செவ்வாய், 14 மே, 2019

அரசியலில் இருந்து விலக நான் தயார் - மு.க.ஸ்டாலின்

“பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க பேசி வருவதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக நான் தயார்; நிரூபிக்கத் தவறினால் திருமதி தமிழிசை சவுந்திரராஜனும் - திரு நரேந்திர மோடி அவர்களும் அரசியலை விட்டு விலகத் தயாரா?"
-  மு.க.ஸ்டாலின் 



“மோடியுடனும் ஸ்டாலின் பேசி வருகிறார். பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார்” என்று “பச்சைப் பொய்” நிறைந்த ஒரு பேட்டியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வியின் விளிம்பிற்கு சென்று விட்ட பா.ஜ.கவிற்கு இதுபோன்று குழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. ஆனால் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த திருமதி தமிழிசை சவுந்திரராஜன் இப்படியொரு “பொய்” பேட்டியை அளிப்பதற்காக தன்னை இந்த அளவிற்கு தரம் தாழ்த்திக் கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தியை முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது திராவிட முன்னேற்றக் கழகம்தான். அதே நேரத்தில் ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை அளித்த பிரதமர் திரு நரேந்திர மோடியை “பாசிஸ்ட்” “சேடிஸ்ட்” “சர்வாதிகாரி” என்று முதன்முதலில் விமர்சித்தது மட்டுமின்றி, “மீண்டும் இந்தியாவின் பிரதமராக திரு நரேந்திர மோடி வரவே கூடாது” என்று சென்னையில் மட்டுமல்ல- கல்கத்தாவிலும், டெல்லிலும் மாறி மாறி பிரச்சாரம் செய்தவனும் அடியேன்தான். தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியிலும் அதே பிரச்சாரத்தை செய்திருக்கிறேன். நடைபெறவிருக்கின்ற நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் மே 23 ஆம் தேதியுடன் பிரதமர் திரு மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் பேசி வருகிறேன்.

இதைப் பொறுக்க முடியாத பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் கடைந்தெடுத்த அரசியல் கயமைத்தனம் மூலம் அ.தி.மு.கவை மிரட்டி கூட்டணி வைத்தது போல், இட்டுக்கட்டிய பேட்டிகளை கற்பனைக் குதிரைகள் போல் தட்டி விட்டு தி.மு.க.வை வம்புக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள். தி.மு.க.வின் வெற்றியும், அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியும் அந்த அளவிற்கு பா.ஜ.க.வை மிரட்டி விட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி உள்ளிட்ட மேலிடப் பா.ஜ.க. தலைவர்களின் சுயநலனுக்கு திருமதி தமிழிசை சவுந்திரராஜன் கடைசிக்கட்டமாக பகடைக்காயாக ஆக்கப்பட்டுள்ளார்.தெலுங்கானா முதல்வர் திரு சந்திரசேகர் ராவ் அவர்கள் இப்போது முதன்முதலாக என்னை வந்து பார்க்கவில்லை. இதற்கு முன்பும் வந்து சந்தித்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்த முறை அவர் சந்தித்து விட்டுச் சென்றவுடனையே “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து தெளிவான பத்திரிக்கைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குழப்பவாதிகள் அப்போதாவது குறிப்பறிந்திருக்க வேண்டும். ஆனாலும் “மரியாதை நிமித்தமான சந்திப்பிற்கு” காது மூக்கு வைத்து, பூச்சூடி பொட்டு வைத்து வெளியில் விட்டால் தி.மு.க.விற்கு விழும் சிறுபான்மையின வாக்குகளை இந்த நான்கு இடைத்தேர்தல்களில் தடுத்து விடலாம்- சிதறடித்து விடலாம் என்றும், மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவிருக்கின்ற நிலையில் திரு ராகுல் காந்தி அவர்களை பிரதமராக முன்னிறுத்திய தி.மு.க.வின் பிரச்சாரத்தை முனை மழுங்கச் செய்து விடலாம் என்றும் “தப்புக் கணக்கு”ப் போட்டு திருமதி தமிழிசை இந்த பேட்டியை திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு கொடுத்திருக்கிறார். குறிப்பாக அ.தி.மு.க அமைச்சர் திரு ஜெயக்குமார் சொன்னதை திருமதி தமிழிசை சவுந்திரராஜன் வழி மொழிந்திருக்கிறார் என்றால் ஊழல் அ.தி.மு.கவை எப்படியாவது இந்த நான்கு இடைத் தேர்தலிலாவது தோல்வியடைய விட்டுவிடக் கூடாது என்று “போகாத ஊருக்கு பொய்யான வழி தேடியிருக்கிறார்”! “உனக்கு நான்”, “எனக்கு நீ” என்று ஊழல் அ.தி.மு.கவும், மதவாத பா.ஜ.க.வும் கச்சை கட்டிக் கொண்டு “தி.மு.க தலைமையிலான” கொள்கைக் கூட்டணிக் குளத்தில் கல் எறியும் இந்த முயற்சி படு தோல்வியடையும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம், “அ.தி.மு.க- பா.ஜ.க” போல் திரைமறைவில் “தரகு” பேசும் கட்சியல்ல. கொள்கையை பகிரங்கமாக அறிவித்து- யார் பிரதமர் என்பதை முன்கூட்டியே மக்களிடம் எடுத்துக் கூறி- யார் பிரதமராகக் கூடாது என்பதை இன்னும் தெளிவாக எடுத்துரைத்து தேர்தலைச் சந்தித்து வருகின்ற கட்சி. அந்த வகையில்தான் இந்த மக்களவைத் தேர்தலையும் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்துள்ளது. மத்தியில் பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது என்பதிலும் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதிலும், திரு ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதிலும் அதைவிட இரட்டிப்பு மடங்கு உறுதியுடன் இருக்கிறது. ஆகவே, கழகத் தலைவராக பொறுப்பேற்ற போது நான் உறுதியளித்தது போல், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசை மே 23- ஆம் தேதிக்குப் பிறகு மாற்றிக்காட்டுவோம்! முதுகெலும்பில்லாத இந்த அ.தி.மு.க அரசைத் தூக்கியெறிவோம்!

திருமதி தமிழிசை சவுந்திரராஜனோ அல்லது அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படும் திரு நரேந்திர மோடியோ “மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். அப்படி இருவரும் நிரூபிக்கத் தவறினால் திரு நரேந்திர மோடியும், மாநில பா.ஜ.க. தலைவராக இருக்கும் திருமதி தமிழிசை சவுந்திரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?

சனி, 11 மே, 2019

தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்

தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவர், போராட்டமும் தியாகமுமே வாழ்க்கை முறையாகக் கொண்ட மூத்த தோழர் நல்லகண்ணு அய்யா அவர்கள் சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், அங்கே புதிய திட்டத்தை வாரியம் செயல்படுத்தப் போவதாகச் சொல்லப்பட்டு, நல்லகண்ணு அய்யா அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன் காரணமாக, உடனடியாக அவர் அந்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அரசாங்கத்தை மதிக்கும் அவருடைய நற்பண்பு போற்றுதலுக்குரியது. அத்தகைய போற்றுதலுக்குரிய ஒரு தலைவரை உடனடியாக வெளியேற்றச் செய்த அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது.

பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற பயணத்தில் நேர்மையுடன் வாழ்கின்ற தலைவர்களுக்கும் சான்றோர்களுக்கும் அரசு தரும் மரியாதைகளில் ஒன்றாகத்தான் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.

தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான 94 வயதுடைய மூத்த தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆட்சியாளர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

வெள்ளி, 10 மே, 2019

ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்


28 வருடங்களாக தொடர்ந்து சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்கள் தலைமையிலான அமர்வு, தள்ளுபடி செய்திருப்பதை வரவேற்கிறேன்.

வியாழன், 9 மே, 2019

பிரியா பவானி ஷங்கர் நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார். - எஸ்.ஜே.சூர்யா



‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து  ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். எலியால் ஏற்படும் விபரீதமும், எலியிடம் சிக்கித் தவிப்பவராகவும்  எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.   இதில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய  பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

விழாவில்  இயக்குநர் நெல்சன் பேசும்போது,

குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் படமென்பதால் குடும்பம் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் படம் இருக்கும். நாயகன் தேர்வில் எந்த யோசனையுமின்றி எஸ்.ஜே.சூர்யாவை தேர்வு செய்தோம். அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார். நாயகி பிரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் கருணாகரன் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவ்விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, 
‘ஒரு நாள் எஸ்.ஆர்.பிரபு, ஒரு கதை இருக்கிறது கேட்கிறீர்களா? என்றார். கதை சொல்லவந்த நெல்சன், நீங்கள் ஒரு எலி என்று ஆரம்பித்ததும் எப்படி இருக்குமோ? என்று நினைத்தேன். கதையைக் கேட்டதும் பிடித்திருந்தது. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் காலை முதல் நள்ளிரவு வரை அயராமல் சுறுசுறுப்புடன் இருப்பார்.

குழந்தைகளுக்கும் செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். ‘அந்தி மாலை’ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.

சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமாக அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஒவ்வொரு காட்சி கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறிவார். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை’ என்றார்.


விழாவில் பிரியா பவானி சங்கர் பேசும்போது,

இந்த படத்தில் கிடைத்த அனுபவம், எஸ்.ஜே.சூர்யா நாயகன் என்றதும் அவருடன் எனக்கு பொருத்தமாக இருக்குமா? என்று தயங்கினேன். ஆனால் இயக்குநர் முதலில் கதை கேட்டு முடிவு செய்யுங்கள் என்று கூறினார். சங்கர் கூறியதுபோல் என்னை பாதுகாப்பாக வைத்திருந்தார். படக்குழுவினருடன் ஜாலியாக பணியாற்றினேன். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் எனக்கு ஒரு பாடல் அமைந்ததில் மகிழ்ச்சி



புதன், 8 மே, 2019

சிவகார்த்திகேயன் SK16 படப்பிடிப்பு தொடக்கம்

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று (MAY 8) முதல் துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத (SK16) இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.  நடிகர் சூரி, யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி, நடிகர் சுரேஷ், நட்டி நட்ராஜ் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர். இமான் இசையமைக்கிறார்.