புதன், 27 அக்டோபர், 2021

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அநீதி ஏற்பட்ட காலம் முடிந்துவிட்டது. தற்போது, அவர்களுக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது.- திரு அமித் ஷா


 ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் திரு அமித்ஷா தனது 2வது நாள் பயணத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ஜம்முவில் ரூ.210 கோடி செலவில், ஐஐடி புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் தொடக்க விழா நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் திரு ஜித்தேந்திர சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திரு அமித்ஷா கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அநீதி ஏற்பட்ட காலம் முடிந்துவிட்டது. தற்போது, அவர்களுக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.        

பல ஆண்டுகளாக அமலில் இருந்த 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவை முடிவுக்கு கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை பிரதமர் திரு நரேந்திர மோடி  கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி எடுத்தார். இதன் மூலம் லட்சக்கணக்கான ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றனர். காஷ்மீர் பெண்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட்டன.

காஷ்மீரில் பல வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் தற்போது 7 புதிய மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2,000 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்கின்றனர். இங்கு உருவாக்கப்பட்டுள்ள நவீன ஐஐடி வளாகத்தைபோல் நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. ஜம்மு காஷ்மீரின் ஏழை மக்களுக்கு சேவை செய்ய 45,000 இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டால், தீவிரவாதிகளால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது. இந்த இளைஞர்கள் ஜம்மு காஷ்மீரை மாற்றுவர். ஜம்மு காஷ்மீர் தேர்வு வாரியத்துக்கு 25,000 அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் 7,000 பேருக்கு இன்று நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளன.

 முதலீடுகள் இங்கு 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.  இது வரை ஜம்முவில் ரூ.7,000 கோடி முதலீட்டுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் ரூ.5,000 கோடி முதலீட்டுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது.  2022ம் ஆண்டுக்கு முன்பாக, ரூ.51,000 கோடி முதலீடு பெறப்படும்.  பிரதமர் திரு நரேந்திர மோடி பதவி ஏற்றதும் ரூ.55,000 கோடி நிதியுதவி வழங்கினார். இதன் மூலம் 21 திட்டங்களுக்கு ரூ.35,000 கோடி செலவழிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் ரூ.700 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படவுள்ளன. ஜம்மு காஷ்மீர் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க நீர்மின் நிலைய திட்டங்களுக்கு ரூ.35,000 கோடியை திரு நரேந்திர மோடி அரசு செலவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக