அதிமுக அரசு நடத்துவது கபடநாடகம் - நேர்மையற்ற அரசியல் என நிரூபிக்க தயார் திமுக செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அமைச்சர் திரு. காமராஜூக்கு விடுத்துள்ள சவால்.
கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அறிவித்தது அ.தி.மு.க. அரசு. அப்படி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் விளைவாகப் பல லட்சம் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு அ.தி.மு.க. அரசு தேவையான உதவிகளைச் செய்திருக்க வேண்டும். ஆனால், அரசு அதற்கான முயற்சிகளை எடுக்கத் தவறிய நிலையில் கருணை உள்ளத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் எண்ணத்தில் எங்கள் கழகத் தலைவர் அவர்கள் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தை அறிவித்தார்கள். அதன் மூலம் பல லட்சம் மக்களுக்கு உணவுப் பொருட்களும், காய்கறிகளும், மருந்துப் பொருட்களும் நிதி உதவிகளும் கழக உடன்பிறப்புகள் ஒத்துழைப்போடு தமிழகம் முழுவதும் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. உணவுகளைத் தயாரித்துப் பொட்டலங்களாகவும் வழங்கினோம்.
இந்த 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்துக்காக பொதுத் தொலைப்பேசி சேவை ஒன்றையும் அறிவித்திருந்தோம். அந்தத் தொலைப்பேசி வாயிலாக ஏறத்தாழ 15 லட்சம் பேர் தங்களது பல்வேறு கோரிக்கைகளைத் தெரிவித்தார்கள். உணவு, மருந்துப் பொருட்களை வழங்குவதற்காகவே இச்சேவைத் தொடங்கப்பட்டது. ஆனால், இவை இல்லாமல் பல்வேறு கோரிக்கைகளைப் பொதுமக்கள் இதில் பதிவு செய்துள்ளார்கள். இதில் ஒரு லட்சம் மனுக்களைத் தலைமைச் செயலாளரிடம் வழங்கினோம்.