சனி, 16 அக்டோபர், 2021

போர்க்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் நிகழ்த்திய சிங்களப் படையினருடனான ஒத்துழைப்பை அதிகரிப்பதையும், அந்த நாட்டுப் படையினருக்கு பயிற்சி அளிப்பதையும் இந்திய அரசு கைவிட வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 போர்க்குற்றவாளி இலங்கையுடன் ராணுவ

ஒத்துழைப்பை இந்தியா அதிகரிப்பதா? - DR.S.ராமதாஸ்

இலங்கையுடனான இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், சிங்கள  இராணுவத்தினருக்கு அதிக எண்ணிக்கையில் பயிற்சியளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இலங்கை  இராணுவத்திற்கு பயிற்சிகளையும், உதவிகளையும் அளிப்பது ஈழத்தமிழர்களுக்கு செய்யப்படும் துரோகமாகும்.

இலங்கையில் நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள இந்திய இராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே, அந்நாட்டின் அதிபர் கோத்தபாய இராஜபக்சே, பிரதமர் மகிந்த இராஜபக்சே, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்புகளின் போது இந்தியா - இலங்கை இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டதாகவும், அதன் ஒரு கட்டமாக, இந்தியாவில் ஆண்டுக்கு 1000 சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமின்றி, கூடுதலாக 50 இராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சியை அளிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. இது ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு எதிரானதாகவே அமையும்.

உலகமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சூழலில், உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்து தான் செயல்பட்டாக வேண்டும். ஒவ்வொரு நாடும் அண்டை நாடுகளுக்குத்  தேவையான உதவிகளை செய்ய வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், ஒரு நாடு அதற்கு வழங்கப்பட்ட உதவியை தவறாக பயன்படுத்தும் என்று தெரிந்தால், அந்த நாட்டுக்கு உதவாமல் இருப்பது தான் அறம். அவ்வாறு இராணுவரீதியாக உதவக்கூடாத நாடுகள் பட்டியலில் மிகவும் முக்கியமானது இலங்கை ஆகும்.

இலங்கைக்கு மருத்துவ ரீதியாகவும், மனிதநேய அடிப்படையிலும் உதவிகளைச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஒன்றரை லட்சம்  அப்பாவித் தமிழர்களை கொடூரமாக படுகொலை செய்த சிங்களப் படையினருக்கு உதவிகள் அளிக்கப் பட்டால், அது மீண்டும், மீண்டும் ஈழத்தமிழர்களை கொல்லவும், ஒடுக்கவும் மட்டும் தான் பயன்படும்.

இலங்கையில் அடிப்படை மனித நேயம் கூட இல்லாத சிங்களப் படைகள் அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். சிங்களப் படையினர் போர்க்குற்றங்களை இழைத்தது உண்மை என்பதை விசாரணை மூலம் உறுதி செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை இப்போது திரட்டி வருகிறது. இதுவரை 1.20 லட்சத்துக்கும் கூடுதலான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியிருக்கிறது. இலங்கைப் போர் முடிவடைந்து 12 ஆண்டுகள் ஆகியும் அங்கு மனித உரிமை மீறல் தொடருவதாகவும்,  போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் குற்றஞ்சாட்டியிருக்கிறது. இன்றளவிலும்  இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்; தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் நீடிக்கின்றன.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் நிகழ்த்தியவர்களின் கைகளில் தான் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பு உள்ளது. இலங்கை இறுதிப் போரின் போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே தான் இப்போது பிரதமர்; அப்போது பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த  கோத்தபாய ராஜபக்சே தான் இப்போது அதிபர்; இலங்கை இறுதிப் போரில் 58-ஆவது படையணியின் தளபதியாக இருந்து அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ஷவேந்திர சில்வா தான் இப்போது  இலங்கையின் போர்ப்படைத் தளபதியாக இருக்கிறார். அவர் செய்த கொடியக் குற்றங்களுக்காக அமெரிக்காவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இத்தகைய பின்னணி கொண்டவர்களால் இயக்கப்படும்  இலங்கை ராணுவத்துக்கு பயிற்சியும், உதவிகளும் வழங்கும் போது அவை ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தியா வழங்கும் ராணுவ உதவிகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் தான் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் நிலவுகிறது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

எனவே, போர்க்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் நிகழ்த்திய சிங்களப் படையினருடனான   ஒத்துழைப்பை அதிகரிப்பதையும், அந்த நாட்டுப் படையினருக்கு பயிற்சி அளிப்பதையும் இந்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, இலங்கையில் போர்க்குற்றங்களை புரிந்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதற்கான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முயற்சிகளுக்கு துணை நிற்க வேண்டும் என  இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்; அதன்மூலம் ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக