ஞாயிறு, 19 ஜூன், 2022

முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்குவது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்காக அல்ல, அவர்களை ஊக்கப்படுத்தவும் மேலும் பல பணிகளை செய்ய உற்சாகப்படுத்தவும்தான்!

 "முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்குவது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்காக அல்ல, அவர்களை ஊக்கப்படுத்தவும் மேலும் பல பணிகளை செய்ய உற்சாகப்படுத்தவும்தான்!"

- திமுகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், அன்று (17-06-2022) சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில்  திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கழக முன்னோடிகள் 500 பேருக்குப் பொற்கிழி வழங்கி, தலைமையுரை ஆற்றினார்.

அதன் விவரம் வருமாறு:

திருவள்ளுர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 99-ஆம் ஆண்டின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிற வகையில், இந்த திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகத்திற்கு உட்பட்டிருக்கும் நம்முடைய இயக்கத்தின் முன்னோடிகள் 500 பேருக்குப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

இப்படிப்பட்ட இந்தச் சிறப்பான நிகழ்ச்சியில் உங்களுடன் சேர்ந்து நானும் பங்கேற்று நம்முடைய இயக்க முன்னோடிகளுக்கு அந்தப் பொற்கிழி வழங்கும் ஒரு அரிய வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

நாசர் அவர்கள் பேசுகிறபோது சொன்னார், “கேட்டவுடன் தேதி கொடுத்தார்” என்று; உண்மைதான்! வேறு ஏதாவது ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால், பார்ப்போம் - கொஞ்சம் பொறுத்திருங்கள் – இரண்டு நாள் கழித்து வாருங்கள் - மூன்று நாள் கழித்து வாருங்கள் - அடுத்த வாரம் பார்ப்போம் என்றுதான் நான் சொல்லியிருப்பேன்.

ஆனால் எதற்காக இந்த நிகழ்ச்சி என்று பார்த்தால், நம்முடைய கழக முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி. எனவேதான் உடனடியாக - எந்த மறுப்பு ஏதும் சொல்லாமல் - பொறுத்திருந்து தருகிறேன் என்று சொல்லாமல் - தட்டிக் கழிக்காமல் - உடனடியாக நானே மனமுவந்து இந்தத் தேதியை வழங்கி இன்றைக்கு உங்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

குறிப்பாகத் திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகத்தின் பொறுப்பாளர் பூபதி அவர்களுக்கும், அவருக்கு துணைநின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் கழக நிர்வாகிகளுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 99-ஆம் ஆண்டு பிறந்தநாளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், ஏதோ ஜூன் 3-ஆம் தேதியோடு நாம் நிறுத்திக் கொள்ளவில்லை. இன்றைக்குத் தேதி என்ன என்பது உங்களுக்கு தெரியும், 17-ஆம் தேதி.

எனவே ஜூன் 17-ஆம் தேதியும் கொண்டாடுவோம், ஏன் அடுத்த ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி வரை கொண்டாடுவோம். அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் - ஆட்சிப் பொறுப்பில் இல்லை என்று சொன்னாலும் தமிழ்நாட்டு மக்களுக்காகப் போராடக்கூடியவர் - வாதாடக்கூடியவர் - பல்வேறு சாதனைகளை உருவாக்கிக் தந்திருக்கக்கூடியவர்.

எனவே அப்படிப்பட்ட முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம் என்று சொன்னால், அது நமக்குக் கிடைக்கும் பெருமை. அதனால்தான் ஏற்கனவே இதே அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய பிறந்தநாளை எப்படி எல்லாம் கொண்டாடிட வேண்டும் என்பதை முறைப்படுத்தி - தீர்மானம் போட்டு அதில் முக்கியமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் கழக முன்னோடிகளைப் பெருமைப்படுத்தும் வகையில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு அந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறத் தொடங்கி இருக்கிறது.

ஜூன் 3-ஆம் தேதி அன்று நான் சென்னை கிழக்கு மாவட்டத்திற்குச் சென்றேன். பாரிமுனையில் இருக்கும் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டேன். அப்பொழுது அந்த விழாவில் பங்கேற்று நான் பேசுகிறபோது சொன்னேன். 

வேருக்கு விழா எடுக்கிறோம். வேர் என்றால் கலைஞர்தான் இந்த இயக்கத்தின் வேர். தமிழகத்தின் வேர் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.  எனவே அப்படிப்பட்ட வேராக இருந்து இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்து தமிழர்களுடைய பெருமையை நிலைநாட்டி இருக்கக்கூடியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

எனவே தலைவர் கலைஞர் அவர்கள் வேராக இருந்தாலும், இன்றைக்கு ஆலமரமாக - கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் நம்முடைய இயக்கத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் - பாடுபட்டுக் கொண்டிருக்கும் கழக முன்னோடிகளுக்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

இந்தப் பொற்கிழி வழங்குகிற காரணத்தால் ஏதோ நீங்கள் செய்த பணிகளுக்கு பரிகாரம் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணிகளுக்கு எதுவும் ஈடாகாது. என்ன கொடுத்தாலும் ஈடாகாது. எனவே அப்படிப்பட்ட பணிகளை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

இன்றைக்கு தி.மு.க. ஆறாவது முறையாக - கலைஞர் தலைமையில் ஐந்து முறை ஆட்சியில் இருந்து - ஆறாவது முறையாக இன்றைக்கு நாம் ஆட்சியில் இருக்கிறோம் என்று சொன்னால் அதற்கு காரணம் நீங்கள்தான் - உங்களுடைய உழைப்புதான்.

இன்றைக்கு நான் முதலமைச்சராக இருக்கலாம் - நாசர் அமைச்சராக இருக்கலாம் - இங்கிருக்கும் ஜெகத்ரட்சகன் அவர்கள் எம்.பி.யாக இருக்கலாம் – ராஜேந்திரன், சந்திரன் போன்றவர்கள் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம்.

அதேபோல பல பேர் உள்ளாட்சி அமைப்பில் தலைவர்களாக - நகர்மன்றத் தலைவராக - ஊராட்சித் தலைவர்களாக - பஞ்சாயத்துத் தலைவர்களாக - கவுன்சிலர்களாக - இப்படி பல பொறுப்புகளில் இருக்கலாம்.

இந்தப் பொறுப்புகளில் இன்றைக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னால், அதற்கு முழுக் காரணம் நீங்கள்தான். அதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அப்படிப்பட்ட உங்களுக்கு, உங்களை ஊக்கப்படுத்துவதற்காகத்தானே தவிர, உங்களுக்கு நன்றி சொல்வதற்காக அல்ல, உங்கள் உழைப்புக்கு ஏதோ கூலியாக நினைத்து - பரிகாரம் காணும் வகையில் அல்ல. உங்கள் உழைப்புக்கு ஈடு - இணை எதுவும் இருக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். 

1967-இல் முதன் முதலாக தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா அவர்கள் தலைமையில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றபோது, அன்றைக்கு முதலமைச்சராக இருந்து - முன்னாள் முதலமைச்சராக மாறிய திரு.பக்தவச்சலம் அவர்கள், அவரைச் சந்தித்து பத்திரிக்கை நிருபர்கள் எல்லாம் கேட்டார்கள், “இதுவரை நீங்கள் முதலமைச்சராக இருந்தீர்கள். இப்போது ஆட்சி மாற்றம் - அண்ணா முதலமைச்சராக வந்துவிட்டார். நீங்கள் இப்போது முன்னாள் முதலமைச்சர் ஆகிவிட்டீர்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தி.மு.க. வெற்றியைப் பற்றி - அண்ணா அவர்களின் வெற்றியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, அப்போது பக்தவத்சலம் என்ன சொன்னார் என்றால், “தி.மு.க. வெறும் டீ-யைக் குடித்துக் கொண்டே உழைத்து இந்த வெற்றியை கண்டிருக்கிறது” என்று சொன்னார். அதுதான் தி.மு.க. 

எனவே அப்படிப்பட்ட இந்த மாபெரும் இயக்கத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு மரியாதை - ஒரு பெருமையைத் தேடித் தர வேண்டும் - அதன் மூலமாக நாங்கள் பெருமை அடைய வேண்டும். இந்த மேடையில் இருக்கும் நாங்கள் பெருமை அடைய வேண்டும். உங்களுக்கு வழங்குகிற காரணத்தால் அந்தப் பெருமை எங்களுக்கு வந்து சேர்கிறது என்ற அந்த எண்ணத்தோடுதான் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

எனவே உங்களுடைய உழைப்புக்கும் - தியாகத்திற்கும் ஈடு - இணை எதுவும் கிடையாது என்பது நன்றாகத் தெரியும். 

எனவே இன்றைக்குத் தமிழ்ச் சமூகத்திற்காக, ‘பதவி என்னும் படகு ஏறித்தான் பணியாற்ற வேண்டும் என்பதல்ல‘ - படகில் சென்றுதான் பணியாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நீந்திக் கொண்டும் பணியாற்ற முடியும்.

எனவே நாங்கள் எல்லாம் படகில் ஏறிப் பணியாற்றுகின்றோம். நீங்கள் எல்லாம் இன்றைக்கு நீந்திக் கொண்டே பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே அப்படிப்பட்ட நிலையில் இந்த விழா இன்றைக்கு சிறப்போடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

திராவிட முன்னேற்றக் கழகம் 6-ஆவது முறையாக உங்கள் அன்போடு - ஆதரவோடு – உழைப்போடு ஆட்சிப் பொறுப்பில் வந்திருக்கும் நாம், ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று தந்தை பெரியார் வழியில் - அண்ணா வழியில் - கலைஞர் வழியில் - ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், ‘திராவிட மாடல்‘ என்று சொல்லும் வகையில் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகளை - உறுதிமொழிகளை மக்களிடத்தில் எடுத்துச் சொன்னோமோ, அவைகள் ஓரளவிற்கு - ஏன் 80 சதவிகிதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு 20 சதவிகிதம் இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை.

நாம் ஆட்சிக்கு வந்த போது என்ன நிலை? ஒரு பக்கம் கொரோனா என்ற கொடிய நோய். இன்னொரு பக்கம் நிதிப்பற்றாக்குறை. கஜானா காலியாக இருந்த ஒரு கொடுமை. 

எனவே இதையெல்லாம் சமாளித்து 80 சதவிகிதத்திற்கு மேல் தேர்தல் நேரத்தில் தந்த உறுதிமொழிகளை காப்பாற்றி இருக்கிறோம் என்று சொன்னால் மீதமிருக்கும் 20 சதவிகிதத்தையும் நான் உறுதியோடு சொல்கிறேன், அதையும் உறுதியாகக் காப்பாற்றுவான் இந்த ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்‘ என்பதை உறுதியோடு நான் தெரிவித்துக் கொண்டு, ஏதோ உங்களுக்குப் பொற்கிழி கொடுத்துவிட்டோம் – நீங்கள் சென்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்பதற்காகக் கொடுக்கவில்லை.

இன்னும் பல பணிகளை நீங்கள் செய்ய வேண்டும். அதன் மூலமாக நாங்களும் அந்த பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். உங்களை ஊக்கப்படுத்துவதற்காகத்தான் – உற்சாகப்படுத்துவதற்காகத்தான் - இந்தப் பொற்கிழி என்கிற பெயரில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இது ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறவிருக்கிறது. எனவே இன்றைக்கு பூபதி அவர்கள் தன்னுடைய மாவட்டத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள் ஒத்துழைப்போடு கழக முன்னோடிகள் அரவணைப்போடு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

அதற்காக நான் அவர்களுக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் நன்றியோடு தெரிவித்துக்கொண்டு கலைஞர் வழியில் நடைபோடும் இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று உங்கள் அத்தனை பேரையும் கேட்டு இந்த சிறப்பான நிகழ்ச்சியில் உங்களை காணும் வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். நன்றி! வணக்கம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக