செவ்வாய், 21 ஜூன், 2022

தொன்மை வாய்ந்த அறிவியலான யோகா உலகத்திற்கு இந்தியா அளித்த விலைமதிப்பற்ற பரிசு - குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு


 மத்திய சுற்றுலா அமைச்சகம் செகந்திராபாத் அணிவகுப்பு மரியாதைக்கு ஏற்பாடு செய்திருந்த சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு நூற்றுக்கணக்கானோருடன் கலந்து கொண்டார். யோகா பயிற்சி மேற்கொண்ட குடியரசு துணைத்தலைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே உரையாற்றினார்.

தொன்மை வாய்ந்த அறிவியலான யோகா உலகத்திற்கு இந்தியா வழங்கிய விலைமதிப்பில்லாத பரிசு என்று கூறிய திரு நாயுடு,  ஒவ்வொருவரும் யோகாவை தங்களது அன்றாட பயிற்சியாக மேற்கொண்டு அதன் பலன்களை பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  நல்வாழ்வுக்கு தீர்வாக யோகா குறித்து மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்.

யோகா என்பதற்கு சேர்வது மற்றும் ஒன்றுபடுத்துவது என்பது பொருளாகும். மனதிற்கும் உடலுக்கும் இடையிலும், மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையிலும் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் அது உறுதி செய்கிறது என்று  கூறிய  திரு நாயுடு, இந்தத் தருணத்தில் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த பாடுபட வேண்டும் என்று  வலியுறுத்தினார்.

நமது பழமையான சித்தாந்தத்தில் இருந்து ஊக்கம் பெறுவது அவசியம் என்று வலியுறுத்திய குடியரசு துணைத்தலைவர், நமது மனங்களையும், உடல்களையும் மாற்றுவதாக மட்டுமில்லாமல், நாட்டின் ஒட்டுமொத்த மாற்றத்திற்கு வழிவகுக்கு உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கீதையை மேற்கோள்காட்டிய அவர்,  யோகாவை செயல்பாட்டில் சிறப்பு என்று குறிப்பிட்டார்.  நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல ஒவ்வொரு இந்தியரும் இந்த மந்திரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் உங்களது கடமைகளை நேர்மையாகவும், செயல் திறனோடும் செய்தால் நாடு நிச்சயம் மிக வேகமாக முன்னேறும் என்று அவர் கூறினார்.

வாழ்க்கையில் சிறப்பான ஆரோக்கியம் அவசியம் என்று வலியுறுத்திய திரு நாயுடு, சர்வதேச யோகா தினம் போன்ற  உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் மக்களிடையே ஏற்படுத்தும்  அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

மனித குலத்திற்கான யோகா என்ற இந்த ஆண்டின் யோகா தின கருப்பொருள் குறித்து  குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், முழுமையான உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் யோகாவின் பங்கை எடுத்துக்காட்டினார்.  கொவிட் பெருந்தொற்று காரணமாக  மனநலத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து குறிப்பிட்ட அவர், உடல் நலத்தை வலுப்படுத்த யோகா சிறந்த வழி என்பதை பெருந்தொற்று நமக்கு உணர்த்தியுள்ளதாக கூறினார்.

யோகாவை பரப்புவது குறித்த மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் முயற்சிகளைப் பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், இயற்கையுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவது, ஆன்மீகத்தை வளர்ப்பது ஆகிய இந்திய கலாச்சாரத்தை யோகா பிரதிபலிப்பதாக தெரிவித்தார். நமது மூதாதையர் வழங்கிய பெருமைமிகு பரிசு குறித்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றும், மனிதகுலத்தின் நீண்ட நல்வாழ்வுக்காக உலகம் முழுவதும் யோகாவை பரபரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

யோகாவுக்கு வயது, ஜாதி, மதம், பிராந்தியம் ஆகிய எந்த எல்லையும் கிடையாது என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். அது பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பது என்று தெரிவித்த அவர், மக்கள் அதனை பயிற்சி செய்து பரப்பி பெருமை கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக