பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்திலும், சமூக வலைத்தளத்திலும் நபிகள் நாயகமான முகமது நபி அவர்களை அவமதித்ததால் அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகப்பெரிய தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன், அரபு நாடுகளில் வேலை செய்து வரும் கோடிக்கணக்கான இந்தியர்களின் வேலை வாய்ப்புகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு காரணமான பாஜக நிர்வாகிகளை இந்திய அரசு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அரபு நாடுகளில் பல லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் அங்கு வேலை செய்கின்றனர். இப்போது அவர்களுடைய வேலைக்கெல்லாம் உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் பாஜக நிர்வாகிகளின் வெறுப்புப் பேச்சே காரணம்.
அரபு நாடுகளில் எழுந்த எதிர்ப்பையொட்டி அவர்கள் இருவரையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி வைப்பதாக பாஜக அறிவிப்பு செய்து இருக்கிறது. ஆனால் நூபுர் சர்மாவோ பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக தலைவர் அனைவரும் தனக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர்கள் எல்லோரும் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாகச் சொன்னது அரபு நாடுகளை ஏமாற்றுவதற்காகச் செய்த தந்திரம்தான் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.
இது எந்த விதத்திலும் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பையோ, தலைகுனிவையோ நீக்குவதாக இல்லை. உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி , மதரீதியாகப் பதற்றத்தை உருவாக்கி மிகப் பெரிய வன்முறை கலவரத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ள பாஜக நிர்வாகிகள் இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இசுலாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராகவும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து வெறுப்பைப் பரப்பிவரும் சனாதனப் பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக