திங்கள், 29 ஏப்ரல், 2019

குழப்பத்துக்கான விதைகளை அதிமுக தூவி இருக்கிறது! - முரசொலி தலையங்கம்

அ.இ.அ.தி.மு.க. மீண்டும் அடுத்த குழப்பத்திற்கான விதைகளைத் தூவி இருக்கிறது


தேர்தல் முடிவுகள் வருவதற்குள் ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க. அடுத்த குழப்பத்திற்கு ஆயத்தமாகிவிட்டது. கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி அரசின் தலைமை கொறடா எஸ். இராசேந்திரன் பேரவைத் தலைவர் எஸ்.தனபாலைச் சந்தித்து கடிதம் ஒன்றைக் கொடுத்தார். அதில் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படுவதாக இ. இரத்தினசபாபதி (அறந்தாங்கி), வி.டி.கலைச்செல்வன் (விருத்தாசலம்), எ.பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய மூன்று சட்டபேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

ஏற்கெனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் 18 இடங் களுக்குக் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது. அதற்கான முடிவுகள் மே.23-இல் வெளிவர இருக்கின்றன. இந்த 18 பேரைத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காலத்திலேயே தற்போது கொறடா கூறும் மூவரையும் புகார் கொடுத்து தகுதி நீக்கம் செய்து இருக்கலாமே. அவர்களும் தினகரன் கட்சி ஆதரவாளர்களாக 2017 ஆகஸ்டு முதல் இருந்து வருகிறார்களே என்ற சந்தேகம் நமக்குத் தோன்றும்.

கொறடா என்ன சொல்லுகிறார் என்றால் இந்த மூன்று சட்டபேரவை உறுப் பினர்களும் கடந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கும் 18 சட்டமன்ற தினகரன் கட்சியின் வேட்பாளர்களுக்கும் சேர்த்துப் பணியாற்றினார் கள் என்கிறார். அவர்கள் பணியாற்றியதற்கான கண்கூடான சாட்சியத்தைப் பேரவைத் தலைவரிடத்திலே வழங்கி இருக்கிறேன் என்கிறார். அதாவது நேரடியாக கட்சிக்கு எதிராக 'அந்த மூவர்' பணியாற்றியதாக கொறடா இப்போதுதான் உணர்ந்து அறிந்து இருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், நாளேடுகளில் பதிவானப்படி இந்த மூவரும் 18 பேர் மீது நடவடிக்கை எடுக்கிற காலத்திலேயே தினகரன் கட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள் எனத் தெரிய வருகிறது. ஆனால் அப்போது இவர்களின் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? அ.இ.அ.தி.மு.க. அரசின் பலம் குறைந்து விடும் என்றா ?- வேறு என்ன காரணம்? இப்போது தன் 'சல்லடம் கட்டிக் கொண்டு ஆடத் தொடங்குகிறார்கள் என்பதை நாம் யோசிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஆனால் அதற்குக் கொறடா அந்த மூன்று பேர்' கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக ஈடுபட்ட தற்கான சரியான சாட்சியத்தைத் தருவதற்குக் காலம் எடுத்துக் கொண்ட தைப் போலத் தெரிவித்து இருக்கிறார். அதனால்தான் காலதாமதம் ஆயிற்று என்று கூறாமல் கூறுகிறார். அவர் இன்னொரு குறிப்பையும் தந்து இருக்கிறார். அது என்ன தெரியுமா? செய்தியாளர்கள் கொறடா இராசேந்திரனை, 'இதைப் போல, கட்சி நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்ட வேறு சட்டப்பேரவை உறுப்பினர்கள் - யாராவது இருக்கிறார்களா?' - என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், 'இப்போதைக்கு இந்த மூவர் மட்டும்தான்' என்று சொல்கிறார். இதன் பொருள் என்ன? இதுவன்றி இதற்கடுத்தும் ஒரு குழப்பத்தைக் கையிருப்பாக வைத்திருக்கிறோம் என்பதுதானே இதன் பொருள்.

கொறடா தெரிவித்த அந்த மூன்று' சட்டப் பேரவை உறுப்பினர்கள் என்ன சொல்கிறார்கள்? 
'நாங்கள் அ.இ.அ.தி.மு.க.வில் தான் இருக்கிறோம். அக்கட்சிக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றோம். கொறடாவுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டதில்லை. யாரோடும் எங்களுக்கு உறவு இல்லை. நாங்கள் தினகரன் கட்சியில் உறுப்பினர் இல்லை. எந்தப் பொறுப்பிலும் நாங்கள் இல்லை.

எதிர்காலத்திலும் கட்சியின் நடவடிக்கை களுக்குக் கட்டுப்படுவோம்' என்ற விதமாகக் கருத்துகளைக் கூறி இருக்கிறார்கள்.

இதை விடவும் இன்னொரு செய்தி அவர்கள் - கொறடா வகையறாக்கள் எந்தக் கட்சியைச் ஆதரித்ததாக சொல்கிறார்களோ அந்தக் கட்சியின் 'கர்த்தா' அவர்கள் எங்கள் கட்சியில் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் பேரவைத் தலைவர் என்ன செய்வார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில், அவர்கள் புதிய உத்திகளைத் தோற்றுவிக்கும் பிரம்மாக்கள்!'' - குழப்பங்களைத்தான் சொல்கிறோம்.

கொறடா பேரவைத் தலைவரிடம் உறுப்பினர்களைப் பற்றிய புகாரைக் கடிதம் மூலம் தெரிவித்து விட்டார். பேரவைத் தலைவர் உறுப்பினர்களை அழைத்துப் பேசலாம்; கேட்கலாம். 7 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பலாம். விளக்கம் கொடுப்பதற்கு உறுப்பினர்கள் 15 நாள்கள் அவகாசம் கோரலாம். இப்படி நடவடிக்கைகள் செய்ய ஓரிரு மாதங்கள் கூட ஆகலாம். அதற்குள் தேர்தல் முடிவுகள் வந்து விடும், யார், எவர், எங்கே என்ற நிலைமைகள் தெளிவடைந்துவிடும்.

தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் வேளையில் இந்தச் சிக்கலை இப்போது கொறடா ஏன் முன்வைக்கிறார்? தேர்தல் முடிவுகளினால் ஆட்சி ஆட்டம் காணத் தொடங்குமானால் தேரோட்டத்தைத் தடுக்கத் 'தடுப்பைப் போடுவதைப்போல் ஒரு வேளை இந்த மூவர்' நடவடிக்கைகள் உதவலாம் என்று ஆளும் கட்சி நினைக்கக் கூடும். இன்னும் கொஞ்சம் மோசமான நிலைமை ஏற்பட்டால் அடுத்த 'காவைப் பற்றி யோசிக்கலாம். அதுவும் ஆளும் கட்சிக்கு கைவசம் உள்ள யோசனையாக நமக்குத் தெரிகிறது. ஆகவேதான், கொறடா இப்போதைக்கு இந்த மூன்று பேர் மட்டும்' என்று தெரிவித்து இருக்கிறார். முடிந்த வரை ஆட்சியில் ஒட்டிக் கொள்ளத் தீர்மானித்து இருக்கிறார்கள். 'கடைசி இழுப்பு' என இந்த முயற்சியையும் செய்து பயன்படுத்த நினைக்கிறார்கள். இது நடக்குமா? தொடருமா? - என்பதை இனி வரும் நாள்கள்தான் தீர்மானிக்க இருக்கின்றன.

ஆனால் கழகத் தலைவர் ஸ்டாலின் தமது அறிக்கையில் தாயத்தில் மலையில் காயை வைத்து இருக்கிறார். 'அந்த மூன்று உறுப்பினர்கள்' அ.தி.மு.க.வில் இருக்கிறார்கள். கொறடா உத்தரவுக்குக் கீழ்ப்படிய இருப்பதாகவும் சொல்கிறார்கள். கொறடா எந்தக் கட்சிக்கு 'அந்த மூவர் பணியாற்றியதாகச் சொல்கிறாரோ, அந்தக் கட்சியின் 'கர்த்தா' எங்கள் கட்சியில் அவர்கள் இல்லை என்று சொல்லி விட்டார். அந்தக் கட்சியில் இல்லாதவர்கள் தினகரன் கட்சித் தேர்தலில் எப்படிப் பணியாற்றி இருக்க முடியும்? இதை வைத்து தகுதி நீக்கம் செய்யமுடியுமா? முடியாது. 
எனினும், கொல்லைப்புற, மெஜாரிட்டி பெறுவதற்காக அந்த மூவரை' நடுநிலைத் தவறி நடவடிக்கை எடுத்தால் பேரவைத் தலைவரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தி.மு.கழகம் கொண்டு வரும் என்று கழகத் தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருக்கிறார். சில அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது போல அந்த நிலைக்கு பிரச்சினை போகுமா என்பதே சந்தேகம்தான் என்கிறார்கள்.

இருப்பினும் எதிர்க்கட்சியான தி.மு.க. அவர்கள் வேண்டும் என்றே குறுக்கே போடும் தேர்த் தடுப்பினை அறிந்தே வைத்து இருக்கிறது. கழகம் தேர்தல் ஆணையத்திற்கு 18+4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை நடத்துவதற்கு எத்தனை மனுக்களைத் தந்து இருக்கிறது, நீதிமன்றங்களை நாடி இருக்கிறது. 11 பேர் வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. மத்திய அரசின் அதிகார மலையின் பின்னே தற்போது அ.இ.அ.தி.மு.க. அரசு ஓடி ஒளிந்தாலும் சிற்றுளி மலையைப் பிளப்பது போல கழகம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னே அவரின் மரணத்திலும் மட்டும் குழப்பம் இல்லையா? அவர் நிறுவியதாகச் சொல்லப்படுகிற ஆட்சியில், அவர்கள் கட்சியில் எத்தனை குழப்பங்கள், அதனால் செய்த ஊழல்களுக்குப் பாதுகாப்பு எனக் காப்பாற்றிக் கொள்ளும் அ.இ.அ.தி.மு.க. மீண்டும் அடுத்த குழப்பத்திற்கான விதைகளைத் தூவி இருக்கிறது; எதிர்கொள்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக