சனி, 30 அக்டோபர், 2021

புதிய கல்விக் கொள்கையினை வகுக்கும் கல்வியாளர் குழுவை நியமனம் செய்வதை விரைவுபடுத்தவேண்டும். - கி.வீரமணி



இல்லம் தேடிக் கல்வித் திட்டம்: முதலமைச்சரின் விளக்க அறிக்கையை வரவேற்கிறோம்! 
ஊடுருவலைத் தடுக்கக் கண்காணிப்புக்குழு சிறப்பானதே!.- கி.வீரமணி

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்‘ தொடங்கப்படுவதுபற்றி 26.10.2021 அன்று ‘விடுதலை’யில் சில முக்கிய அய்யங்களை வெளியிட்டதோடு, ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்வித் திட்டத்தின் ஓர் அம்சமாக வீடுதோறும் கல்வியைச் சொல்லிக் கொடுக்கிறோம் என்ற பெயரில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை, ஆர்.எஸ்.எஸ். ‘ஷாகா’ என்பதன் சிலவற்றை லாவகமாக மாணவர்கள் - அவர்கள்மூலம் பெற்றோர் தொடர்பு இவை மூலம் மத நஞ்சினைப் புகுத்திப் பரப்பிடும் ஆபத்து அதில் உள்ளது என்பதால், அதன்மூலம் ஊடுருவல், இளம்பிஞ்சுகளுக்குப் பகுத்தறிவு வளர்ச்சியைத் தடுக்கும் அபாயமும் ஏற்பட வழி அதனால் ஏற்படக் கூடும் என்பதால், நாம் அதுபற்றி தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை - வேண்டுகோள் விடுத்ததோடு, புதிய கல்விக் கொள்கையினை வகுக்கும் கல்வியாளர் குழுவை நியமனம் செய்வதை விரைவுபடுத்தவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். நம்மைப்போல பலமுற்போக்கு இயக்க கொள்கையாளர்களும், அய்யங்களை எழுப்பினர்.

முதலமைச்சரின் விளக்கம்

நமது முதலமைச்சர் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று (29.10.2021) விடுத்துள்ள ஓர் அறிக்கையில், இல்லம் தேடிக் கல்வித் திட்டம்பற்றிய நமது அய்யங்களுக்கு தக்க வகையில் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்கள்.

முதலமைச்சர் அவர்கள், அவர்தம் அறிக்கையில்,
1. ‘‘ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவ தில்லை என்பது ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், மாநில அளவிலான கல்விக் கொள்கையினை வகுத்திட கல்வியாளர் அடங்கிய குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும்.’’

‘‘மாற்றுக் கருத்துகளை கவனத்தில் கொள்வோம்!’’ - முதலமைச்சர்

2. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, கரோனா பெருந்தொற்றால், கடந்த 19 மாத காலத்தில், கற்றலில் ஏற்பட்ட இழப்பைச் சரி செய்யும் பெரும் பணியில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக விளங்கும் வகையிலேயே இத்திட்டம் (இல்லம் தேடிக் கல்வித் திட்டம்) உருவாக்கப்பட் டுள்ளது. ஆனால், இத்திட்டம் குறித்து ஊடகங்கள் வாயிலாக சில மாற்றுக் கருத்துகள் அரசின் கவனத்திற்குத் தெரிய வந்துள்ளன. அரசு அவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.

கண்காணிப்புக் குழு உண்டு

தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் முறை, அவர்களுடைய பங்களிப்பு, அவர்களால் தயாரிக்கப்படும் மாணவ, மாணவியரின் கற்றல் மேம்பாடு ஆகியவை தொடர்ந்து கல்வியாளர்கள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே தன்னார்வலர்களாக தொடர அனுமதிக்கப்படுவர்.

3. மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, தன்னார்வலர்கள் அரசுப் பள்ளிகளின் நல்லெண்ணத் தூது வர்களாக, ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும், சமூகத்திற்கும் இணைப்புப் பாலமாகச் செயல்படுவர். எனவே, இத்திட்டத்தினை, நோக்கத்தினைப் புரிந்துகொண்டு, அனைத்து தரப்பு மக்களும், இத்திட்டத்தினை ஆதரித்து, நம் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்திற்கு உதவிடும் வகையில், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்திட கைகோர்த்திட வேண்டும்.’’

சீரிய விளக்கம் சிறப்பானது

நம்முடைய, நம்மைப் போன்ற மற்றைய கல்வியாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்களின் அச்சத்தையும், அய்யத்தையும் போக்கும் வகையில், நமது முதலமைச்சரின் சீரிய விளக்கங்கள் சிறப்பான முறையில் வெளிவந்ததற்கு மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவிப்பதோடு, நமது மாநில கல்வி அறிஞர்கள் குழு மூலம் பலவித ஊடுருவல்களுக்குத் தடுப்பணை அமைக்கவும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

முதலமைச்சருக்கு நன்றி!

ஊடுருவல்கள், விஷ உருண்டைக்கு சர்க்கரைப் பூச்சு போல் திகழ்ந்துவிடக் கூடாது என்பதே நமது கவலை. மற்றபடி நாடெலாம் பாய்ந்தது நமது ஆட்சியில் கல்வி நீரோடை என்ற சாதனைக்கிடையில் முதலைகள் கல்வி நீரோடையில் பதுங்க இடந்தராது கவனிப்பும், கண்காணிப்பும் எப்போதும் தேவை! தேவை! மீண்டும் தெளிவுபடுத்திய நமது ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்கு’ நன்றி! நன்றி!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக