சனி, 16 அக்டோபர், 2021

அமெரிக்க கடற்படை தலைவர் அட்மிரல் மைக்கேல் கில்டே மும்பையில் உள்ள இந்திய கடற்படை மேற்கு தலைமையகத்திற்கு வருகை


 அமெரிக்க கடற்படை செயல்பாடுகளின் தலைவர் அட்மிரல் மைக்கேல் கில்டே மும்பையில் உள்ள இந்திய கடற்படையின் மேற்கு பகுதி தலைமையகத்திற்கு 2021 அக்டோபர் 15 அன்று வருகை புரிந்தார். திருமதி லிண்டா கில்டே மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் அவருடன் உடன் வந்தனர்.

இந்திய கடற்படையின் மேற்கு பகுதி தலைமையகத்தின் தளபதி வைஸ் அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் இதர அலுவலர்களுடன் அட்மிரல் மைக்கேல் கில்டே உரையாடினார்.

இரு நாடுகள் மற்றும் அவற்றின் கடற்படைகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கடல் புறத்தில் எழும் சவால்களைச் சமாளித்தல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒத்துழைப்பு மற்றும் இயங்குதிறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

பிராந்திய பாதுகாப்பு இயக்கவியல் மற்றும் மேற்கு கடற்படை தளத்தின் செயல்பாடுகள் பற்றி அட்மிரல் மைக்கேல் கில்டேவுக்கு விரிவாக விளக்கப்பட்டது. குறிப்பாக, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்தை நட்பு நாடுகளுக்கு வழங்குதல், கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கைகள், கடல் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்பை, குறிப்பாக இந்திய-அமெரிக்க கூட்டுறவை, வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து அவருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

நாட்டில் ஆக்சிஜன் தேவையை எதிர்கொள்ளவும், கொவிட்-19-க்கு எதிரான அதன் போரை வலுப்படுத்தவும் ஆபரேஷன் சமுத்திர சேது II மூலம் இந்திய கடற்படை கப்பல்கள் ஆற்றிய முக்கியப் பங்கு குறித்து விளக்கப்பட்டது.

தெற்கு கடற்படை தளம் மற்றும் இந்திய கடற்படையின் பல்வேறு பயிற்சி அமைப்புகளின் அதிகாரிகளிடம் ‘போரின் எதிர்காலம்’ குறித்து காணொலி மூலம் அட்மிரல் கில்டே உரையாற்றினார். மசாகன் டாக் லிமிடெட்டையும் அவர் பார்வையிட்டார்.

இந்திய கடற்படையின் மேற்கு பகுதி தலைமையகத்தை பார்வையிட்ட திருமதி லிண்டா கில்டே, இந்திய கடற்படையின் பெண் அதிகாரிகளுடன் உரையாடினார்.

அமெரிக்க கடற்படை செயல்பாடுகளின் தலைவரின் வருகை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான தொடர்ச்சியான உரையாடல்களில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இரு நாடுகளுக்கு இடையேயான விரிவான உலகளாவிய கூட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் இது அமைந்திருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக