வியாழன், 28 அக்டோபர், 2021

உளவு பார்ப்பது - குடிமக்களின் தனிப்பட்ட அந்தரங்கப் பிரச்சினைகளில் தலையிடுவது சட்ட விரோதமே! உச்சநீதிமன்றம் உரிய முக்கியத்துவம் கொடுத்து விசாரிப்பது வரவேற்கத்தக்கது!.- கி.வீரமணி

 உளவு பார்ப்பது - குடிமக்களின் தனிப்பட்ட அந்தரங்கப் பிரச்சினைகளில் தலையிடுவது சட்ட விரோதமே!

உச்சநீதிமன்றம் உரிய முக்கியத்துவம் கொடுத்து விசாரிப்பது வரவேற்கத்தக்கது!

நீதிமன்றத்தின்மீது மக்களின் நம்பிக்கையை ஆழப்படுத்தும்; 

ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் பாதுகாக்கப்படவேண்டும். - கி.வீரமணி

நமது நீதிமன்றங்கள்தான் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உதவும் முக்கிய தளங்கள் ஆகும்.

பாதிக்கப்படும் மக்களைக் காத்து  - அரண் செய்யும் மகத்தான கடமை

நமது அரசமைப்புச் சட்டத்தின்படி ஒவ்வொரு குடிமகன் - மகளது வாழ்வுரிமையும், கருத்துச் சுதந்திர உரிமையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட முடியாத ஒரு சிறப்பான உரிமையாகும்.

அவற்றிற்கு ஆபத்து ஏற்படும்போது, அதிலிருந்து பாதிக்கப்படும் மக்களைக் காத்து  - அரண் செய்யும் மகத்தான கடமை - ஜனநாயக நாட்டில் - பெரிதும் நீதிமன்றங்களையே, அதிலும் குறிப்பாக உச்சநீதிமன்றத்தையே சாரும்.

உளவு பார்த்த செய்தி- ஊடகம்மூலம் வெளிச்சத்திற்கு வந்தது

அவ்வகையில், நமது நாட்டின் பத்திரிகையாளர்கள், சமூகநலவாதிகள், வழக்குரைஞர்கள், டாக்டர்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோரை இஸ்ரேல் நாட்டு என்.எஸ்.ஓ. நிறுவனம்மூலம் நவீன சக்தி வாய்ந்த பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, (சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களை) உளவு பார்த்த செய்தி- அதிர்ச்சி தரும் வகையில் வெளியே ஊடகம்மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்கள் ஹிந்து என்.ராம், சசிகுமார், எடிட்டர்ஸ் கில்டு மற்றும் சில தனி நபர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம்- அதன் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் என்.வி.இரமணா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்த ஒப்புக்கொண்டது.

இதுபற்றி விசாரித்து வரும் உச்சநீதிமன்றத்தில், ஒன்றிய அரசு உளவு பார்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என மறுத்ததோடு, இதன்  விவகாரம் தேசப் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்பதால், இது தொடர்பான விவகாரங்களை பிரமாணப் பத்திரத்தில் (Affidavit) விரிவாக தாக்கல் செய்ய விரும்பவில்லை என்று ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல்  துஷார் மேத்தாமூலம் எடுத்துரைத்தது. 

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு

இந்த நிலையில், தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் என்.வி.இரமணா  தலைமையிலான (ஜஸ்டீஸ் சூர்யகாந்த், ஜஸ்டீஸ் ஹீமா கோலி) அமர்வுமுன் மனுக்கள் நேற்று (27.10.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிறப்பித்த உத்தரவில் கூறியிருக்கும் கருத்துகள் பின்வருமாறு:

‘‘1. பெகாசஸ் உளவு விவகாரத்தை உலகின் பற்பல நாடுகளும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளன. இது தொடர்பான உண்மைகளை வெளியே கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்க முடியாது.

2. உளவு பார்ப்பது குடிமக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் அவர்களின் அந்தரங்க உரிமைகளைப் பாதிக்கும் வகையில் உள்ளதாகக் குற்றம் சாற்றப்பட்டுள்ளது. இத்தகைய புகார்களைப் புறக்கணித்துவிட்டு, நீதிமன்றம் அமைதியாக இருக்க முடியாது.

3. பெகாசஸ் மென்பொருள்மூலம் உளவு பார்த்ததாகக் கூறப்படும் புகார் உண்மையா? இல்லையா? என்ற கேள்விக்கு ஒன்றிய அரசிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் வெறும் 2 பக்க பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்த ஒன்றிய அரசு, விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய மறுத்துவிட்டது.

4. விரிவான அறிக்கை தாக்கல் செய்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும் என்ற ஒன்றிய அரசின் வாதம் ஏற்கத்தக்கதல்ல.

5. தொழில்நுட்பம் என்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்பது உண்மைதான்; ஆனால், அது தனி நபரின் அந்தரங்க உரிமை, கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக அரசின் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது.

6. எனவே, உண்மைகளை ஆராய்ந்து வெளிக்கொணர - அதாவது பெகாசஸ் மென்பொருள்மூலம் உளவு பார்த்ததாக எழுந்துள்ள புகார்கள் குறித்து ஆய்வு செய்ய சுதந்திரமான தொழில்நுட்ப நிபுணர் குழு அமைக்கப்படுகிறது.

இக்குழுவை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் கண்காணிப்பார். விரைவாக அக்குழு ஆய்வு செய்து, 8 வாரங்களுக்குள் அறிக்கையைத் தரும். அதுவரையில் 8 வாரங்களுக்கு இவ்வழக்குத் தள்ளி வைக்கப்படுகிறது.

7. ஆய்வுக் குழுவான இதில் நீதிபதிக்கு மேனாள் அய்.பி.எஸ். அதிகாரி அலோக் ஜோஷி, பன்னாட்டு தொழில்நுட்ப ஆணைய துணைக் குழுத் தலைவர் சந்தீப் ஓபராய் ஆகியோரும் மற்றும் சிலரும், நிபுணர்களும் உதவிட உள்ளனர்.

8. இந்தியர்களின் கைப்பேசி அல்லது இதர கருவிகளில் உள்ள தகவலைப் பார்க்கவோ, உரையாடலை ஒட்டுக் கேட்கவோ மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? 

அப்படி பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தியிருந்தால், பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.

9. கடந்த 2019 ஆம் ஆண்டு பெகாசஸ் மூலம் இந்தியர்கள் சிலரின் வாட்ஸ்-அப் கணக்குகள் ‘ஹேக்‘ செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அவற்றின் மீது ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

ஒன்றிய, மாநில அரசுகள், அரசு அமைப்புகள் சார்பில் பெகாசஸ் மென்பொருள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்யவேண்டும்.

10. அரசு அமைப்புகள் பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி இருந்தால், எந்த சட்டம் அல்லது விதிகளின்கீழ்  - அது பயன்படுத்தப்பட்டது என்பதுபோன்ற விவரங்களையும் சேகரிக்க வேண்டும்.

- இவ்வாறு மிகவும் சிறப்பான வகையில் இந்த உச்சநீதிமன்றத்தின் ஆணை அமைந்துள்ளது;  46 பக்கங்கள் கொண்ட நீதிபதிகளின் ஆணை வரலாற்றுச் சிறப்புமிக்கது.

மக்களுக்கு நீதிமன்றங்கள்மேல் உள்ள நம்பிக்கையை ஆழப்படுத்தும் அற்புதமான ஆணை!

75 ஆண்டுகால சுதந்திரத்தின் நீண்ட ஆளுமை வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத்தக்க - மக்களுக்கு நீதிமன்றங்களின்மேல் உள்ள நம்பிக்கையை ஆழப்படுத்தும் அற்புதமான ஆணை (A land mark decision) என்றே வரவேற்றுக் கூறவேண்டும்!

மக்களாட்சியில் குடிமக்களின் உரிமை நாதியற்றது அல்ல; கேள்வி கேட்க ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி வழங்கும் நீதிமன்றங்கள் துணை நிற்கும் என்று காட்டி, எந்த இறையாண்மை குடிமக்களிடம் உள்ளதோ, அதற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - பாதுகாப்பது அதன் தலையாய கடமை; ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் இந்தப் பாதுகாப்புக்குரியவை என்பது இதன்மூலம் புரிய வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக