திங்கள், 30 மார்ச், 2020

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு திரு. ராகுல் காந்தி, எம்.பி. அவர்கள் 29-03-2020 அன்று எழுதிய கடிதம்.

கோவிட் - 19 வைரஸ் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு திரு. ராகுல் காந்தி, எம்.பி. அவர்கள் 29-03-2020 அன்று எழுதிய கடிதம்.

மாண்புமிகு திரு. நரேந்திர மோடி
இந்திய பிரதமர்

அன்புள்ள பிரதமருக்கு,

மனித சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் அரசின் நடவடிக்கைக்கு நானும் லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் பக்கபலமாக இருப்போம் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் கோவிட் - 19 எனும் கொரோனா வைரஸை எதிர்த்து அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு தருவோம்.

கோவிட் - 19 எனப்படும் இந்த வைரஸை பரவ விடாமல் தடுப்பதற்கு உலகமே கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்தியா தற்போது 3 வார ஊரடங்கின் மத்தியில் உள்ளது. தேசிய அளவிலான இந்த ஊரடங்கு, நமது மக்கள், நமது சமுதாயம் மற்றும் நமது பொருளாதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதா என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவின் தனித்துவத்தின் நிலைமை குறித்து புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. மற்ற பெரிய நாடுகளில் ஊரடங்கு அமலில் இருந்த போது வகுக்கப்பட்ட வியூகத்தை அடிப்படையாகக் கொண்டு, நாமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. ஊரடங்கால் இந்தியாவில் உள்ள ஏராளமான ஏழை தினக் கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையும் நாம் பொருளாதார நடவடிக்கைக்குள்  பொருத்திப் பார்ப்பது ஒரு தலைப்பட்சமானதாகும்.  முழுமையான பொருளாதார முடக்கத்தால் எற்படும் விளைவு,  கோவிட் - 19 வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகளை விட பேரிழப்பை ஏற்படுத்தும்.

இந்த விவகாரத்தில் அரசு நேர்த்தியுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.  மேலும், உண்மை தெரியாமல் மக்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தை போக்கும் வகையிலும் அரசின் அணுகுமுறை அமையவேண்டும். கோவிட் - 19 வைரஸ் பாதிப்பிலிருந்து முதியவர்களை பாதுகாப்பதும், தனிமைப் படுத்துவதும் நமது முதன்மை நடவடிக்கையாக இருக்க வேண்டும். இந்த வைரஸ் குறித்து அவர்களுக்கு நாசூக்காக விளக்க வேண்டும். மேலும், முதியவர்களுக்கு எத்தகைய பாதிப்பை கோவிட் - 19 வைரஸ் ஏற்படுத்தும் என்பதை இளைஞர்களுக்கு தெளிவாகவும், வலுவாகவும் புரியவைக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான முதியவர்கள் கிராமங்களில் தான் வசிக்கின்றனர். முழுமையான ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கம், வேலை இழந்த லட்சக்கணக்கான இளைஞர்களை தங்கள் கிராமங்களுக்கு திரும்ப செல்ல வைத்துள்ளது. கிராமத்துக்கு சென்றுள்ள இவர்களால், அங்குள்ள பெற்றோர், தாத்தா, பாட்டிகள் மற்றும் முதியவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது அவர்களுக்கு பேராபத்தை விளைவித்துவிடும்.

தற்போது நாம் வலுவான சமுதாய பாதுகாப்பு வலையை உருவாக்க வேண்டும். அனைத்து வழிகளிலும் நாம் ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நிதித் தொகுப்பு முதற்கட்ட நல்ல நடவடிக்கை தான். ஆனால், இந்த தொகுப்பை விரைந்து வழங்குவதுதான் முக்கியம். எப்போதிலிருந்து இந்த நிதி தொகுப்பு வழங்கப்படும் என்பதை தயவுசெய்து தெளிவாக அறிவிக்கவேண்டும்.

 பெரிய அளவிலான மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், ஆயிரக்கணக்கான படுக்கை வசதிகள் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய மருத்துவனைகள் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இத்தகைய கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதிலும், தேவையான மருத்துவ உபகரணங்களை விரைந்து தயாரிப்பதிலும் நமக்கு சிக்கல்கள் உள்ளன. அதேசமயம், வைரஸ் பரவுவதை துல்லியமாகக் கண்டறிய, பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டியதும் நமக்கு அவசியமாகிறது.

அரசு திடீரென பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால், பெரும் பீதியும், குழப்பமும் ஏற்பட்டுவிட்டது. வாடகை தர முடியாததால், நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அரசு தலையிட்டு அவர்களுக்கான வாடகையை உடனே வழங்க வேண்டியது முக்கியமானதாகும். 

பெரும் தொழிற்சாலைகள், சிறு தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலை இழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு பல மாநில எல்லைகளைக் கடந்து நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய் ஈட்ட முடியாமலும், ஊட்டமான உணவு பெற முடியாமலும், அடிப்படை வசதி இல்லாமலும் அவர்கள் பாதிக்கப்பட்டதையே இது வெளிப்படுத்துகிறது. தங்கள் சொந்த ஊருக்குச் சென்று அடைக்கலம் ஆவதற்கு அவர்கள் போராடிக் கொண்டிருப்பதையே இந்த நடைபயணம் காட்டுகிறது. அவர்களுக்கு அடைக்கலம் தரவும், அவர்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணத்தை செலுத்தவும் நாம் உதவ வேண்டியது அவசியமாகிறது. அவர்கள் நிம்மதியுடன் வாழ அடுத்த சில மாதங்களுக்கு இந்த உதவியை செய்ய வேண்டும்.

கோவிட் - 19 வைரஸ் மற்றும் பொருளாதார முடக்கத்தின் காரணமாக அதிர்ச்சி அலையில் சிக்கியுள்ள அவர்களை, நமது முக்கிய நிதி ஆதாரம் மற்றும் வியூகங்கள் மூலம் பாதுகாப்பு அரண் அமைத்து காப்பது கடினம் என்றே தெரிகிறது.  தற்போதிலிருந்து சில மாதங்களுக்கு இந்த நிலை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. நமது பொருளாதாரத்தையும், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், விவசாயிகளை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். அதற்காக நாம் அவர்களுடன் உரையாட வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அவர்களது நலனை பாதுகாக்க சரியாகவும், விரைந்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பெரும் சவாலில் இருந்து மீண்டு வர, நாம் அரசுடன் இணைந்து செயல்படுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக