நாம் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாம் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 ஜூன், 2021

‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒளிபரப்பை நிறுத்தாவிடில் அமேசான் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் உலகத்தமிழர்கள் புறக்கணிப்போம்! - சீமான் கடிதம்


 ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒளிபரப்பை நிறுத்தாவிடில் அமேசான் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் உலகத்தமிழர்கள் புறக்கணிப்போம்! – அமேசான் பிரைம் தலைமை அதிகாரிக்கு சீமான் கடிதம்

உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பெரும் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜூன் 04, 2021 அன்று உங்களது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில், ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடர் வெளியாகி, தமிழர்களுக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியுள்ளது.

சனி, 5 ஜூன், 2021

தமிழர்களுக்கெதிரான திட்டமிட்ட வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரைத் தடைசெய்யச் சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும் களமிறங்கி அதனைத் தடுத்து நிறுத்துவோம்! – சீமான் உறுதி


 தமிழர்களைச் சீண்டும் நோக்கில் திட்டமிட்ட வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரில் வீரம்செறிந்த ஈழ விடுதலைப்போராட்டத்தை மலினப்படுத்தி, கொச்சைப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருக்கிற சித்தரிப்புகளும், காட்சியமைப்புகளும் குறித்துக் கேள்வியுற்றுப் பேரதிர்ச்சியடைந்தேன். அறத்தின் வடிவமாய், ஒழுக்கத்தின் உருவமாய், கண்ணியத்தின் தோற்றமாய்க் களத்தில் நின்று, இலட்சியத்தை முழுதாய் நெஞ்சிலேந்தி, நச்சுக்குண்டுகளின் கொடும் தாக்குதல்களுக்கு ஆட்பட்டப்போதும் தடம்பிறழாது தனது பாதை மாறாது, மரபுவழிப்போரையே முன்னெடுத்து, இறுதிவரை போர் மரபுகளையும், மனித மாண்புகளையும் கடைப்பிடித்துச் சமரசமற்று சண்டையிட்ட தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு இராணுவமான தமிழீழ விடுதலைப்புலிகளை மிக மோசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் தோற்றம் கொள்ளச்செய்து காட்சிப்படுத்தியுள்ள இத்தொடர் மிகுந்த உள்நோக்கம் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது என்பது மிகத்தெளிவாக விளங்குகிறது. தமிழர்களின் தாயகத்தை மொத்தமாய் ஆக்கிரமித்து, ஆதிக்கம் செய்து, அழித்தொழித்த அரசப்பயங்கரவாதிகளான சிங்கள ஆட்சியாளர்களின் குரல் போல ஒலித்து, தமிழர்களை மிகக்கீழ்த்தரமாகக் காட்டி, போர்வெறிக் கொண்ட பயங்கரவாதிகளாவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க முற்படும் வகையில் இணையத்தொடரை உருவாக்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

செவ்வாய், 7 ஜூலை, 2020

தாத்தா இரட்டைமலை சீனிவாசனாருக்கு அவருடைய பிறந்தநாளான இன்று நாம் தமிழர் கட்சி புகழ்வணக்கத்தை செலுத்துவதில் உவகை கொள்கிறது. - சீமான்



இங்கிலாந்து நாட்டின் தலைநகர் இலண்டன் மாநகரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து  மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரித்தானிய நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைத்திருந்தார்.

 ஒவ்வொரு பிரதிநிதியும் தம்மை அறிமுகப்படுத்தி மன்னருடன் கைக்குலுக்கிக் கொண்டனர். ஒரே ஒரு மனிதர் மட்டும் கைகுலுக்காமல் தன் கையை இழுத்துக் கொண்டார், திகைத்து நின்ற மன்னர், ஏன் ?- என்று காரணம் கேட்டார். அப்போது “நான், எங்கள் நாட்டில் ஒரு தீண்டத்தகாதவன்; என்னை நீங்கள் தொடக்கூடாது, நான் இந்தியாவில் தீண்டப்படாத சமுதாயத்திலிருந்து வந்தவன்” என்று கூறினார். தாம் அணிந்திருந்த கோட்டில், 'தீண்டப்படாதவன்’ என்று எழுதி மாட்டிக் கொண்டிருந்தாராம். மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் கை குலுக்க முனைந்தபோது,  மறுத்து, தன்னைத் தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்ற நிலை உள்ளதை உணர்த்தினார்.

