வியாழன், 26 மார்ச், 2020

விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யவும், நிலுவைத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்


விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யவும், மக்காச்சோளத்தை நியாயமான விலைக்கு கொள்முதல் செய்யவும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

மத்திய மாநில அரசுகள் – தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சிறு குறு தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வங்கியில் வாங்கிய கடனுக்கான மாத தவணையை 6 மாத காலத்திற்கு தள்ளி வைக்கவும், விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யவும், மக்காச்சோளத்தை நியாயமான விலைக்கு கொள்முதல் செய்யவும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

நம் தேசத்திலும் கொரோனா என்ற எதிர்பாராத கொடிய நோயால் அனைவருமே பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக சிறு குறு மற்றும் குடிசைத் தொழில், கட்டுமானத் தொழில், வேளாண்மைத் தொழில் போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் பெரும்பாலானோர் வங்கிகளில் கடன் வாங்கி தொழிலில் ஈடுபட்டவர்கள். தற்போதைய கொரோனா பாதிப்பால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலை வாய்ப்பை இழந்து, வருவாய் ஈட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கியில் கடன் வாங்கியவர்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணையை செலுத்த முடியாத காரணத்தால் தவணையை செலுத்த குறைந்த பட்சம் 6 மாத காலம் தள்ளி வைக்க வேண்டும். இப்படி தவணைக்கான காலத்தை தள்ளி வைக்கும் போது இந்த 6 மாத காலத்திற்கு கூடுதல் வட்டி எதுவும் வசூலிக்கக்கூடாது.

முடியுமானால் இந்த 6 மாத காலத்திற்கான வட்டி விகிதத்தை குறைக்கவோ அல்லது சலுகை அளிக்கவோ முன்வர வேண்டும். விவசாயத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகை மேலும் கால தாமதம் ஆகாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2 மாதத்திற்கு முன்பு மக்காச் சோளம் ஒரு குவிண்டால் விலை ரூ. 1,850 ஆக இருந்தது. இப்போதைய கொரோனா பாதிப்பால் மக்காச் சோளம் தேக்கமடைந்திருப்பதோடு ஒரு குவிண்டால் விலை ரூ. 1,450 ஆக இருக்கிறது.

ஆகவே மக்காச்சோளத்தை நியாயமான விலைக்கு கொள்முதல் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் நோயின் பரவல் காரணத்தால் அனைவரும் அச்சமடைந்திருப்பதோடு, பல தரப்பினர் அன்றாட வாழ்க்கைக்கே வருமானம் ஈட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே மத்திய மாநில அரசுகள் – தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வங்கி வட்டிக்கான தவணையை தள்ளி வைக்கவும், மக்காச்சோளத்தை நியாயமான விலைக்கு கொள்முதல் செய்யவும், விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யவும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக