செவ்வாய், 5 அக்டோபர், 2021

உ.பியில் பாஜக வன்முறை: இந்திய உள்துறை இணை அமைச்சர் மகனின் கார் மோதியதில் விவசாயிகள் பலர் பலி! முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்!.- தொல்.திருமாவளவன்


 உ.பியில் பாஜக வன்முறை:  இந்திய உள்துறை இணை அமைச்சர் மகனின் கார் மோதியதில் விவசாயிகள் பலர் பலி! முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3.10.2021 இந்திய ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ,       அஷிஸ்  மிஸ்ரா, துணைமுதல்வர் கேசவ் மரியா பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றபோது அப்பகுதியைச் விவசாயிகள் அவர் வரும் வழியில் கறுப்புக்கொடி காட்டும் அறப்போரில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கே திரண்டிருந்த விவசாயிகளின் கோரிக்கையைக் கேட்க முயற்சிக்காமல், பொறுப்புடன் அவர்களை எதிர்கொள்ள இயலாமல், அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியால் காட்டுமிராண்டித்தனமாக அவர்கள் மீது தனது காரை மோதச்செய்ததில் அவ்விடத்திலேயே நான்கு விவசாயிகள் நசுங்கிச் செத்துள்ளனர். அதனையொட்டி வெடித்த வன்முறையில் மேலும் ஐந்துபேர் பலியாகியுள்ளனர். இந்தக்கொடூரம் இந்திய நாட்டையே  உலுக்கியுள்ளது.

மையத்திலும் மாநிலத்திலும்  ஆட்சியதிகாரத்திலிருக்கிறோம் என்கிற ஆணவத்தின் குரூரத்தாண்டவமே இது. விவசாயிகளுக்கெதிரான  பாஜக'வினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். 

பாஜக அரசின்  3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக, 

உலக வரலாற்றில் இத்தகைய போராட்டம் இதுவரை நடந்ததில்லை என்கிற வகையில், தலைநகர் தில்லியை  முற்றுகையிட்டு தொடர்ந்து இலட்சக்கணக்கான விவசாயிகள் அறவழியில் போராடி  வருகின்றனர். தற்போது இப்போராட்டம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமடைந்துள்ளது. அந்தவகையில், லக்கிம்பூர் என்னுமிடத்திலும் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவ்வழியே அப்போது ஆஷிஷ் மிஷ்ரா சென்ற வண்டி மற்றும் அவரோடு வந்தவர்களின் வண்டிகள் விவசாயிகளின் மீது மோதியதில் இத்தனை சாவுகள் நடந்துள்ளன. இது எதிர்பாராமல் நடந்தேறிய விபத்து அல்ல; அதிகார ஆணவத்தில் அரங்கேறிய படுகொலை! 

இக்கொடூர  சம்பவத்தில்

பலியான குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகச்  சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி  அவர்களைக் கைது செய்ததையும் மற்ற மாநில முதல்வர்கள் மற்றும் தலைவர்களை உத்தரப்பிரதேச மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்காமல் தடை விதித்ததையும் விசிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். 

இந்நிலையில்,  இந்திய ஒன்றிய அரசு, மக்களுக்கு விரோதமான, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான, 

மூன்று வேளாண் சட்டங்களையும்  திரும்பப் பெற வேண்டுமென்றும் இந்தக் கொடூர சம்பவத்திற்கு காரணமான ஒன்றிய இணை அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமென்றும் உபி அரசை வலியுறுத்துகிறோம். அத்துடன், விவசாயிகள் உள்ளிட்ட ஒன்பது பேர் பலியானதற்கு பொறுப்பேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான 

பா ஜ க அரசு உடனடியாக பதவி விலக வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக