தைக்கு மகன் செய்யும் கடமையாக நினைக்காமல், தலைவருக்குத் தொண்டன் செய்ய வேண்டிய கைம்மாறாக இதனை முன்னெடுத்தேன். விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பின், நண்பகல் பொழுதில் நல்ல தீர்ப்பு வந்தது. கடற்கரையில் இடம் ஒதுக்கித் தீர்ப்பளித்தனர் நீதியரசர்கள். தன் அண்ணனிடம் இரவலாகப் பெற்ற இதயத்தை ஒப்படைத்து, சொன்ன சொல் காத்த தம்பியானார் தலைவர் கலைஞர்.

‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்று தலைவர் கலைஞரே எழுதித் தந்த தனக்கான கல்லறை வரிகளுடன் கடற்கரையில் அவர் ஓய்வு கொள்ளத் தொடங்கினார். அன்றாடம் ஆயிரமாயிரம் உடன்பிறப்புகள் அங்கே வந்து கண்ணீரைக் காணிக்கையாக்குவது வாடிக்கை. 2021 தேர்தலில் கழகம் பெற்ற வெற்றியை உயிர்நிகர் தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில்தான் உங்களில் ஒருவனான நானும் காணிக்கையாக்கினேன். தலைவரின் ஓய்விடத்தில் தங்களின் திருமணத்தை நடத்தி, புதுவாழ்வைத் தொடங்கிய வெற்றிகரமான இணையர்கள் உண்டு.  பிறந்த குழந்தையைத் தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில் கிடத்தி, குடும்பத்தின் மூதாதையரை வணங்குவது போன்ற வணக்கத்தைச் செலுத்தியவர்கள் உண்டு. மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், விளிம்புநிலை மக்கள் எனத் தலைவர் கலைஞரின் ஆட்சித்திறனால் தங்கள் வாழ்வில் ஒளிபெற்றவர்களின் நன்றி செலுத்தும் இடமாக கலைஞரின் ஓய்விடம் அமைந்தது.

தமிழுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் ஓயாது உழைத்த தலைவர் கலைஞர் ஓய்வு கொள்ளும் இடத்தை ஒரு வரலாற்றுச் சின்னமாகக் கட்டியமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திராவிட மாடல் அரசு அதற்கான செயல்திட்டங்களை வகுத்தது. ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடங்கிய இந்தப் பணி, தலைவர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வருவதற்கு முன்பாக நிறைவடைந்துள்ளது.

எதையும் தாங்கும் இதயத்துடன் பேரறிஞர் அண்ணா துயில் கொள்ளும் சதுக்கமும் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரு பெரும் தலைவர்களால் நம் இனிய தமிழ்நாடு பெற்ற பயன்களை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ளும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைந்த வரலாற்றுச் சின்னமாக வடிவமைக்கப்பட்டுள்ளன பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் ஓய்வு கொள்ளும் இடங்கள். முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள நிலவறையில் பயணித்தால், கலைஞர் வாழ்ந்த காலத்தில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். தலைவர் கலைஞருடனேயே பயணிப்பது போன்ற அனுபவம் கிடைக்கும். அவர் பெற்றுத் தந்த செம்மொழித் தகுதி, அவர் உருவாக்கிய கணினிப் புரட்சி, அவர் கட்டமைத்த நவீனத் தமிழ்நாடு, அவருடைய படைப்பாற்றல், அவரது நிர்வாகத்திறன், இந்தியத் தலைவர்களின் பாராட்டுதலைப் பெற்ற கலைஞரின் ஆளுமை உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியை நிறைவேற்ற அல்லும் பகலும் உழைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பையும், அவருக்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையினரின் ஒத்துழைப்பையும் மறக்க முடியாது. தமிழினத்தின் உயர்வுக்காக அயராது உழைத்த முத்தமிழறிஞர் கலைஞருக்காக இரவு - பகலாக உழைத்தும், தங்கத்தைப் போல இழைத்தும் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்த நினைவிடம்.

என்றென்றும் நெஞ்சில் வாழ்ந்து, நம்மை இயக்கக்கூடிய தலைவரின் ஓய்விடம் வியக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு, பிப்ரவரி 26-ஆம் நாள் திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் திறந்து வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு ஒளி தந்த ஞாயிறான நம் கலைஞரின் ஓய்விடம், திங்கள் மாலையில் திறந்து வைக்கப்படும் நிகழ்வில், அவரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என உங்களில் ஒருவனான நான் உரிமையுடனும் உள்ளன்புடனும் அழைக்கின்றேன்.

“எழுந்து வா.. எழுந்து வா..” என்று கோபாலபுரம் இல்லத்தின் முன்பும், காவிரி மருத்துவமனை அருகே உள்ள சாலைகளிலும் நின்று முழக்கமிட்ட உடன்பிறப்புகள் நீங்கள்தானே..! உங்களின் குரலை இப்போது கடல் அலைகள் அன்றாடம் முழக்கமிடுகின்றன. பேரறிஞர் அண்ணாவை எழுந்து வரச் சொன்னார் தலைவர் கலைஞர். அண்ணா வரவில்லை. கலைஞரை எழுந்து வரச் சொல்கின்றன அலைகள். அவரின் ஓய்வு நிறைவடையவில்லை. தன்னால் வர இயலாவிட்டாலும், தன் உடன்பிறப்புகள் நிச்சயம் வருவார்கள் என்பதைத் தலைவர் கலைஞர் அறிவார். தலைமுறைகள் கடந்த தலைவரான நம் கலைஞர், தமிழ் அலைகளின் தாலாட்டில், தன் அண்ணனின் தலைமாட்டில் ஓய்வெடுக்கிறார். அவரைக் காண வங்கக் கடலோரம் வருக உடன்பிறப்பே!


ஞாயிறு, 19 ஜூன், 2022

முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்குவது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்காக அல்ல, அவர்களை ஊக்கப்படுத்தவும் மேலும் பல பணிகளை செய்ய உற்சாகப்படுத்தவும்தான்!

 "முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்குவது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்காக அல்ல, அவர்களை ஊக்கப்படுத்தவும் மேலும் பல பணிகளை செய்ய உற்சாகப்படுத்தவும்தான்!"

- திமுகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், அன்று (17-06-2022) சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில்  திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கழக முன்னோடிகள் 500 பேருக்குப் பொற்கிழி வழங்கி, தலைமையுரை ஆற்றினார்.

அதன் விவரம் வருமாறு:

புதன், 30 மார்ச், 2022

"தலைநகர் டெல்லியில் தலைநிமிரும் திராவிடக் கோட்டை!" - மு.க.ஸ்டாலின்


"தலைநகர் டெல்லியில் தலைநிமிரும் திராவிடக் கோட்டை!"

- மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் .

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பெருமித மடல்.

வானத்தில் சிறகடிக்கும் பறவை எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அது தன் கூட்டுக்குத் திரும்பும்போதுதான் பெரும் மகிழ்ச்சி கொள்ளும். பாடுபட்டுச் சேகரித்து வந்த இரையைத் தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவதில்தான் பறவைக்குப் பேருவகை!

அதுபோல, 5 நாட்கள் அமீரகத்திற்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமிழர்களின் தனிப் பாசத்திலும் பேரன்பிலும் மூழ்கித் திளைத்து - திணறி - திக்குமுக்காடி, அந்நாட்டு அரசு சார்பிலான அன்புகனிந்த மரியாதையைப் பெற்று, துபாய் - அபுதாபி தொழில் நிறுவனங்களுடன் முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டு, தாய்மண்ணாம் தமிழ்நாட்டிற்கு அதிகாலையில் வந்திறங்கியபோது, சிறகடித்து முடித்துக் கூடு திரும்பும் தாய்ப் பறவையின் உணர்வினைப் பெற்றேன்!

செவ்வாய், 22 மார்ச், 2022

'எல்லார்க்கும் எல்லாம்' என்ற நூற்றாண்டு கால திராவிட - சமூகநீதிக் கொள்கைகளையும், இக்கால நவீனத் தேவைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.-


“தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை” - மு.க.ஸ்டாலின்.

2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் அவர்கள் இன்று காலை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கை தமிழக நிதிநிர்வாகத் துறைக்கு மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. நிதிநிலை அறிக்கை என்ற எல்லையையும் தாண்டி, தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு முன்னோட்டமான கொள்கை அறிக்கையாக அது அமைந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகள், முறைகேடுகளை விளக்கிக் கூறி, திருமண உதவித் திட்டத்தை, தயவுசெய்து கொச்சைப்படுத்திட நான் விரும்பவில்லை.- மு.க.ஸ்டாலின்


 மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை :  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் பெயரிலே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்த திட்டம்தான் இந்தத் திருமண உதவித் திட்டம்.  அதைப் பற்றி மாண்புமிகு நிதித் துறை அமைச்சர் அவர்கள் மிக விளக்கமாக உங்களிடத்திலே குறிப்பிட்டிருக்கிறார்கள்.  இருந்தாலும், அதையொட்டி நான் கொஞ்சம் அழுத்தம் தந்து, அதில் நீங்கள் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக, நீங்கள் மட்டுமல்ல; நாட்டு மக்களும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக சில விளக்கங்களை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.  

சனி, 12 மார்ச், 2022

இந்தியா முழுமைக்கும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாவதற்கான சூழலை நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்படுத்த வேண்டும். - திரு. மு.க.ஸ்டாலின்

“இந்தியா முழுமைக்கும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாவதற்கான சூழலை நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்படுத்த வேண்டும்” - திரு. மு.க.ஸ்டாலின் உரை

இது கழக குடும்பத்தில் நடைபெறும் திருமணம்; நம்முடைய குடும்பத்தில் நடைபெறும் திருமணம் என்கிற உணர்வோடு நாம் எல்லாம் இதில் கலந்துகொண்டு மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை வாழ்த்தி கொண்டிருக்கிறோம்.

நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்று அந்த அமைச்சரவைக்கு பெருமை சேர்த்த நம்முடைய நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணன் தங்கபாண்டியன் - ராஜாமணி பாப்பாத்தி அவர்களுடைய மகள் வழி பேத்தியும், முன்னாள் ஐ.ஜி. சந்திரசேகர் – திருமதி. சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுடைய புதல்வியுமான மருத்துவர் நித்திலா சந்திரசேகர் எம்.பி.பி.எஸ்., எம்.டி., அவர்களுக்கும் – திரு. வி.எஸ்.ஆர். ராஜராம் - திருமதி. விஜயலட்சுமி ஆகியோரின் பேரனும், மருத்துவர் ஆர். மகேந்திரன் - அபிராமி மகேந்திரன் அவர்களது புதல்வனுமான மருத்துவர் கீர்த்தன் மகேந்திரன் அவர்களுக்கும் நடைபெறும் இந்த இனிய திருமண விழாவில் கலந்துகொண்டு- இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன்.

ஞாயிறு, 6 மார்ச், 2022

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.- மு.க.ஸ்டாலின்



நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது.

அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது.

திங்கள், 28 பிப்ரவரி, 2022

தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட, மேலும் மேலும் உழைப்பேன்.. ஓயாது உழைப்பேன்.. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்.


 "தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட, மேலும் மேலும் உழைப்பேன்.. ஓயாது உழைப்பேன்.. உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளுடன் உற்சாகமாக உழைப்பேன் எனப் பிறந்தநாள் உறுதியினை ஏற்கிறேன்!"

- திமுகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்.

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

திங்கள், 3 ஜனவரி, 2022

புதிய உறுப்பினர்கள் சேர்ப்பீர்! எந்நாளும் கழகம் வென்றிட, தொடர்ந்து மேலும் மேலும் வலிவும் பொலிவும் சேர்ப்பீர்! - மு.க.ஸ்டாலின் கடிதம்.

 "புதிய உறுப்பினர்கள் சேர்ப்பீர்!  எந்நாளும் கழகம் வென்றிட, தொடர்ந்து மேலும் மேலும்  வலிவும் பொலிவும் சேர்ப்பீர்!" -  மு.க.ஸ்டாலின் கடிதம்.

புதிய உறுப்பினர்கள் சேர்ப்பீர்!

நம் உயிருடன் கலந்த தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆழமாகச் சிந்தனை செய்து அற்புதமாக வடிவம் தந்த  திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கம், அன்றும் இன்றும் என்றும் இளைஞர் பட்டாளத்தின் நம்பிக்கைக்குரிய அரசியல் இயக்கம் என்பது வரலாற்றுப் பேருண்மை. பேரறிஞர் அண்ணா அவர்களும் கலைஞர், நாவலர், பேராசிரியர் உள்ளிட்ட அவரது நம்பிக்கைக்குரிய தம்பிமார்களும் நமது இந்த இயக்கத்தைத் தொடங்கியபோது எழுச்சியும் எண்ணத் தெளிவும் மிக்க இளைஞர்களாக இருந்தவர்கள். அவர்களின் பின்னே ஆயிரமாயிரமாய்த் தொடங்கி இலட்சோப இலட்சமாக இளைஞர்கள் திரண்டு அணி வகுத்தார்கள். திராவிட இன உணர்வை - தமிழ்மொழிச் சிந்தனையை - சமூகநீதியை - சுயமரியாதையை - பகுத்தறிவை நாடெங்கிலும் நாள்தோறும் முழங்கினார்கள். தேர்தல் அரசியலுக்கு வர விரும்பாத தந்தை பெரியாரின் இலட்சியங்களை, பேரறிஞர் அண்ணாவும் அவரது ஆற்றல் மிக்க தம்பிமார்களும் அரசியல் இயக்கத்தின் வழியே, மக்களைத் திரட்டி, ஆட்சியைப் பிடித்து, தழுவிய இலட்சியங்களை முழுவதுமாக நிறைவேற்றிடத் தொடங்கினர். இளைஞர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் இயக்கமாகத் தி.மு.கழகம் இமயமென உயர்ந்து நின்றது.

திங்கள், 4 அக்டோபர், 2021

உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைவதற்கான வாக்குகளாக உங்கள் வாக்குகள் அமைய வேண்டும்.- மு.க.ஸ்டாலின் உரை


சட்டமன்றத் தேர்தலில் நல்லாட்சி மலர்வதற்கு வாக்களித்த நீங்கள், உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர்வதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நம்முடைய கூட்டணிக் கட்சியினருக்கும் உங்களது பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும் என்று நான் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 'உத்தரவிடுங்கள் - உங்களுக்கு உழைக்கக் காத்திருக்கிறோம்' என்று நாட்டு மக்களிடம் நாங்கள் வாக்குக் கேட்டோம்.

வெள்ளி, 9 ஜூலை, 2021

"கலைஞர் பிறந்த மண்ணில்....!" திமுக தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதம்

 "கலைஞர் பிறந்த மண்ணில்....!"

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதம்.

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

‘சொன்னதைச்  செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் நமக்குக் கற்றுத்தந்த வழியில், அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடனும் வாழ்த்துகளுடனும் நல்லாட்சி பீடுநடை போட்டு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் மனமுவந்து வழங்கிய மகத்தான வெற்றியையும் அந்த மக்களுக்கான நல்லாட்சியையும் நம் உயிர்நிகர் தலைவர் பிறந்த திருக்குவளையிலும், அவர் தமிழ்க்கொடி ஏந்தி திராவிடக் கொள்கை முழங்கிய திருவாரூரிலும் நேரில் சென்று காணிக்கையாக்கி மகிழ்ந்திட,  அவரது  அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் ஒருமித்த நல்லாதரவுடன், உங்களில் ஒருவனான நான் மேற்கொண்ட பயணம்  மனநிறைவை அளித்திருக்கிறது.

செவ்வாய், 6 ஜூலை, 2021

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு உறுப்பினர்கள் நியமனம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு



தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு உறுப்பினர்கள் நியமனம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான காத்திடவும், ஆணையம் மீண்டும் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.

காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக வழங்க வேண்டும்.- மு.க.ஸ்டாலின்

“காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக வழங்க வேண்டும்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆய்வுக் கூட்டத்தில் அறிவுரை.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (6.7.2021) தலைமைச் செயலகத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் நடைபெற்றது.

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி முதல் முறையாக நாளிதழ்கள், பருவ இதழ்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் 540 நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி முதல் முறையாக நாளிதழ்கள், பருவ இதழ்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் 540 நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான உண்மையான செய்திகளையும், கொரோனா நோய்த்தொற்றுக் குறித்த விழிப்புணர்வு செய்திகளையும் பொதுமக்களுக்கு விரைவாகக் கொண்டு செல்லும் பணிகளை முன்களப் பணியாளர்களான பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மிகவும் சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறார்கள்.

வியாழன், 10 ஜூன், 2021

‘கடமை’யை நான் நிறைவேற்ற வேண்டியிருப்பதால் - ‘கண்ணிய’மிக்க செயல்பாடு என்பது நீங்கள் ‘கட்டுப்பாடு’ காப்பதுதான்.- உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் அவர்களின் கடிதம்


“கலைஞர் வளப்படுத்திய காவிரிப் படுகைக்குப் பயணம்!”

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடிதம்.

நம் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

ஓய்வறியாச் சூரியனாம் நம் முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்விடத்தில் எடுத்துக் கொண்ட சூளுரையின்படி, தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.கழக ஆட்சி அமைந்து, ஒரு மாதகாலம் கடந்திருக்கிறது. உங்களைப் போன்ற உடன்பிறப்புகளின் கடும் உழைப்பாலும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவாலும், தோழமைக் கட்சியினரின் ஒத்துழைப்பாலும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் கிடைத்த இந்த வெற்றியை, மே 2-ஆம் நாள் இரவில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவிடத்திலும், நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களின் ஓய்விடத்திலும் காணிக்கையாக்கி நன்றி செலுத்தினேன்.

புதன், 9 ஜூன், 2021

குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்கள், இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்


கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்கள், இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டுமெனக் கோரி, 12 மாநில முதலமைச்சர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

ஞாயிறு, 30 மே, 2021

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 'ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியைத் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 'ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் (30.05.2021) கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில், கழகத்தின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

ஜூன் 3 உள்ளம் நிறைந்த தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை இல்லங்களில் கொண்டாடுவோம்.- மு.க.ஸ்டாலின் கடிதம்



"உள்ளம் நிறைந்த தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை இல்லங்களில் கொண்டாடுவோம்" - தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்.

நம் உயிருடன் கலைந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

ஜூன் 3 - நம் தாய்மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியினைப் பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்தநாள். தி.மு.கழகத்தினர்க்கு அது சிறந்த நாள். நவீனத் தமிழ்நாட்டின் நன்மை பயக்கும் உயர்வுக்கெல்லாம்  காரணமான நம் உயிர்நிகர் தலைவர் அவர்களை, அய்யா முத்துவேலரின் வாழ்விணையரான அன்னை அஞ்சுகம் அம்மையார் ஈன்ற நாள். 

சனி, 29 மே, 2021

தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்ற நிலையை கழகத்தினர் உருவாக்க வேண்டும்.- மு.க.ஸ்டாலின்



"தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்ற நிலையை கழகத்தினர் உருவாக்க வேண்டும்"

- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

தமிழகத்தை கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து மீட்பதற்காக, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒருவார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவார கால ஊரடங்கினால் நோய்த்தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருவதைக் காண்கிறோம். இது மேலும் குறைந்து, நோய்த் தொற்று வரைபடம் தட்டையான நிலையை எட்டிட வேண்டும் என்பதற்காகத்தான் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்; மளிகைப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்கலாம்; நியாய விலைக் கடைகளிலும் மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும்! - மு.க. ஸ்டாலின்



ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களது அறிக்கை

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தும், ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிசீலித்தும், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.