புதன், 8 ஜூன், 2022

உலக அரங்கில் நம் நாட்டின் மத நல்லிணக்கம் விமர்சிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பது நமக்குப் பெருமை தராது! - கி.வீரமணி

 மதவாத அரசியல் முற்றிலும் மனிதநேயத்திற்கு விரோதமானது! 

உலக அரங்கில் நம் நாட்டின் மத நல்லிணக்கம் விமர்சிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பது நமக்குப் பெருமை தராது! 

பல வழிகளிலும் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்; அமைதிப் பூங்காவாக உள்ள தமிழ்நாட்டைப் பார்த்துப் புரிந்துகொள்ளட்டும்!!

கடந்த 2014 முதல் இன்றுவரை - இரண்டாவது முறையும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனைபற்றிப் பேசிவரும் நாளில், உலகின் 58 நாடுகளைக் கொண்ட இஸ்லாமியக் கூட்டமைப்பு (OIC) நம் நாட்டோடு மிக நட்புறவோடு உள்ள பல வளைகுடா நாடுகளும், இந்தோனேஷியா போன்ற நாடுகளும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் வெறுப்புப் பிரச்சாரத்தினைக் கண்டு தங்களது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருவதுடன், நம் நாட்டுப் பொருளாதாரத்திற்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அதன் விளைவுகள் சற்றும் எதிர்பார்க்காத விளைவுகளாகி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறித்து இதுவரை கண்டுகொள்ளாமல், கடும் மறுப்பை அக்கட்சியின் தலைவரோ, பிரதமர் போன்ற முக்கிய பொறுப்பிலிருப்பவர்களோ கூறாது இருந்ததின் விளைவுதான் இந்த பல நாடுகளின் கண்டனக் கணைகள்!

மதவாத அரசியல் முற்றிலும் மனிதநேயத்திற்கு விரோதமானது.

ஆர்.எஸ்.எஸ். அடிப்படையே அதில்தான் கட்டப்பட்டுள்ளது. ஆதாரம் அதன் தத்துவகர்த்தாவாகக் கருதப்படும் கோல்வால்கரின்  ‘‘ஞானகங்கை’’(Bunch of Thoughts) மற்றும் India Nationhood போன்ற நூல்கள் ஆகும்!

இந்திய நாட்டின் குடிமக்களை மத ரீதியாகப் பிரித்தும் மற்றும் கட்சி ரீதியாகப் பிரித்தும் எழுதியுள்ள - ‘உள்நாட்டு அபாயங்கள்!’  1.முஸ்லிம், 2.கிறிஸ்தவர்கள் 3. கம்யூனிஸ்டுகள் குறித்து விடாமல் எதிர்ப்பிரச்சாரம் செய்துவந்ததின் விளைவாக ஆட்சியிலும் அந்த வெறுப்பு அரசியல் குரல் ஓங்கியது. நோய்நாடி நோய்முதல் நாடும் வகையில் நாம் இதனை ஆராய்ந்து தெளியவேண்டும்!

இந்த வெறுப்பு - பொறுப்பற்ற பேச்சின்  எதிர்விளைவு

இப்படி அக்கட்சியில் அதீதமாகப் பேச ஆரம்பித்ததிலிருந்து எவர்மீதும் கட்சியோ, ஆட்சியோ கடும் நடவடிக்கை எடுத்துத் தடுத்து, முளையில் அதைக் கிள்ளி எறிந்திருந்தால், இப்படி உலக அரங்கில் நமக்குத் தலைகுனிவும், பொருளாதாரச் சிக்கல் உருவாகிவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டிருக்காது.

7.6.2022 வந்த ஆங்கில நாளேடான ‘‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ இந்த வெறுப்பு - பொறுப்பற்ற பேச்சின்  எதிர்விளைவு (Back lash) காரணமாக இந்தியப் பொருள்களைப் புறக்கணித்துத் தடை போடும் அளவுக்கு அந்நாட்டு அரசுகள் சென்றுள்ளது நமக்குப் பெருமை தருவதாக இல்லையே!

வளைகுடா நாடுகளுடன் நமக்குள்ள வணிகத் தொடர்பு 2021-22 இல் 189 பில்லியன் டாலர்கள். இது நம் நாட்டின் ஏற்றுமதி - இறக்குதியில் 18.3 சதவிகிதம் ஆகும்!

ஏராளமான வேலை வாய்ப்புகளும் அந்நாடுகளில் நம் நாட்டிலிருந்து சென்றவர்களுக்கு உண்டு என்பது உலகறிந்த செய்தி. அதன் பாதுகாப்பு இப்போது இந்த வீண் வெறுப்புப் பிரச்சாரத்தினால் அச்சத்திற்கு ஆளாக்கப்படுகிறது.

‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’

அந்நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வரும் வருமானம் (குடும்பங்களுக்கு) Remittances, அமீரகத்திலிருந்து 27 சதவிகிதம், சவூதி அரேபியா 11.6 சதவிகிதம், கத்தார் 6.5 சதவிகிதம், குவைத் 5.5 சதவிகிதம், ஓமன் 3.5 சதவிகிதம் என்றவாறு அந்த நாளேடுகளில் வெளிவந்ததை அப்படியே தருகிறோம். அதுபோல, ‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ நாளேட்டில், ‘’Call for boycott of Indian Products’’ என்ற தலைப்பில் பல இஸ்லாமிய நாடுகளின் கோபத்தையும் பதிவு செய்துள்ளது. ‘இந்து’ நாளிதழும் செய்தி வெளியிட்டுள்ளது. .

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை லட்சியங்களுக்கு உகந்ததா?

ஹிந்துராஷ்டிரம் என்பது, மதச்சார்பின்மை என்பதற்கு நேர் எதிரான - ஜனநாயகக் குடியரசு என்ற பிரகடனத்திற்கு வேட்டு வைப்பதல்லாமல், வேறு என்ன?

குறிப்பிட்டவர்கள்மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதுமா?

அந்த நிலைதானே பல மாநிலங்களில் - குறிப்பாக கருநாடகா போன்ற இடங்களில் வெறுப்பு அரசியல், சிறுபான்மையினருக்கு எதிரான பகிரங்க உரிமைப் பறிப்புகள் -

பிரதமர் மோடி அவர்கள் 2014 இல் பதவிக்கு வருமுன் ‘சப்கா சாத் - சப்கா விகாஸ்’ என்று ஹிந்தியில் ஓங்கி முழங்கி வந்தாரே, இதுதான் வளர்ச்சிக்குரிய வழியா?

தொடக்கத்திலேயே கண்டித்து, தடுத்திருந்தால் இந்நிலை வந்திருக்குமா?

வேலை கிட்டாத இளைஞர்கள்  பட்டாளங்கள் - விலைவாசியால் விழிபிதுங்கும் அனைத்துத் தர குடிமக்கள்!

இதற்கிடையில் மதவெறி அரசியல் ஏற்படுத்தும் மத நல்லிணக்கத்திற்கு எதிரான வன்மம் - இவற்றைத் தொடக்கத்திலேயே கண்டித்து, தடுத்திருந்தால் இந்நிலை வந்திருக்குமா?

சில சிறு தனி அமைப்புகள்தான் என்பதுபோல ஒரு பசப்பு வேஷம் போட்டு, நிலைமை மோசமான பிறகு, பொது அறிவுரை கூறுவது பிரச்சினையை எப்படித் தீர்க்கும்?

ஏற்கெனவே வழிபாட்டுத் தலங்கள்பற்றிய சட்டம் உள்ளதே அதை மதித்திருந்தால், அதை மீறுகிறவர்களை சட்டப்படி தடுத்திருந்தால், இப்படி பல சிக்கல்கள் உருவாகுமா?

உலக அரங்கில் நம் நாட்டின் மத நல்லிணக்கம் விமர்சிக்கப்படும்  நிலை ஏற்பட்டிருப்பது, நமக்கு ஒருபோதும் பெருமை தராது என்பதோடு, பல வழிகளிலும் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் ஆபத்தும் அதன் விளைவுகளாகும் விபரீதமும் உருவாகிறதே!

தமிழ்நாட்டினைப் பார்த்துப் புரிந்துகொள்ளட்டும்!

‘‘மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்பதே!’’ என்றும் நம்மை உலகத்தார்முன் உயர்த்தும்.

‘‘திராவிட மாடல்’’ ஆட்சி - திராவிடர் இயக்கப் பணி அதைச் செய்வதுதான் என்பதை அமைதிப் பூங்காவாக உள்ள தமிழ்நாட்டினைப் பார்த்துப் புரிந்துகொள்ளட்டும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக