சனி, 30 அக்டோபர், 2021

‘நீலப் பொருளாதாரத்திற்கு‘ ஆய்வு செய்வதற்கான ஆழ்கடல் இயக்கத்திற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும்.- டாக்டர் ஜிதேந்திர சிங்


 மத்திய அறிவியல் & தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனிப் பொறுப்பு) மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், சென்னை துறைமுகத்தில் மத்திய புவி அறிவியல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய கடலியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கப்பலான “சாகர் நிதி” கப்பலை முன்னோடி விஞ்ஞானிகளுடன் இணைந்து பார்வையிட்டார்.

கடல்சார் வளங்களை ஆய்வு செய்தல் மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பங்கேற்பு, குறிப்பாக ஆழ்கடல் இயக்கத்தைச் செயல்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். புவி – அறிவியல், வானிலை மற்றும் கடலியல் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவல்ல இந்தக் கப்பல், 10,000 கடல் மைல்கள் (19,000 கிலோ மீட்டர்) தொலைவுக்கு 45 நாட்கள் வரை பயணம் செய்யக் கூடிய திறன் பெற்றதாகும்.

தமது அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை நிறைவேற்றுவதில் அளித்து வரும் ஒத்துழைப்புக்காக சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார். இந்தியாவின் அதிநவீன ஆராய்ச்சிக் கப்பலான ஓஆர்வி சாகர் நிதியில் சிறிது தூரம் பயணம் செய்த அவர், அந்த கப்பலின் அறிவியல் & தொழில்நுட்ப செயல் விளக்கத் திறனை ஆய்வு செய்தார். சாகர் நிதி கப்பல் 11 சூறாவளிகள் மற்றும் 73 கடல் மைல் / மணி வேகத்துடன் கூடிய காற்று மற்றும் இயற்கையின் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, 66 டிகிரி S அட்ச ரேகை வரை (அண்டார்டிக் கடலில்), இந்தியக் கொடியுடன் சென்றடைந்த முதல் கப்பல் என்ற சிறப்பைப் பெற்றிருப்பதாக அமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கப்பலின் கியர், உந்து விசை மற்றும் கட்டுப்பாட்டு சாதனங்கள் போன்ற வசதிகள் குறித்தும் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் எடுத்துரைக்கப்பட்டது. நீலப் பொருளாதாரத்தை அடைய, ஆழ்கடல் வளங்களை கண்டறிந்து பயன்படுத்துவதற்கு இது போன்ற தொழில்நுட்பங்களைப் பறைச்சாற்றும் கப்பல்கள் அவசியம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். கடல்சார் வளங்கள் பற்றிய அறிவாற்றலை மேம்படுத்துவதில் இது போன்ற ஆராய்ச்சிக் கப்பல்களின் மதிப்புமிக்க பங்களிப்பை பாராட்டிய அவர், சாகர் நிதி, சாகர் மஞ்சுஷா, சாகர் தாரா மற்றும் சாகர் அன்வேஷிகா கப்பல்களையும் ஆய்வு செய்தார்.

ஆழ்கடல் இயக்கம் பற்றி குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய அமைச்சரவையால் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட இத்திட்டம், புவி அறிவியல் துறையால் ரூ.4077 கோடி மதிப்பீட்டில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட இருப்பதாக கூறினார். ஆழ்கடல் இயக்கம், பல்வேறு அமைச்சகங்களால், கடலுக்கு அடியில் 6000 மீட்டர் ஆழம் வரை மனிதர்களுடன் செல்லக் கூடிய நீர்மூழ்கி கலனை உருவாக்குவது, ஆழ்கடல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, கடலடி தாதுவளம், கடல்சார் உயிரி பன்முகத்தன்மை, கடலியல் ஆய்வுகளுக்கான ஆராய்ச்சிக் கப்பலைக் கட்டுவது, கடல்சார் உயிரியல் துறையில் திறன் உருவாக்கம் உள்ளிட்ட, பல்வேறுபட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நீலப் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், கடலில் உள்ள தாதுப்பொருட்கள், உயிரி பன்முகத்தன்மை, எரிசக்தி, நன்னீர் இருப்பை ஆய்வு செய்வதற்கான ஆழ்கடல் இயக்கத்திற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும் டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். 3 நபர்களுடன் ஆழ்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லக் கூடிய மனிதர்களுடன் கூடிய நீர்மூழ்கி கலனை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்ட மத்திய அமைச்சர், அறிவியல் சென்சார் மற்றும் பிற கருவிகள் இதில் இடம் பெறும் என்றும் தெரிவித்தார். இந்த இயக்கத்திற்கான உதிரிப் பாகங்கள் தயார் செய்யும் பணி இந்த ஆண்டில் (2021) தொடங்கும்.

