வியாழன், 14 நவம்பர், 2024

நீரிழிவு நோய்க்கான ஒருங்கிணைந்த சித்த மருத்துவ புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு சென்னை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனதில் தொடங்கப்பட்டது


 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் அறிவுறுத்தலின்படி நீரிழிவு நோய்க்கான ஒருங்கிணைந்த சித்த மருத்துவ புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு சென்னை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் திருவனந்தபுரம் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் இன்று திறக்கப்பட்டது. 

இந்நிறுவனங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த ஒருங்கிணைந்த சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சியை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தினுடைய தலைமை இயக்குநர் பேராசிரியர் மரு. திரு என்.ஜெ. முத்துக்குமார் தொடங்கி வைத்து இந்நிகழ்வின் நோக்கம் மற்றும் குறிக்கோளை பற்றி விளக்கினார். 

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் திட்ட அலுவலர் மருத்துவர் எஸ். செல்வராஜன் நிகழ்வின் முக்கியத்துவம் பற்றியும், சித்தா ஆராய்ச்சி அலுவலர் மருத்துவர் ஏ. ராஜேந்திர குமார்   ஒருங்கிணைந்த சிறப்பு சிகிச்சையினால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றியும் எடுத்துரைத்தனர். 

நீரிழிவு நோயானது நாள்பட்ட வளர்சிதை மாற்ற கோளாறால் ஏற்படுவதாகும். குறைவான இன்சுலின் சுரப்போ அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் பயன்பாட்டில் ஏற்படும் கோளாறோ அல்லது இரண்டுமோ இந்நோய்க்கு காரணமாக அமைகின்றது. கட்டுப்பாடற்ற நீரிழிவு ஒரு நோயாளியின் கண், இருதயம், சிறுநீரகம் மற்றும் ரத்த நாளங்களை பாதித்து பல்வேறு நரம்பியல் நோய்களுக்கும் வழி வகுக்கின்றது. மேலும் நீரிழிவு, நோயாளிகளின் உடல் நலனை பாதித்து வாழ்நாளை குறைப்பதோடு பொருளாதார சுமைக்கும் காரணமாகிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் சித்த மருத்துவத்தைச் சார்ந்த மூலிகை மற்றும் தாது பொருட்கள் கலந்த மருந்துகள் தனித்துவமாக விளங்குகின்றன. சித்த மருத்துவத்தின் படி, நீரிழிவு நோயானது முத்தோடங்கள் மற்றும் ஏழு உடற்தாதுக்களில் ஏற்படக்கூடிய வளர்சிதை மாற்ற கோளாறுகளால் உண்டாகிறது. இந் நோயானது இனிப்பு நீர் மற்றும் மதுமேகம் என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

சித்த மருத்துவத்துடன் நவீன மருத்துவமும் இணைந்து கொடுக்கப்படக்கூடிய இந்த ஒருங்கிணைந்த சிறப்பு சிகிச்சையானது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை தடுப்பதோடு மட்டுமல்லாமல் நீரிழிவு நோயை முழுமையாக  கட்டுப்படுத்த உதவும் ஒரு முன் முயற்சி ஆகும்.

மேலும் பொதுமக்களுக்கு நீரிழிவு நோயைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் நீரிழிவு நோய் வருவதற்கான காரணிகள், அறிகுறிகள், நீரிழிவு நோயை தடுக்கக்கூடிய முறைகள் மற்றும் கட்டுப்படுத்தக் கூடிய வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நீரிழிவை கட்டுப்படுத்த உதவும் யோகப் பயிற்சி முறைகள், செய்யப்பட வேண்டிய வாழ்வியல் மாறுபாடுகள், மன அழுத்தங்களை குறைக்க உதவும் பயிற்சி முறைகள் மற்றும் சரியான இடைவெளியில்  சர்க்கரை அளவை  பரிசோதனை செய்ய வேண்டிய முக்கியத்துவம் பற்றியும் அறிவுறுத்தப்பட்டது. இதில் நீரிழிவு நோயைப் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக