குடியரசுத் தலைவர் தேர்தல்: சனாதனப் பயங்கரவாதிகளின் அடையாள அரசியல் எனும் சதித்திட்டத்தை முறியடிப்போம்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை வெற்றிபெற வைப்போம்!
ஆந்திரா மற்றும் ஒடிசா முதல்வர்கள் இருவரும் தங்களின் நிலைபாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
உலக வரலாற்றில் இலட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமானவை ஹிட்லரின் நாசிக் கொள்கையும், முசோலினியின் பாசிசக் கொள்கையும் என்பதை உலகம் அறியும். அத்தகைய இனவாதக் கொள்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு வரையறுக்கப்பட்டதுதான் சங்பரிவார்களின் "ஒரேதேசம் - ஒரே கலாச்சாரம் " என்னும் மதவாத - சனாதனப் பயங்கரவாதக் கருத்தியலாகும். அதாவது சனாதனவாதிகள் இங்கே கட்டமைக்க விரும்பும் இந்து ராஷ்டிரம் ஒரே தேசம் என்பது என்பது ஹிட்லரின் ஜெர்மனியையும் முசோலினியின் இத்தாலியையும் தம்முடைய ஆதர்சமாகக் கொண்டதே ஆகும். ஹிட்லரின் இனவெறி ஆட்சியில் எப்படி யூதர்கள் மட்டுமின்றி ஜெர்மானியர்களும் கொடூர வதைகளுக்கு ஆளானார்களோ அதுபோலவே இந்து ராஷ்டிரம் என்பதும் இங்கே சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி இந்துக்களுக்கும் பேராபத்தாகவே முடியும். அத்தகைய இந்து ராஷ்டிரத்தை அமைத்திட அனைத்துத் தளங்களிலும் தமக்கு ஆதரவானவர்களை ஆங்காங்கே சனாதனிகள் தேடித்தேடி முதன்மையான அதிகார மையங்களில் அமர்த்தி வருகின்றனர்.