 ஆனால், மன்னரோ அவரை அருகே அழைத்து, கை குலுக்கினார். அப்போது மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் “உங்கள் நாட்டில் இப்படிப்பட்டவர்கள் யாராவது கீழே விழுந்துவிட்டால் கூடத் தூக்கிவிட மாட்டார்களா? அவர்கள் சாதியின் பெயரால் அப்படியே கிடக்கத்தான் வேண்டுமா?”-என்று விழி பிதுங்க வினாத் தொடுத்தார்.

செவ்வாய், 17 மார்ச், 2020

நீதித்துறையின் சுதந்திர, சார்பற்ற தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல் ! - சீமான் கண்டனம்.


முன்னாள் நீதிபதிகளுக்கு ஓய்வுக்கு பின் பதவி. நீதித்துறையின் சுதந்திர, சார்பற்ற தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல் ! - சீமான் கண்டனம்.

இந்தியாவின் சனநாயகத்தைக் கட்டிக்காக்கும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகச் செயல்பட்டு ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் ரஞ்சன் கோகாய் அவர்களை மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அரசு நியமனம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்நாள் சனநாயகத்தின் மூன்று தூண்களில் ஒன்றான நீதித்துறையின் சுதந்திர தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய கருப்பு நாள்!

சட்டமன்றங்களும், பாராளுமன்றங்களும் எதேச்சதிகாரப்போக்கோடு செயல்படும்போதெல்லாம் மக்களின் குரலாகவும், சட்டத்தை நிலைநாட்டும் அரணாகவும் விளங்குபவை நீதிமன்றங்கள். அவற்றின் தன்னாட்சியுரிமையே இந்தியாவின் சனநாயகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கச் செய்கிறது. அத்தகைய நீதித்துறையின் நம்பகத்தன்மையைக் குலைத்து, மக்களின் நம்பிக்கையை முற்றிலும் சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிற இச்செயல் நீதித்துறைக்கு ஏற்பட்டிருக்கிற பெரும் இழுக்காகும்.

சனி, 7 மார்ச், 2020

உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகள்! பெண்மை போற்றுதும்! பெண்மை போற்றுதும்! - செந்தமிழன் சீமான்


உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!
பெண்மை போற்றுதும்! பெண்மை போற்றுதும்! - செந்தமிழன் சீமான்

‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!’ என்று பெண்களைப் போற்றிக் கொண்டாடுகிறார் கவிமணி தேசிய விநாயகம். ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று பெண்களின் பேராண்மையைப் போற்றித் தொழுகிறார் பெரும்பாவலர் சுப்பிரமணிய பாரதி.

‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!’ என்று பெண்ணிய விடுதலைக்குச் சங்கநாதம் எழுப்புகிறார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். ‘அடிமைத்தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும்’ என் அறச்சீற்றமுருகிறார் ஐயா பெரியார்.

புதன், 5 பிப்ரவரி, 2020

சனி, 25 ஜனவரி, 2020

தாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான்


தாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்

மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றக்கருவி அல்ல. மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் அடையாளம். ஒரு தேசிய இனத்தின் இயல்புகளை வரையறுக்கும் ரசியப் புரட்சியாளர் ஸ்டாலின், மொழி என்கின்ற காரணியைத்தான் முதன்மையானக் குணாதிசயமாகக் கொண்டு தேசிய இனத்தை வரையறுத்தார்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

செவ்வாய், 16 ஜூலை, 2019

புதிய கல்விக்கொள்கைக் குறித்துப் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா.? - சீமான் சவால்

புதிய கல்விக்கொள்கைக் குறித்த தம்பி சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவின் தலைவர்களும், அதிமுகவின் அமைச்சர்களும் அக்கல்விக்கொள்கை குறித்துப் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா.?  
செந்தமிழன் சீமான் சவால்
(தலைமை ஒருஙகிணைப்பாளர்)
(நாம் தமிழர் கட்சி)


புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தம்பி சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்துப் பேசி அதிலுள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, அது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லையென்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார். 30 கோடி மாணவர்களின் கல்வியுரிமையைப் புதிய கல்விக் கொள்கையின் மூலம் பலிகொடுத்துவிடக் கூடாது என்ற தனது இனமான கோபத்தை அறச்சீற்றமாக வெளிப்படுத்தினார். அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் சிந்திக்கத்தக்கது. நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

கல்வி என்பது மக்களுக்கான மகத்தான சேவை. அதனை விற்பனைப்பண்டமாக மாற்றி, வணிகமாக்கிப் பொருளீட்ட எந்நாளும் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் பல்வேறு மேடைகளில் எப்பொழுதும் முன்வைத்துக் கொண்டிருக்கும் கருத்துகளையே தம்பி சூர்யா பிரதிபலித்திருக்கிறார். கலைஞன் என்பவன் எப்போதும் மக்களுக்கானவன்; அவன் மக்களை மகிழ்விப்பவன் மட்டும் அல்ல; ஒரு துயர் மக்களைச் சூழ்கிறபோது அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுபவனாகவும் இருக்க வேண்டும். அதனைச் செய்வதே ஒரு கலைஞனின் மகத்தான அறம் என்பதை உணர்ந்து, சமூகப் பொறுப்புணர்வோடும், எதிர்காலத் தலைமுறையினர் குறித்த பெருத்த அக்கறையோடும் நெஞ்சுரம் கொண்டு தம்பி சூர்யா பேசியிருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது.

கஸ்தூரி ரெங்கன் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளைக் கொண்டு ‘புதிய கல்விக்கொள்கை’ எனும் பெயரில் மும்மொழிக்கொள்கைத் திட்டத்தின் வாயிலாக இந்தியைத் திணித்திட முற்படுவதும், நாடு முழுமைக்குமுள்ள அரசின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்த வழிவகைச் செய்வதும், மாநிலங்களின் கல்வி உரிமையை முழுமையாகப் பறிக்கும் கொடுஞ்செயலாகும். பல்வேறு விதமான வாழ்வியல் முறைகளையும் , வேறுபட்ட மொழி கலாச்சாரப் பின்புலங்களையும்,பல்வேறு வகையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், மாறுபட்ட நிலவியல் அமைப்புகளும் இருக்கிற இந்நாட்டில் ஒரே மாதிரியான தேர்வுமுறையினைக் கொண்டு வருவது சாத்தியமற்றது என்பது மட்டுமல்லாது சமூக அநீதியும்கூட. ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளையும், அதற்குரிய வசதிகளையும் ஏற்படுத்த முயலாத இந்நாடு ஒரே மாதிரியான தேர்வை மட்டும் நாடு முழுமைக்கும் நடத்த முற்படுவது மிகப்பெரும் மோசடி. 30 கோடி மாணவர்களின் கல்வியுரிமையில் தலையிட்டுக் கல்வியை முழுக்க முழுக்கத் தனியார்வசமாக்குவதும், பாடத்திட்டங்களைப் படிப்படியாக இந்துத்துவமயப்படுத்தும், பாஜகவின் நீண்டகாலத் திட்டங்களான, ‘ஒரே நாடு! ஒரே மொழி! ஒரே மதம்!’ என்பது போன்ற நோக்கங்களைக் கொண்ட தொடர்ச்சியான சதிச்செயல்களின் இன்னொரு வடிவமே இது. கல்வியிலே முதன்மையாகத் திகழுகிற நாடுகள் யாவும் தாய்மொழி வழிக்கல்வியைத் தந்து, அரசே கல்விக்கூடங்களை ஏற்று நடத்தி அந்நாட்டின் அறிவுலகத்தைத் தீர்மானிக்கிறது. ஆனால், இந்நாடு கல்வியை முற்றுமுழுதாக மேட்டுக்குடி மக்களுக்கானதாக மாற்றி வணிகமாக்கிவிட்டது. இத்தகைய அநீதிகளைத்தான் தம்பி சூர்யா சுட்டிக் காட்டி அதற்கெதிராகக் கலகக்குரல் எழுப்பியிருக்கிறார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வரும் சூலை 25 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைக் கடைக்கோடி மக்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வூட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே அவர் இதனைப் பேசியிருக்கிறார். புதிய கல்விக் கொள்கை குறித்து இளைஞர்களிடையே மீண்டும் ஒரு விவாதம் தலையெடுக்க அவரது உணர்வும், உண்மையும் கலந்த பேச்சு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. சூர்யாவின் இக்கருத்தை கருத்தால் வெல்ல முடியாத பாஜகவின் தலைவர்களும், அதிமுக அமைச்சர் பெருமக்களும் வழமைபோலத் தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுக்க முற்படுவதும், கருத்துரிமையையே கேள்விக்கு உள்ளாக்குவதுமானச் செயல்களில் ஈடுபடுவதும் வன்மையான கண்டனத்திற்குரியது.

தம்பி சூர்யாவின் கருத்தைக் கொச்சைப்படுத்தி மடைமாற்ற முயன்று, புதிய கல்விக் கொள்கையைப் புனிதமான கல்விக் கொள்கை போலச் சித்தரித்துத் தம்பி சூர்யாவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் பாஜக தலைவர்கள், அதிமுகவின் அமைச்சர்கள் அக்கல்வி கொள்கை குறித்துப் பொத மேடையில் மக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாரா என்பதுதான் நாங்கள் எழுப்புகிற கேள்வி. அவ்வாறு பொதுமக்கள் முன்னால் புதிய கல்விக் கொள்கை பற்றிய விவாதத்தை மேற்கொள்ள வக்கற்ற இவர்கள், இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கி இருக்கிற அடிப்படை உரிமையான கருத்துரிமையையே நசுக்கும் வகையில் சூர்யாவின் பேச்சுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், அவரைத் தனிப்பட்ட முறையில் வசைபாடுவதும் ஏற்புடையது அன்று! அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

புதிய கல்விக் கொள்கை குறித்தானத் தம்பி சூர்யாவின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சி துணையாக நின்று புதிய கல்விக் கொள்கை குறித்துக் கருத்தியல் பரப்புரையும், மிகப்பெரும் களப்பணியும் செய்து அதற்கெதிரான தொடர் முன்னெடுப்புகளைக் கையிலெடுத்து மக்களின் துணையோடு போராடி மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இப்புதிய கல்விக் கொள்கையை நாம் தமிழர் கட்சி முறியடிக்கும்.

சனி, 6 ஜூலை, 2019

வைகோ மீதானத் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் - சீமான்

வைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல்
 – செந்தமிழன் சீமான்
(நாம் தமிழர் கட்சி )

இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும் சேர்ந்து ஈழ மண்ணில் நிகழ்த்திய இனப்படுகொலையைக் கண்டித்து, கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘நான் குற்றஞ்சாட்டுகிறேன்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில்

வியாழன், 27 ஜூன், 2019

உடனடியாக மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்! - சீமான்

மதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும். 
சீமான் வலியுறுத்தல்
நாம் தமிழர் கட்சி


மதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும். அவரது குடும்பம் போல இனியொரு குடும்பம் பாதிக்கப்படாதிருக்க உடனடியாக மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்!  கோவை ஜம்பு கண்டி பகுதியில் இருக்கும் மதுபானக்கடையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த நபரால் சமூகப் போராளியும், மருத்துவருமான கோவை ரமேஷ் அவர்களின் மனைவி ஷோபனா விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணமுற்றச் செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். 

பெரும்பான்மையான மக்களைக் குடிகாரர்களாக மாற்றியிருக்கிற 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் தீய ஆட்சி முறைமைகளால் குடிநோயாளிகளின் மாநிலமாக தமிழ்நாடே மாறியிருக்கிறது. மக்களின் நலன் காக்க வேண்டிய மாநில அரசே மதுபானக் கடைகளைத் திறந்து மக்களைக் குடிகாரர்களாக்கி வருகிற பேரவலம் தொடர்ச்சியாக இந்த மண்ணில் நடந்து வருகிறது. மதுவிலக்கு கேட்டு மக்கள் நலன் சார்ந்த அரசியல் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம். ஆனால், தமிழ்நாடு அரசு இதனைக் கண்டு கொள்ளாமல் தனக்கு வருவாய் வருகிற மிகப்பெரும் வழியாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை கருதி, ஒரு அறிவானச் சமூகமாக தமிழ்ச் சமூகத்தை உருவாக்கத் தெருவெங்கும் படிப்பகங்களை திறக்காமல் குடி நோயாளிகளை உருவாக்க வீதிதோறும் குடிப்பகங்களைத் திறந்து வைத்து இந்த மண்ணையும், மக்களையும் பாழ்படுத்தி வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகநடமாட்டம் உள்ள பகுதிகளில் மக்கள் வாழ்விடங்களில் மதுபானக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று பலமுறை மக்கள் வற்புறுத்தி போராடியும்கூட நாடெங்கும் பரவலாக மதுபானக்கடைகளை திறந்து வருகிற தமிழ்நாடு அரசின் சீர்கெட்ட செயல்பாடுகளால் இன்று ஒரு உயிர் பறிபோய் இருக்கிறது. மதுவை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவன் மனித வெடிக்குண்டுக்குச் சமம் என்கிறது உயர் நீதிமன்றம். அத்தகைய ஒரு குடிநோயாளியாலும், அக்குடிநோயாளியை உருவாக்கிவிட்ட அரசாலும்தான் இன்றைக்கு மருத்துவர் ரமேசின் குடும்பமே நிலைகுலைந்து நிற்கிறது.

தெருவெங்கும் மதுபானக்கடைகளைத் திறந்துவைத்து குடிகாரர்களால் மக்கள் உயிருக்கு உலை வைத்திருப்பது என்பது தமிழ்நாடு அரசாங்கம் நேரடியாக மக்கள் நலவாழ்வின் மீது இழைத்திருக்கின்ற ஆகப்பெரும் கொடுமை. மதுபானக் கடையில் குடித்துவிட்டு வந்த நபரால் தன் மனைவியின் உயிரை இழந்த மருத்துவர் ரமேஷ் சடலத்தோடு வீதியில் இறங்கி மதுபானக்கடையை மூடப்போராடியது என்பது மிகுந்த வலியைத் தருகிறது. காயம்பட்டத் தனது மகளைகூடப் பார்க்கச் செல்லாமல் தனியொரு ஆளாய் நின்று போராடி அம்மதுபானக்கடையை மூடுவதாக அரசினை அறிவிக்க வைத்திருக்கிறார்.

கோவை மருத்துவர் ரமேஷ் அவர்கள் எனது நீண்டகால நண்பர். பேரழிவுகளை ஏற்படுத்துகிற நாசகாரத் திட்டங்களை ஆய்வுசெய்து அதற்கெதிராக குரல் கொடுத்து போராடி வருகிற சமூகப்பற்றாளர். அவரது உற்றத் துணையாக விளங்கிய மனைவியை இழந்து வாடும் அருமை நண்பர் ரமேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்து இருக்கின்ற அருமை மகள் சாந்தி தேவி அவர்கள் கூடிய விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என எனது நம்பிக்கையினைப் பகிர்ந்து கொள்கிறேன். மிகவும் சிக்கலான இத்தருணத்தில் மருத்துவர் ரமேஷ் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் என உறுதியளிக்கிறேன்.

மதுவிலக்கு என்பதைத் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து அதிகாரத்திற்கு வந்த அதிமுக அதனைச் செயற்படுத்தத் துரும்பையும் கிள்ளிப் போடாதிருப்பது மிகப்பெரும் மோசடித்தனம்; வாக்குசெலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்கிற பச்சைத்துரோகம். இதுநாள்வரை மதுபானக்கடைகளை மூடாது மதுவிலக்கைச் செயற்படுத்த மறுத்து வரும் தமிழக அரசின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆகவே, இதுபோன்ற உயிரிழப்புகள் இனியும் ஏற்படாமலிருக்க இனிமேலாவது மதுவிலக்கினைச் செயற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசு உடனடியாக விரைந்து தொடங்க வேண்டும் எனவும், மதுவிலக்கை அமல்படுத்தும்வரை உடனடி தற்காலிக நடவடிக்கையாக மதுபானக் கடைகளை மக்கள் வசிப்பிடங்களில் இருந்து மக்கள் அதிக நடமாட்டம் இல்லாத ஆபத்தில்லாத இடங்களுக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர உடனடியாக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். - சீமான்

பொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர உடனடியாக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். - சீமான் 


தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மறப்போர் நிகழ்த்திட்ட அண்ணன் பொன்பரப்பி தமிழரசன் அவர்கள் உலவித் திரிந்த அதே மண்ணில் இன்றைக்குச் சாதிய மோதல்களும், தாக்குதல்களும் நிகழ்வது பெரும் மனவலியைத் தருகிறது. ஆதிச்சநல்லூர் ஆய்வுகளைக் கண்டு உலகத்தார் தமிழர்களின் பெருமையையும், தொன்மையையும் கொண்டாடிக்கொண்டிருக்கிற இவ்வேளையில் தமிழர்கள் சாதியால் பிளவுபட்டு மோதிக்கொண்டு நிற்கிறார்கள் என்பது வரலாற்றுப் பெருந்துயரம்.

தமிழ்த்தேசிய இனத்தின் ஓர்மைக்கு ஊறு விளைவிக்கும் விதமாக தமிழ்ச்சமூகங்களிடையே எழும் இச்சாதிய மோதல்களும், உள்முரண்களும் ஒட்டுமொத்த இன மக்களையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலகத்திற்கே உயிர்ம நேயத்தைப் போதித்த மேன்மை நிறைந்த தமிழ்ச்சமூக மக்களிடையே நிகழும் இதுபோன்றத் துயரங்கள் நம்மை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே இழுத்துச் செல்கிறது. மூவேந்தர் ஆட்சிக்காலம் தொட்டு, தற்காலம் வரை சொந்த ரத்தங்களுக்குள்ளே யுத்தம் செய்ததாலேயே இவ்வினம் வீழ்ந்தது என்பது மறக்கவியலா வரலாற்றுப் பேருண்மை. இதனை இளைய தலைமுறை தமிழ்ப்பிள்ளைகள் இனியாவது உணர்ந்து கொண்டு சாதி மத உணர்வுகளைப் புறந்தள்ளி, தமிழர் எனும் உணர்வோடு தமிழ்த்தேசிய ஓர்மையைக் கட்டமைக்கவும், உழைக்கும் ஆதித்தமிழ்க்குடிகளின் உயர்வுக்குப் பாடுபடவும் முன்வர வேண்டும்.

பொன்பரப்பியில் நிகழ்ந்த சாதியக் கொடுமைகள், தாக்குதல்கள் யாவும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. அதனை எதன் பொருட்டும் அனுமதிக்க முடியாது. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் நாம் மோதிக்கொள்ளும்போது சிந்தும் நமது இரத்தத்தைக் குடிக்கிற ஓநாய்களாக இம்மண்ணை ஆளுகிற ஆட்சியாளர்களும், கட்சிகளும் இருக்கின்றனர். இத்தகைய சாதியச் சிந்தனையும், சாதிய மோதல்களுமே தமிழினத்தின் விடுதலையைச் சாத்தியப்படுத்த பெரும் தடைக்கல்லாக இருக்கிறது.

பொன்பரப்பியில் சாதிய மோதல்களைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள், அதில் ஈடுபட்டவர்கள் எவராயினும் அவர்கள் மீது எவ்விதப் பாகுபாடுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஆதித்தமிழ்க்குடிகள், உடமைகளையும், வீட்டையும் இழந்த உழைக்கும் மக்கள் யாவருக்கும் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், இக்கலவரத்தில் பாதிக்கப்பட்டத் தமிழ்க்குடிகள் மீண்டு வர தன்னாலானப் பொருளாதார ரீதியான உதவிகளையும், சட்ட நடவடிக்கைகளையும் நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும் என இத்தருணத்தில் உறுதியளிக்கிறேன்.