செவ்வாய், 31 மார்ச், 2020

கொரோனா: மத்திய அரசின் நிதியுதவியை விரைந்து வழங்க நடவடிக்கை வேண்டும்! - DR.S.ராமதாஸ்


கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஆணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியுதவி, பயனாளிகளைச் சென்றடைய நீண்ட தாமதம் ஆகும் என்று வெளியாகியுள்ள செய்திகள் கவலையை ஏற்படுத்துகின்றன.  வாழ்வாதாரம் இழந்த ஏழைகளுக்கு உதவும் விஷயத்தில் தாமதம் செய்வது, உதவியின் நோக்கத்தையே சிதைத்து விடும்.

கொரோனா வைரஸ் அச்சத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் நிதியுதவிகள் நாளை மறுநாள் முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. ஆனால், மத்திய அரசின் சார்பில், கொரோனா வைரசால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அறிவிக்கப்பட்ட உணவு தானியங்களும், நிதியுதவியும் எப்போது வழங்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை.

தமிழக அரசின் உதவித் திட்டங்கள் ஒரே கட்டமாக வழங்கப்படவுள்ள நிலையில், மத்திய அரசின் நிவாரணத் திட்டம் அடுத்த மூன்று மாதங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது. மொத்தம் 80 கோடி ஏழைகளுக்கு அடுத்த 3 மாதங்களில் ரூ. 1.70 லட்சம் கோடி மதிப்புள்ள உதவிகளை மத்திய அரசு வழங்கியாக வேண்டும். இந்த உதவிகளில் பெரும்பாலானவை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளின் நேரடி பயன் மாற்ற முறையில் செலுத்தப்பட வேண்டும். ஆனால், பயனாளிகளுக்கான நிதியுதவியை அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

முதல்கட்டமாக, நிதியுதவியை செலுத்துவதற்கான வங்கிக் கணக்குகளில் 75% கணக்குகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆதாருடன் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகளில் பணத்தை  செலுத்த முடியாது என்று இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும்,  பயனாளிகளில் கணிசமானவர்களுக்கு இதுவரை வங்கிக் கணக்கே இல்லை என்று தெரியவந்துள்ளது.  

தொலைதூர கிராமங்களில் உள்ள மக்கள் மின்னணு பணப்பரிமாற்ற முறையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு வங்கி ஏ.டி.எம்கள் மூலமாகவோ, வங்கி முகவர்கள் மூலமாகவோ பணமாகத் தான் கொடுக்க வேண்டியிருக்கும். அவ்வாறு வினியோகிக்க வேண்டியுள்ள தொகையில் பெரும்பகுதி கிராமங்களில் தான் வினியோகிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், இந்தியாவில் மொத்தமுள்ள 2.30 லட்சம் ஏ.டி.எம் எந்திரங்களில் வெறும் 43 ஆயிரம் எந்திரங்கள் மட்டுமே ஊரகப்பகுதிகளில் உள்ளன. அதுமட்டுமின்றி, ஊரடங்கு ஆணை நடைமுறையில் இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு  பணத்தை கொண்டு செல்வதோ, வங்கி முகவர்கள் மூலம் பணத்தை வழங்குவதோ உடனடியாக சாத்தியம் இல்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் நிதியுதவி ஏழைகளை எப்போது சென்றடையும் என்பதை எவராலும் துல்லியமாக கூற முடியாது என்ற நிலை தான் நிலவுகிறது.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் மட்டும் தான் அவர்களின் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டு துல்லியமாக பராமரிக்கப்படுவதாகவும், அதனால் அவர்களுக்கு மட்டும் முதல் தவணையாக ரூ.2000 சில நாட்களில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள நிதியுதவிகள் விழாக்காலங்களில் வழங்கப்படும் சலுகைகள் அல்ல. அவ்வாறு இருந்தால் அது காலதாமதமாக வழங்கப்பட்டால் கூட, அதை ஏழை மக்களால் தாங்கிக் கொள்ள முடியும்.

ஆனால், ஊரடங்கு காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அடித்தட்டு மக்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. கையிலிருந்த சேமிப்புகள் அனைத்தும் கடந்த 10 நாட்களில் கரைந்து விட்ட நிலையில், அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் தான் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.  இந்த நேரத்தில் அவர்களுக்கான உதவி என்பது, உடுக்கை இழந்தவன் கைகள் எவ்வளவு விரைவாக செயல்படுமோ, அவ்வளவு விரைவாக வழங்கப்பட வேண்டும். மணிக்கணக்கில் தாமதம் செய்தால் கூட அது வாழ்வாதாரம் இழந்த ஏழைகளின் வாழ்க்கையில் பெரும் துன்பதையும், துயரத்தையும் ஏற்படுத்தி விடும்.

எனவே, என்னென்ன மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியுமோ, அவை அனைத்தையும் செய்து அடுத்த ஒரு வாரத்திற்குள் முதல் தவணை உணவு மற்றும் நிதியுதவி ஏழை மக்களுக்கு வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். வங்கிக் கணக்குகள் இல்லாதவர்களுக்கும், ஆதாருடன் வங்கிக் கணக்கை இணைக்காதவர்களுக்கும், இந்த ஒரு முறை மட்டும் விலக்களித்து, நிதியுதவியை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு பதிலாக ரொக்கமாக வழங்க வேண்டும். தேவைப்பட்டால் மாநில அரசின் உதவியையும், கட்டமைப்பையும் கேட்டுப் பெறுவதற்கும் மத்திய அரசு தயங்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்

திங்கள், 30 மார்ச், 2020

விவசாயிகளை காப்பாற்ற இந்தியா முழுவதும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.-ER.ஈஸ்வரன்


விவசாயிகளை காப்பாற்ற இந்தியா முழுவதும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல மாநில எல்லைகள் திறக்கப்பட வேண்டும்.

அறுவடைக்கு தயாராக இருக்கின்ற பல காய்கறிகள், பழங்கள், பூக்கள் அறுவடை செய்து என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் முடங்கிப்போய் இருக்கிறார்கள்.  கறந்த பாலையும் விற்க முடியாமல் பால் உற்பத்தியாளர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் எப்போதும் போல் கிடைக்குமென்று அரசு அறிவித்திருந்தாலும் அத்தியாவசிய பொருட்களை தேவையான இடங்களுக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தினசரி உற்பத்தியாகின்ற கோடிக்கணக்கான முட்டைகளும் நாமக்கல்லில் தேங்கி கிடக்கிறது. சரியான வழிமுறைகளை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். காவல்துறைக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். தினசரி கோடிக்கணக்கில் வியாபாரமாகின்ற மல்லிகை, செவ்வந்தி, ரோஜா போன்ற  மலர்கள் செடிகளிலேயே வாடி கொண்டிருக்கின்றன. ஊரடங்கு உத்தரவுக்கு முன் பறிக்கப்பட்ட மலர்கள் ஆங்காங்கே மண்டிகளில் அழுகிப்போய் கிடக்கிறது. தோட்டத்தில் ஒரு கிலோ தக்காளியை 10 ரூபாய்க்குதான் வாங்குகிறார்கள். கோயம்பேடு போன்ற சந்தைகளில் வரத்து குறைவாக இருக்கிறது என்று காரணம் காட்டி ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மாட்டினுடைய மடிகளிலே பாலை விட முடியாது. கன்றுக்குட்டிகளுக்கும் ஒரு அளவுக்கு மேல் தர முடியாது என்ற நிலையில் பாலை கறந்து தரையிலே ஊற்றுகின்ற அவலம் அரங்கேறுகிறது. அரசும், தனியார் நிறுவனங்களும்  உற்பத்தியாகின்ற பாலை கொள்முதல் செய்ய முடியும். குளிரூட்டும் நிலையங்களில் வைக்க முடியும். பால் பவுடர், வெண்ணெய் கட்டிகள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து இருப்பில் வைத்துக்கொள்ள முடியும்.  அரசினுடைய வழிகாட்டுதல் நடைமுறைகள் காவல்துறை அதிகாரிகளுக்கு சேராத காரணத்தினால் ஆங்காங்கே காய்கறி வண்டிகள் தடுக்கப்படுகின்றன. இதற்கான தீர்வை அரசு உடனடியாக காணவில்லை என்று சொன்னால் வறட்சியிலே தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளை விட இப்போது தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகமாவார்கள். தமிழகத்திலே உற்பத்தியாகின்ற காய்கறிகள், மலர்கள், முட்டை போன்ற பொருட்கள் அதிகமாக பக்கத்தில் இருக்கின்ற கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்வது வழக்கம். மற்ற மாநிலங்களுக்கு இவற்றை அனுமதிக்கவில்லை என்று சொன்னால் நாம் எதிர்பார்க்கும் அனைத்து விபரீதங்களும் நடக்கும். அதேபோல பக்கத்து மாநிலங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறையும் நிலவும். அதனால் அத்தியாவசிய பொருட்களுக்காக மாநில எல்லைகள் பாதுகாப்பாக திறக்கப்பட வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்று எல்லை வழியாக பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள முடியும். நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டால் விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்த அத்தனை பணமும் வீணாகப்போகும். கடனை திருப்பி கட்ட முடியாது. இந்தியா முழுவதும் விவசாயிகள் வாங்கி இருக்கின்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு திரு. ராகுல் காந்தி, எம்.பி. அவர்கள் 29-03-2020 அன்று எழுதிய கடிதம்.

கோவிட் - 19 வைரஸ் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு திரு. ராகுல் காந்தி, எம்.பி. அவர்கள் 29-03-2020 அன்று எழுதிய கடிதம்.

மாண்புமிகு திரு. நரேந்திர மோடி
இந்திய பிரதமர்

அன்புள்ள பிரதமருக்கு,

மனித சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் அரசின் நடவடிக்கைக்கு நானும் லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் பக்கபலமாக இருப்போம் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் கோவிட் - 19 எனும் கொரோனா வைரஸை எதிர்த்து அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு தருவோம்.

கோவிட் - 19 எனப்படும் இந்த வைரஸை பரவ விடாமல் தடுப்பதற்கு உலகமே கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்தியா தற்போது 3 வார ஊரடங்கின் மத்தியில் உள்ளது. தேசிய அளவிலான இந்த ஊரடங்கு, நமது மக்கள், நமது சமுதாயம் மற்றும் நமது பொருளாதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதா என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவின் தனித்துவத்தின் நிலைமை குறித்து புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. மற்ற பெரிய நாடுகளில் ஊரடங்கு அமலில் இருந்த போது வகுக்கப்பட்ட வியூகத்தை அடிப்படையாகக் கொண்டு, நாமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. ஊரடங்கால் இந்தியாவில் உள்ள ஏராளமான ஏழை தினக் கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையும் நாம் பொருளாதார நடவடிக்கைக்குள்  பொருத்திப் பார்ப்பது ஒரு தலைப்பட்சமானதாகும்.  முழுமையான பொருளாதார முடக்கத்தால் எற்படும் விளைவு,  கோவிட் - 19 வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகளை விட பேரிழப்பை ஏற்படுத்தும்.

இந்த விவகாரத்தில் அரசு நேர்த்தியுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.  மேலும், உண்மை தெரியாமல் மக்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தை போக்கும் வகையிலும் அரசின் அணுகுமுறை அமையவேண்டும். கோவிட் - 19 வைரஸ் பாதிப்பிலிருந்து முதியவர்களை பாதுகாப்பதும், தனிமைப் படுத்துவதும் நமது முதன்மை நடவடிக்கையாக இருக்க வேண்டும். இந்த வைரஸ் குறித்து அவர்களுக்கு நாசூக்காக விளக்க வேண்டும். மேலும், முதியவர்களுக்கு எத்தகைய பாதிப்பை கோவிட் - 19 வைரஸ் ஏற்படுத்தும் என்பதை இளைஞர்களுக்கு தெளிவாகவும், வலுவாகவும் புரியவைக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான முதியவர்கள் கிராமங்களில் தான் வசிக்கின்றனர். முழுமையான ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கம், வேலை இழந்த லட்சக்கணக்கான இளைஞர்களை தங்கள் கிராமங்களுக்கு திரும்ப செல்ல வைத்துள்ளது. கிராமத்துக்கு சென்றுள்ள இவர்களால், அங்குள்ள பெற்றோர், தாத்தா, பாட்டிகள் மற்றும் முதியவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது அவர்களுக்கு பேராபத்தை விளைவித்துவிடும்.

தற்போது நாம் வலுவான சமுதாய பாதுகாப்பு வலையை உருவாக்க வேண்டும். அனைத்து வழிகளிலும் நாம் ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நிதித் தொகுப்பு முதற்கட்ட நல்ல நடவடிக்கை தான். ஆனால், இந்த தொகுப்பை விரைந்து வழங்குவதுதான் முக்கியம். எப்போதிலிருந்து இந்த நிதி தொகுப்பு வழங்கப்படும் என்பதை தயவுசெய்து தெளிவாக அறிவிக்கவேண்டும்.

 பெரிய அளவிலான மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், ஆயிரக்கணக்கான படுக்கை வசதிகள் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய மருத்துவனைகள் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இத்தகைய கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதிலும், தேவையான மருத்துவ உபகரணங்களை விரைந்து தயாரிப்பதிலும் நமக்கு சிக்கல்கள் உள்ளன. அதேசமயம், வைரஸ் பரவுவதை துல்லியமாகக் கண்டறிய, பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டியதும் நமக்கு அவசியமாகிறது.

அரசு திடீரென பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால், பெரும் பீதியும், குழப்பமும் ஏற்பட்டுவிட்டது. வாடகை தர முடியாததால், நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அரசு தலையிட்டு அவர்களுக்கான வாடகையை உடனே வழங்க வேண்டியது முக்கியமானதாகும். 

பெரும் தொழிற்சாலைகள், சிறு தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலை இழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு பல மாநில எல்லைகளைக் கடந்து நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய் ஈட்ட முடியாமலும், ஊட்டமான உணவு பெற முடியாமலும், அடிப்படை வசதி இல்லாமலும் அவர்கள் பாதிக்கப்பட்டதையே இது வெளிப்படுத்துகிறது. தங்கள் சொந்த ஊருக்குச் சென்று அடைக்கலம் ஆவதற்கு அவர்கள் போராடிக் கொண்டிருப்பதையே இந்த நடைபயணம் காட்டுகிறது. அவர்களுக்கு அடைக்கலம் தரவும், அவர்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணத்தை செலுத்தவும் நாம் உதவ வேண்டியது அவசியமாகிறது. அவர்கள் நிம்மதியுடன் வாழ அடுத்த சில மாதங்களுக்கு இந்த உதவியை செய்ய வேண்டும்.

கோவிட் - 19 வைரஸ் மற்றும் பொருளாதார முடக்கத்தின் காரணமாக அதிர்ச்சி அலையில் சிக்கியுள்ள அவர்களை, நமது முக்கிய நிதி ஆதாரம் மற்றும் வியூகங்கள் மூலம் பாதுகாப்பு அரண் அமைத்து காப்பது கடினம் என்றே தெரிகிறது.  தற்போதிலிருந்து சில மாதங்களுக்கு இந்த நிலை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. நமது பொருளாதாரத்தையும், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், விவசாயிகளை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். அதற்காக நாம் அவர்களுடன் உரையாட வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அவர்களது நலனை பாதுகாக்க சரியாகவும், விரைந்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பெரும் சவாலில் இருந்து மீண்டு வர, நாம் அரசுடன் இணைந்து செயல்படுவோம்.

ஞாயிறு, 29 மார்ச், 2020

நாட்டின் விளிம்பில் இருக்கும் சாமானியனின் ஹீனக்குரல் எனது வீட்டில் தினம் ஒலிக்க தொடங்கி உள்ளது.-சு.வெங்கடேசன் கடிதம்


மாண்புமிகு இந்தியப்பிரதமர் அவர்களுக்கு,

நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதம்.

சவால்களும் துயரமும் ஒன்றினை ஒன்று விஞ்சிக்கொண்டிருக்கும் இந்த நாள்களில் உடனடியாக உங்களின் கவனத்துக்குச் சிலவற்றைக் கொண்டுவரவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

நாடு தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில் உங்களைச் சுற்றியிருக்கும் முக்கிய ஆலோசகர்கள் பல்வேறு காப்புப்பணிகளை உங்களுக்கு விளக்கிக்கொண்டிருக்கக் கூடும். நாட்டின் விளிம்பில் இருக்கும் சாமானியனின் ஹீனக்குரல் எனது வீட்டில் தினம் ஒலிக்க தொடங்கி உள்ளது. தென்தமிழகத்து அறிவார்ந்த சமூகத்தின் அக்கறையுடன் கூடிய குரலில் எனது தொலைபேசியில் நித்தமும் பல விசாரிப்புகள். நாடெங்கிலும் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்வுசெய்யப்பட்ட அத்தனை பேரினை நோக்கியும் இப்படியான கூக்குரல் இடைவிடாது எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கும். இந்தக் குரலில் தற்போதைய சூழலில் பயமும் அக்கறையும் பதட்டமும் மட்டும் நிறைந்து இருக்கின்றன. அக்குரல் நெஞ்சில் அடித்து அழுங்குரலாக ஆகும் முன்னர், உங்களின் கவனத்துக்கு சிலவற்றைக் கொண்டுவர விரும்புகிறேன்.

விமரிசிக்கவோ, வேதனைப்படுத்தவோ எண்ணி அல்ல. உண்மையை உங்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதன் மூலம் தீர்வினை நோக்கி விரைவதற்கான முயற்சியே. முகம்தெரியாத அந்தக் கிருமியை முன்னேறவிடாமல் தடுக்க முடியும் என்ற மிச்சமிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையிலே இதனை எழுதுகிறேன்.

1. "உண்மையைச் சொல்லுவதும் பிற தேசத்தில் நிகழ்ந்த மருத்துவ நெருக்கடி அனுபவங்களை பகிர்தலும்" மட்டுமே நம்மைக் காக்கும் என்பது இங்கிலாந்து, அமெரிக்க முன்னோடி மருத்துவ ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து. இங்கே, இப்போது சொல்லப்படுபவை உண்மையான புள்ளிவிவரங்களா?

2. இந்தியா ஏன் இன்னமும் தீவிர சோதனைத் திட்டத்துக்குள் இறங்க மறுக்கிறது? "Test, test, test" இதுதான் தீர்வு என பல நாடுகள் சொன்ன பின்னரும் இங்கு ஏன் பலருக்கும் சோதனை அவசியமில்லாதது போன்ற நிலை? தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் நோயை முடக்கியது சோதனையால்தான் என்கிற சேதி உங்களை எட்டவில்லையா?

3. நமக்கு அருகிலுள்ள நாடு 10,00,000 பேருக்கு 6800 பேரினை சோதனை செய்யும்போது நாம் வெறும் 18பேரைத்தான் சோதிக்கின்றோம். ஆரம்பத்தில் ICMR அனைவருக்கும் 'சோதனை தேவையில்லை' என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இப்பொழுது அது 'அதிகம் பேருக்கு சோதிக்கலாம்' என்ற நிலைப்பாட்டிற்கு வந்த பின்னரும் போதிய அளவு டெஸ்டிக் கிட் வந்த பின்னரும் ஏன் இன்னும் தாமதம் பிரதமர் அவர்களே?

4. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இந்தியாவில் "25 கோடிமக்கள் தொற்றுப் பெறுவர். 25 இலட்சம் பேர்வரை நோயுறலாம்; மருத்துவம் தேவைப்படலாம்" என்கின்றனர். நம்மிடம் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவமனைகள், உபகரணங்கள் ஆகிய எந்த ஒன்றிலும் இதை மீட்டெடுக்கும் எண்ணிக்கை இல்லையே. இந்நிலையில் என்ன செய்யப்போகிறோம்? இந்த ஆய்வுக்கும் புள்ளிவிபரங்களுக்கும் அர்த்தமேதுமில்லை என்று விட்டுவிடப்போகிறோமா அல்லது அதற்கு முகங்கொடுக்கப் போகிறோமா? இதனைப்பற்றி அரசு எதுவும்  சொல்லவில்லையென்றால் எப்படித்தான் புரிந்துகொள்வது?

5. பிற நோய்களில் கவனம் குறைவதும், அந்த நோய்களுக்கான புற நோயாளி சிகிச்சை நிலையங்கள் மூடப்படுவதும் எவ்வளவு ஆபத்து? நமது நாட்டில் காய்ச்சலில் ஏற்படும் மரணத்தைவிட வாழ்வியல் நோயில் ஏற்படும் மரணங்கள்தானே நான்கு மடங்கு அதிகம்?

6. தனியார் மருத்துவமனைகள் இன்னமுமே முன்வர தயங்கித் தடுமாறுவதை உணர முடிகிறது. நீங்கள்தானே அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்த மட்டில் 1750 வெண்டிலேட்டர்கள் அரசிடம் என்றால், 465 தனியாரிடம் உள்ளன. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பலமும் கட்டமைப்பும்கொண்ட தனியார் மருத்துவமனைகளை கரோனாவுக்கு எதிரான அரசின் செயல்திட்டத்துக்குள் கொண்டுவர வேண்டாமா?

7. நேற்றைய தினம் ஆயுஷ் துறையினரிடம் பேசியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. அவர்கள் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள். சீனம் வுகானுக்கு மட்டும் 2000 சீனமுறை மரபு மருத்துவர்களை அனுப்பியதும் அவர்களது QPD கசாயம் முதலுதவி செய்ததும் பதிவாகி உள்ளதே, நிலவேம்போ, கபசுரகுடினீரோ அவர்கள் சொல்வதை அறிஞர் கூட்டத்தைக்கொண்டு ஆலோசித்து நாடெங்கும் ஊற்றி நம்பிக்கையைக் கொடுங்களேன். வலியுடன் காத்திருக்கும் கூட்டத்துக்கு அக்கசாயம், நோய் எதிர்ப்பாற்றலை மட்டுமன்று பெரிய உளவியல் உறுதியையும் சேர்த்தல்லவா தரும்?

8. "வராது; வந்தால் பார்த்துக் கொள்ளலாம்" என்ற வரிகள் அழும் குழந்தைக்கு நிலவைக் காட்டி உறங்க வைக்கும் போக்கு. சில நேரங்களில் ஊடகம் மூலம் நாங்கள் பெறும் செய்தி அப்படித்தானே உள்ளது. வெகுசனத்தின் வலி அவர்கள் மூளைக்கு எட்டும் முன்னரே அவர்கள் மனத்தை எட்டி முரணான நடவடிக்கைகளுக்கு முன்னேற வைத்துவிடும் என்பதை அறிவீர்கள்தானே! முன்வரிசைக் காவலர்களாய் உள்ள 7இலட்சம் மருத்துவர்களின் எண்ணிக்கை பத்தாது என்றால் 2.25 இலட்சம் ஆயுஷ் மருத்துவர்களையும் சேர்த்து முதல் நிலை பாதுகாப்பிற்கு நிறுத்தலாமே!

9. அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா அதிபர் ஜீ ஜின்பிங் உடன் நீண்ட உரையாடலை நடத்தியதாகவும், இந்த வைரஸ் பற்றிய வலுவான புரிதலை சீனா வைத்திருப்பதாகவும் அந்த நாட்டோடு இணைந்து பணியாற்றுவோம் என நேற்று முன் தினம் தெரிவித்துள்ளார். சீனாவின் அனுபவங்களை நாமும் ஏன் பரிமாறிக் கொண்டு இந்தியாவில் பயன்படுத்தக் கூடாது என்பதையும் தாங்கள் உடனடியாக பரிசீலிக்க வேண்டும். 
"சீன வைரஸ்" என முதலில் சாடிய டிரம்ப் இன்று இறங்கி வந்து அமெரிக்க மக்களை காப்பதற்கு சீன அனுபவம் தேவை என்ற நிலை எடுக்கும் போது மாமல்லபுரத்தில் இந்திய- சீன நல்லுறவுக்கான பெரும் நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ள சூழலில் நீங்கள்  அத்தகைய முன் முயற்சியை மேற்கொள்ளலாமே.

10. நான்கு மணிநேர அவகாசத்தில் ஊரடங்கை அறிவித்துவிட்டீர்கள். எந்த முன்னேற்பாட்டினையும் அரசின் எந்த துறையும் செய்திராத பொழுது, தனிமனிதன் என்ன செய்திருக்கமுடியும்? உங்கள் அமைச்சகத்தில் உள்ள வாகன ஓட்டுநர்களின் குடும்ப உறுப்பினர்கள் எங்கெங்கு சிக்கினார்கள் என்பதைக் கேட்டாலே போதுமே? நிலமையின் விபரீதம் முழுமையும் புரியும்.
தில்லியின் ஆனந்த விகாரிலும் காசர்கோட்டின் தொழிற்கூடத்திலும் ஶ்ரீபெரும்புதூரின் ஊர் விளிம்புகளிலும் சொந்த ஊர்க்கு எப்படித் திரும்புவது என விழிபிதுங்கி ஒட்டிய வயிறுடன் இலட்சக்கணக்கானோர் நிற்கின்றனரே. ஒட்டிய வயிற்றில் ஒருவேளை அந்த பாதகக் கிருமியும் ஒட்டியிருந்தால் இந்த பரவல் தடுப்பு உத்தியே பாதாளத்துக்குப் போய்விடுமே! உங்கள் ஆலோசனைக்குழு என்ன செய்யப்போகின்றது?

11. நாற்பத்தி ஐந்து கோடி இந்தியர்கள் அன்றாடம் கூலிவேலை செய்து பிழைப்பவர்கள். அவர்களின் கால்களை வயிற்றோடு இறுக கட்டும் முடிவை நீங்கள் அறிவித்தபோது, அது ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி எத்தனை நூறு கேள்விகளுக்கு உங்களின் அமைச்சகம் விடைகண்டறிந்திருக்க வேண்டும். ஆனால் எந்த விடையையும் நீங்கள் இன்றுவரை சொல்லவில்லையே. காட்டுத்தீ எரியத்தொடங்கும் போது மெளனம் எனும் காற்று நெருப்பை அணைக்காது; அதிகப்படுத்தவே செய்யும்.

12. தினம் முன்நின்று விஷயங்களைப் பகிரவேண்டிய அரசின் முதன்மை நலவாழ்வுச் செயலரும் மருத்துவ அமைச்சரும் ஓரிரு மணித்துளிகளேனும் வெற்றுச்சொற்களைக் கோர்த்து பேசி நகராமல் விவரங்களையும் வியூகங்களையும் திடமாய்ப் பேசி மக்களை நித்தம் பாதுகாப்பாய் அரவணைக்க வேண்டாமா?

இவையெல்லாம் எதிர்கட்சி உறுப்பினராகிய எனது கேள்விகளல்ல, கண்ணுக்குத்தெரியாத அந்த வைரஸ் சமூகத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் கேள்வி.
லட்சுமண ரேகையை மதிக்க அண்ணனும் தம்பியும் மதினியும் மிச்சமிருக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில் எழும் கேள்வி.

வெளிமாநிலங்களில் வாடும் தமிழர்க்கு வாழ்வாதார உதவிகளை உறுதி செய்க! - Dr.S.ராமதாஸ்



இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் அதன் நோக்கத்தை எட்டுவதற்கு பயனுள்ளவையாக உள்ளன. அதேநேரத்தில்  வாழ்வாதாரம் தேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் நிலைமை மிகவும் வேதனை அளிக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மக்கள் கோவா மாநிலத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் மீன்பிடி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக  இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் மீன்பிடி துறைமுகங்கள் மூடப்பட்டு விட்ட நிலையில், அங்கு பணியாற்றி வந்த தமிழ்நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.