வெள்ளி, 15 மார்ச், 2019

தினகரன் கோரிக்கை நிராகரிப்பு !

எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று கடந்த மாதம் 28 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமமுக  தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்றும், இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வேண்டும், இடைக்காலமாகத் தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் இன்று (மார்ச் 15) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டனர்.

இதனைத் தொடர்ந்து, குக்கர் சின்னம் தொடர்பான தினகரன் தரப்பு வைத்த கோரிக்கையில், தேர்தல் காலம் என்பதால் நாங்கள் வாக்கு கேட்கச் செல்ல வேண்டும், எனவே எங்களுக்கான ஒரு சின்னத்தை கொடுங்கள்” என்று வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக வரும் 25ஆம் தேதிக்குள் தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்படுமா என்பது வரும் 25ஆம் தேதிக்குள் தெரியவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக