புதன், 15 ஜூன், 2022

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்கீழ் 'குறைந்தபட்ச ஆட்சி, அதிகபட்ச நிர்வாகம்' என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். - திரு.ஜோதிர் ஆதித்ய எம்.சிந்தியா


 மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஜோதிர் ஆதித்ய எம்.சிந்தியா, IoTechWorld Avigation Pvt Ltd-க்கு, ட்ரோன் விதிகள் 2021-ன்கீழ், முதல் தகுதிச் சான்றிதழை வழங்கினார். 2017-ம் ஆண்டில் குருகிராமில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இந்தியாவில், விவசாயத்துறைக்கு உதவி செய்யும் ட்ரோன்களை தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது.

IoTechWorld சான்றிதழுக்கான விண்ணப்பத்தை விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் இணையதளத்தில் 2022 மே 11-ம் தேதி சமர்ப்பித்த நிலையில், 34 நாட்களுக்குள் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  ட்ரோன் விதிகள் 2021, இந்திய தர கவுன்சில் அல்லது சான்றிதழ் வழங்கும் அமைப்புகளுக்கு சான்றிதழ் வழங்க 60 நாட்களும், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு 15 நாட்களும் என மொத்தம் 75 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இருந்தபோதிலும், தேவையான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டதால், 60 நாட்களில் தகுதிச் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

2021 ஆகஸ்ட் 25-ம் தேதி, ட்ரோன் விதிகள் 2021 கொண்டு வரப்பட்டது. ட்ரோன்களுக்கான தகுதிச் சான்றிதழை பெறுவதற்கு, 'ஆளில்லா விமான அமைப்புகளுக்கான சான்றிதழ் திட்டம்' 2022 ஜனவரி 26-ம் தேதியும் அறிவிக்கப்பட்டது.

ட்ரோன்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுவதால், உலகத் தரம் வாய்ந்த ட்ரோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, சந்தைப்படுத்துவதற்கான சூழலை உருவாக்க வாய்ப்புள்ளது. தற்போது 14 ட்ரோன்களின் முன்மாதிரிகள், தகுதிச் சான்றிதழுக்கான சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 100-ஐ தாண்டும் வாய்ப்புள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய திரு.ஜோதிர் ஆதித்ய எம்.சிந்தியா, ட்ரோன் விதிகள் 2021-ன்கீழ், முதல் தகுதிச் சான்றிதழை பெற்ற IoTechWorld Avigation Pvt Ltd-க்கு வாழ்த்துகளை தெரிவித்தார். விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்கீழ் 'குறைந்தபட்ச ஆட்சி, அதிகபட்ச நிர்வாகம்'  என்ற அடிப்படையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். விண்ணப்பம் சமர்ப்பித்த 34 நாட்களுக்குள் ட்ரோனுக்கு முதல் தகுதிச் சான்றிதழ் வழங்குவது இதற்கான முதல்படியாகும் என்றும், மற்ற ட்ரோன் முன்மாதிரிகளுக்கும் விரைவில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகளவில் ட்ரோன்களின் மையமாக மாறும் என்றும் அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக