செவ்வாய், 24 மார்ச், 2020

தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் - SDPI


கொரோனா பரவலைத் தடுக்க 144 தடை உத்தரவு தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவுக்கு அரசு என்னென்ன விதிமுறைகளை விதித்துள்ளதோ அவை அனைத்திற்கும் கட்டுப்பட்டு, கொரோனா பரவலை தடுத்திட முழு ஒத்துழைப்பை பொதுமக்கள் நல்கிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளையில் இந்த திடீர் உத்தரவு காரணமாக பொருளாதார இழப்புகள் ஏற்படும், ஏழை எளிய மக்களின் வருமானத் தடை காரணமாக அவர்கள் பெரும் இன்னல்களை அனுபவிக்க நேரிடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனைக் கருத்தில்கொண்டும் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் ரூ.3250 கோடிக்கு பல்வேறு நிவாரண திட்டங்களை அறிவிப்பு செய்துள்ளார். தமிழக முதல்வரின் அறிவிப்பை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கின்றது.

தமிழக அரசு வழங்கவுள்ள உதவித் திட்டங்கள் மக்களை நேரடியாக அவர்களின் வீடுகளில், கைகளில் சென்று சேரும்படி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.


அதோடு அண்டை மாநிலமான கேரளாவைப் போன்று இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். அதற்காக மத்திய அரசிடமிருந்தும் கூடுதல் நிதியை தமிழக அரசு கேட்டுப்பெற வேண்டும்.

ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு ஒதுக்கிய 950 கோடி ரூபாய் என்பது தமிழகத்திற்கு போதுமானது அல்ல. கேரள அரசு இதற்கென்று சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. எனவே மிகப்பெரும் அளவில் முடங்கியுள்ள தமிழகத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோல் கொரோனா முடக்கத்தால் வங்கிகளில், தனியார் நிறுவனங்களில் கடன் வாங்கி தங்கள் தொழில்களை மேற்கொள்பவர்கள் தொழில் முடக்கம் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அதன் காரணமாக தாங்கள் வாங்கிய கடனுக்கான தவனைத் தொகைகளை செலுத்த முடியாமல் நிறுவனங்களின் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். குறிப்பாக சரக்கு வாகனங்கள் மற்றும் ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட மகிழுந்துகளை வைத்திருப்பவர்கள் அத்தகைய நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். ஆகவே, தமிழக அரசு இதுபோன்ற நிலைமைகளையும் கவனத்தில்கொண்டு 6 மாத காலத்திற்கு இத்தகைய தவனை முறை கடன்களை கட்டுவதற்கு விலக்கினை அளிக்கும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த இக்கட்டான சூழலில் கொள்ளை லாபம், பதுக்கல் போன்ற நடவடிக்கைகளில் வியாபாரிகள் தயவுசெய்து ஈடுபடக்கூடாது. நியாயமான விலையில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக