புதன், 4 செப்டம்பர், 2024

வருங்கால சந்ததியினரின் மனதை ஊக்குவித்து, அவர்களை ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி வழிநடத்தும் முக்கிய பணி ஆசிரியர்களிடம் உள்ளது. -குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு


 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

"ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் சிறந்த கல்வியாளரும், தத்துவவாதியும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளில் கொண்டாடப்படுகிறது. அவர் நாட்டிற்கும் உத்வேகம் அளிக்கும் சிறந்த ஆதாரமாக திகழ்கிறார். இந்தத் தருணத்தில் அவருக்கு எனது பணிவான மரியாதையைக் காணிக்கையாக்குகிறேன்.

குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம். மாணவர்களாக அவர்கள் வாழ்க்கைத் திறன்களையும் மதிப்புகளையும் கற்றுக்கொள்கிறார்கள். ஆசிரியர்கள், வழிகாட்டிகளாகத் திகழ்ந்து, நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் எதிர்கால தலைவர்களாக மாணவர்களை வடிவமைக்க முடியும்.

வருங்கால சந்ததியினரின் மனதை ஊக்குவித்து, அவர்களை ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி வழிநடத்தும் முக்கிய பணி ஆசிரியர்களிடம் உள்ளது. தார்மீக மதிப்புகள், சிந்தனைத் திறன், சமூகத்தின் மீதான பொறுப்புணர்வு ஆகியவற்றை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கல்வியை வழங்குவதற்கான நவீன முறைகளைத் தொழில்நுட்பத்தின் உகந்த பயன்பாடு மூலம், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க முடியும். இதன் மூலம் மாணவர்களுக்குப் பலனளிக்கும் வகையில் அவர்களது வாழ்க்கையை உருவாக்கவும், வளர்ந்த தேசத்தை கட்டமைக்கவும் அதிகாரம் அளிக்க முடியும்.

நான் மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தினருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் அறிவார்ந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக