மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப் பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரி தமிழகத்தின் பிற கட்சிகள் வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும், ஆனால், பா.ம.க. 27% இட ஒதுக்கீடு கோரி வழக்கு தொடர்ந்திருப்பதால் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அவரது அறியாமை கவலை அளிக்கிறது.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மீது குற்றஞ்சாட்டும் முன்பு அது குறித்த அடிப்படைக் கூறுகளை கே.பாலகிருஷ்ணன் அறிந்து கொண்டிருக்க வேண்டும். சமூக நீதி என்பது சிதம்பரம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் போது பெயருக்குப் பின்னால் படையாட்சி பட்டத்தை போட்டுக் கொள்வது, தேர்தல் முடிவடைந்தவுடன் வன்னியர்கள் சாதிவெறியர்கள் என்று கூறுவது என்பதைப் போன்றது அல்ல. அது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் போராடிப் பெற்ற உரிமையாகும்.