தட்பவெப்ப நிலை, பருவநிலை, ஆழ்கடல் மற்றும் நிலநடுக்கவியல் சேவைகளை வழங்குவதை தலையாய பணியாக கொண்டு செயல்படும் புவி அறிவியல் அமைச்சகம், உயிர்வாழ் மற்றும் உயிரற்ற ஆதாரங்களை பயன்படுத்தும் நோக்கிலும் இயங்கி வருகிறது. தேவைக்கேற்ற கடலியல் தொழில்நுட்பங்கள் மற்றும் கடலியல் ஆய்வுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்குதல் மற்றும் ஆழ்கடல் தாதுவளங்கள் மற்றும் எரிசக்தி வளத்தை கண்டறிவது உள்ளிட்ட பணிகளிலும் புவி அறிவியல் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. சென்னையில் உள்ள தேசிய கடலியல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT), ஆழ்கடலில் உள்ள உயிர்வாழ் மற்றும் உயிரற்ற ஆதாரங்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

லட்சத்தீவில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி அதனை செயல்படுத்துவது, கடலிலிருந்து எரிசக்தி வளங்களை பிரித்தெடுப்பது, புதுச்சேரி கடற்கரை புனரமைப்பு, ரிமோட் மூலம் இயங்கக் கூடிய கடலடி ஆய்வுக்கலன் (ROV) மற்றும் கடலுக்கு அடியில் 5500 மீட்டர் ஆழம் வரை துரப்பனப் பணி மேற்கொள்வதற்கான சாதனங்களை உருவாக்குதல் போன்ற பணிகளில் NIOT வெற்றி பெற்றுள்ளது. பருவநிலைகளை முன் கூட்டியே கணித்தல், புயலை பின்தொடர்தல், சுனாமி முன்னெச்சரிக்களுக்கு உதவக் கூடிய தரவுகளை சேகரிப்பதற்கான, நங்கூரமிட்ட தரவு மிதவைகளை பணியில் ஈடுபடுத்தி அவற்றை பராமரிக்கும் பணியையும் NIOT மேற்கொண்டுள்ளது.

ஆழ்கடல் ஆராய்ச்சி மற்றும் ஆழ்கடல் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு ஆராய்ச்சிக் கப்பல்கள் மிகவும் அவசியமான சாதனமாகும்.  மத்திய புவி - அறிவியல் அமைச்சகத்திடம் தற்போது சாகர் நிதி, சாகர் மஞ்சுஷா, சாகர் கன்யா, சாகர் சம்பதா, சாகர் தாரா மற்றும் சாகர் அன்வேஷிகா ஆகிய 6 கப்பல்கள் உள்ளன. இந்தக் கப்பல்கள் ஏராளமான கடலியல் ஆய்வுகள் மற்றும் ஆழ்கடல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மிகுந்த கடல்சார் பாரம்பரிய வளங்களை கொண்ட நாடான இந்தியா 2.37 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் கிடைக்கும் அனைத்து உயிர்வாழ் மற்றும் உயிரற்ற வளங்களை பயன்படுத்துவதற்கு சட்ட ரீதியாக பிரத்யேக உரிமையை இந்தியா அனுபவித்து வருகிறது. இவை தவிர, இந்தியப் பெருங்கடலின் மத்தியப் பகுதியில் 75,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் 10,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், சர்வதேச கடல் படுகை ஆணையத்தால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மாங்கனீஸ், கோபால்ட் மற்றும் நிக்கல் ஆகிய தாது வளங்கள் மிகுதியாக உள்ளன. உயிரற்ற மற்றும் உயிர்வாழ் இனங்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ள, ஆழ்கடலில் துரப்பனப் பணிகளை மேற்கொண்டு அதனை அறிந்து கொள்வது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக