புதன், 20 அக்டோபர், 2021

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டதே! தமிழ்நாடு என்றால் ஒன்றிய அரசுக்கு இளக்காரமா? - கி.வீரமணி

 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டதே!

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மூழ்கடிக்கப்பட்ட கொடுமை!

தமிழ்நாடு என்றால் ஒன்றிய அரசுக்கு இளக்காரமா?

மக்கள் போராட்டம் விரைவில் வெடிக்கும் - எச்சரிக்கை! - கி.வீரமணி


தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தேன் கலந்த சொற்கள் என்னாயிற்று?

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டில், அப்பொழுது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் நாவினிக்க ஒரு தகவலைச் சொன்னார்.

‘‘‘கடற்தாமரை’ என்று ஒரு பெயர் சூட்டப்பட்டு, கடற்கரைப் பாதுகாப்பு, மீனவர்கள் நலன், இனி தமிழ்நாட்டு மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடித் தொழிலை மேற்கொள்ளலாம்; தமிழ்நாடு மீனவர்களுக்கு ஒரு பொற்காலத்தை உருவாக்கும்‘’ என்று எல்லாம் இனிக்க இனிக்கப் பேசினாரே, உறுதிமொழியைத் தாராளமாக வழங்கினாரே, அந்த உறுதிமொழியும், தேன் கலந்த சொற்களும் என்னாயிற்று?

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதில்லை என்றெல்லாம்கூட மார்தட்டிப் பேசினார்களே - ஆனால், நடந்து வருவது என்ன?

அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.எல்.முருகன், இத்துறை இணை அமைச்சராக இருந்து என்ன பயன்?

இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து வன்முறைத் தாக்குதலை நடத்திவருகின்றனர்

கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி  கோடியக்கரைக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சிங்களப் படையினரின் இத்தாக்குதலில் தமிழ்நாடு மீனவர்  படுகாயமடைந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள், ஜூலை  28ஆம் தேதி வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். கோடியக்கரையிலிருந்து தென் கிழக்கில் 5 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிங்களக் கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில் கலைச்செல்வன் என்ற மீனவர் படுகாயமடைந்து நாகை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டார்.

மீன்பிடிக்காலம் முடிந்து 5  மாதங்களில் மட்டும் 12  முறை தமிழ்நாடு மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் தொடர்ந்து படகுகளை சிங்கள குண்டர்களின் உதவியோடு சேதப்படுத்துவது, வலைகளை அறுத்துவிடுவது, மீன்களைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்வது என்பது தொடர்கதையாக நடந்துவருகிறது.

நடந்த கொடுமை சொல்லுந்தரமன்று!

கடந்த திங்கள்கிழமையன்று (18.10.2021) நடந்த கொடுமை சொல்லுந்தரமன்று!

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ராஜ்கிரண் (வயது 30), சுகந்தன் (வயது 23), சேவியர் (வயது 32) ஆகிய மூன்று பேரும் விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் 3 பேரும், மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படை கப்பல், ராஜ்கிரண் உள்ளிட்ட 3 பேர் சென்ற விசைப்படகு மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் விசைப்படகு சேதமடைந்ததால், தண்ணீர் படகிற்குள் புகுந்தது. இதனால் சிறிது நேரத்தில் படகு கடலுக்குள் மூழ்கி விட்டது. இதையடுத்து அந்த படகில் இருந்த 3 பேரும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து இலங்கைக் கடற்படையினர், தண்ணீரில் தத்தளித்த சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய இருவரையும் மீட்டு எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தங்கள் படகில் ஏற்றிக்கொண்டனர். ஆனால், கடலில் தத்தளித்த ராஜ்கிரண் மட்டும் காணாமல் போனார்.

இதைத்தொடர்ந்து இலங்கைக் கடற்படையினர் தாங்கள் மீட்ட 2 மீனவர்களையும் சிறைபிடித்து இலங்கையிலுள்ள காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து இலங்கை அரசு, இந்திய அரசுக்குத் தகவல் கொடுத்தது. இதுபற்றி தெரியவந்ததையடுத்து கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் மீனவர்களிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் காணாமல் போன மீனவரின் கதி என்ன? என்று தெரியாமல் மீனவர்கள் திகைத்துப் போய் நின்றனர்.

தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டாராம்!

இதையடுத்து அப்பகுதிக்கு அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் காணாமல் போன மீனவரை தேடுவதற்காக கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து 2 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.

இந்நிலையில் காணாமல் போன ராஜ்கிரண் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டதாகவும், அவரின் உடலை இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றி அங்கு கொண்டு சென்றதாகவும் மீனவர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு, தமிழர்கள் என்றால், ஒன்றிய அரசுக்கு இளக்காரம் - மாற்றாந்தாய் மனப்பான்மைதானா?

இந்தக் கொடுமைக்கு என்னதான் முடிவு?

கடந்த காலங்களில் எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளோம் - மாநாடுகளையும் நடத்தியுள்ளோம்.

ஆனால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் குறையவில்லை. எந்த அளவுக்குச் சென்றுள்ளனர் என்றால், கல்லால் அடித்துத் தாக்கும் அளவுக்குத் தமிழக மீனவர்கள் மீது இலங்கைப் படையினருக்கு வெறுப்பும், பகைமையும் தலைதூக்கி நிற்கின்றன.

இந்த லட்சணத்தில், இலங்கை இராணுவத்திற்குக் கூட்டுப் பயிற்சி, கடன் உதவிகள் என்பன எல்லாம் சாங்கோபாங்கமாக இன்னொரு பக்கம் நடந்துகொண்டுள்ளன.

இன்றுகூட (20.10.2021) உ.பி. மாநிலம் குஷி நகர் விமான நிலைய திறப்பு விழாவில் இலங்கைப் பிரதமர் ராஜபக்சேவின் மகனும், கலாச்சாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான நமல் ராஜபக்சே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார் என்பது எல்லாம் எதைக் காட்டுகிறது?

போராட்டத்தை அறிவிப்போம்!

இந்த நிலையில், தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கும் குரலும், கண்டனமும்தான் ஒன்றிய அரசை வழிக்குக் கொண்டு வர செய்ய முடியும் - இலங்கை அரசுக்கு எச்சரிக்கையாகவும் இருக்க முடியும். தமிழ்நாடு அரசும் இதில் உரிய கவனம் செலுத்தும் - செயல்படும் என்பதிலும் அய்யமில்லை.

உரிய வகையில் போராட்டத்தையும் அறிவிப்போம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக