வெள்ளி, 19 ஏப்ரல், 2019

பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர உடனடியாக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். - சீமான்

பொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர உடனடியாக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். - சீமான் 


தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மறப்போர் நிகழ்த்திட்ட அண்ணன் பொன்பரப்பி தமிழரசன் அவர்கள் உலவித் திரிந்த அதே மண்ணில் இன்றைக்குச் சாதிய மோதல்களும், தாக்குதல்களும் நிகழ்வது பெரும் மனவலியைத் தருகிறது. ஆதிச்சநல்லூர் ஆய்வுகளைக் கண்டு உலகத்தார் தமிழர்களின் பெருமையையும், தொன்மையையும் கொண்டாடிக்கொண்டிருக்கிற இவ்வேளையில் தமிழர்கள் சாதியால் பிளவுபட்டு மோதிக்கொண்டு நிற்கிறார்கள் என்பது வரலாற்றுப் பெருந்துயரம்.

தமிழ்த்தேசிய இனத்தின் ஓர்மைக்கு ஊறு விளைவிக்கும் விதமாக தமிழ்ச்சமூகங்களிடையே எழும் இச்சாதிய மோதல்களும், உள்முரண்களும் ஒட்டுமொத்த இன மக்களையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலகத்திற்கே உயிர்ம நேயத்தைப் போதித்த மேன்மை நிறைந்த தமிழ்ச்சமூக மக்களிடையே நிகழும் இதுபோன்றத் துயரங்கள் நம்மை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே இழுத்துச் செல்கிறது. மூவேந்தர் ஆட்சிக்காலம் தொட்டு, தற்காலம் வரை சொந்த ரத்தங்களுக்குள்ளே யுத்தம் செய்ததாலேயே இவ்வினம் வீழ்ந்தது என்பது மறக்கவியலா வரலாற்றுப் பேருண்மை. இதனை இளைய தலைமுறை தமிழ்ப்பிள்ளைகள் இனியாவது உணர்ந்து கொண்டு சாதி மத உணர்வுகளைப் புறந்தள்ளி, தமிழர் எனும் உணர்வோடு தமிழ்த்தேசிய ஓர்மையைக் கட்டமைக்கவும், உழைக்கும் ஆதித்தமிழ்க்குடிகளின் உயர்வுக்குப் பாடுபடவும் முன்வர வேண்டும்.

பொன்பரப்பியில் நிகழ்ந்த சாதியக் கொடுமைகள், தாக்குதல்கள் யாவும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. அதனை எதன் பொருட்டும் அனுமதிக்க முடியாது. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் நாம் மோதிக்கொள்ளும்போது சிந்தும் நமது இரத்தத்தைக் குடிக்கிற ஓநாய்களாக இம்மண்ணை ஆளுகிற ஆட்சியாளர்களும், கட்சிகளும் இருக்கின்றனர். இத்தகைய சாதியச் சிந்தனையும், சாதிய மோதல்களுமே தமிழினத்தின் விடுதலையைச் சாத்தியப்படுத்த பெரும் தடைக்கல்லாக இருக்கிறது.

பொன்பரப்பியில் சாதிய மோதல்களைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள், அதில் ஈடுபட்டவர்கள் எவராயினும் அவர்கள் மீது எவ்விதப் பாகுபாடுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஆதித்தமிழ்க்குடிகள், உடமைகளையும், வீட்டையும் இழந்த உழைக்கும் மக்கள் யாவருக்கும் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், இக்கலவரத்தில் பாதிக்கப்பட்டத் தமிழ்க்குடிகள் மீண்டு வர தன்னாலானப் பொருளாதார ரீதியான உதவிகளையும், சட்ட நடவடிக்கைகளையும் நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும் என இத்தருணத்தில் உறுதியளிக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக