திங்கள், 18 அக்டோபர், 2021

டிஜிடிஇ அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை பாதுகாப்புச் செயலாளர் தொடங்கி வைத்தார்


 சமீபத்திய ஆய்வு தொழில்நுட்பங்கள், தொலைநிலை உணர்தல் மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) ஆகியவற்றை பயன்படுத்தி ராணுவ நில எல்லைகளை வரைபடமாக்குதல் குறித்த பயிற்சி திட்டத்தை இந்திய ராணுவ எஸ்டேட் சேவைகள் இயக்குநரகத்தின் (டிஜிடிஇ) அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்காக பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் 2021 அக்டோபர் 18 அன்று தொடங்கி வைத்தார்.

புதுதில்லியில் இருந்து காணொலி மூலம் நிகழ்ச்சி துவக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தேசிய தொலை உணர்திறன் மையத்தில் (என்ஆர்எஸ்சி) முதல் பயிற்சி தொடங்கியது.

திட்டத்தை துவக்கி வைத்து பேசிய பாதுகாப்பு செயலாளர், சமீபத்திய தொழில்நுட்பங்களை அறிந்து தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார். ராணுவ நிலங்களின் ஆய்வில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

"18 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களுடன் கூடிய டிஜிடிஇ, நாட்டின் மிகப்பெரிய நில மேலாண்மை அமைப்புகளில் ஒன்றாகும். மேலும், பல்வேறு வகைகளிலான நிலங்களை இது கொண்டுள்ளது. சில பகுதிகள் நகர்ப்புற நிலங்களை உள்ளடக்கியது, மற்றவை தொலைதூரத்திலும் சில கடினமான நிலப்பரப்புகளிலும் உள்ளன. எனவே, டிஜிடிஇ நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதையும், நில மேலாண்மை முறையின் தரத்தை மேம்படுத்துவதையும் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

ராணுவ நில ஆவணங்களின் டிஜிட்டல் மயமாக்கலை வெற்றிகரமாக முடித்ததை பாதுகாப்பு செயலாளர் நினைவு கூர்ந்தார், இதன் மூலம், சாலை, ரயில் பாதைகள் மற்றும் மின் திட்டங்கள் போன்ற பொது உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான பிற நிறுவனங்களின் தேவை குறித்து எளிதில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அவர் கூறினார். குத்தகைகளை புதுப்பிக்கும் செயல்முறையையும் இது எளிதாக்குவதாக அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக