சனி, 21 மார்ச், 2020

கொரோனா வைரஸிற்கு சித்தா மருத்துவ முறையில் தடுப்பு மருந்தை கண்டறியும் முன்னெடுப்புகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்! - SDPI


கொரோனா வைரஸிற்கு எதிராக பாரம்பரிய சித்தா மருத்துவ முறையில் தடுப்பு மருந்தை கண்டறியும் முன்னெடுப்புகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்! - எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் வலியுறுத்தல்.


எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் போர்க்கால நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு எல்லோரும் பாராட்டத்தக்க வகையிலான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசின் நடவடிக்கைகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி பாராட்டுகின்றது.


கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டறிவதில் உலக நாடுகள் மும்முரமாக ஈடட்டுபட்டுள்ளன. அந்த முயற்சிகள் அனைத்தும் அலோபதி மருந்தினை நோக்கி மட்டுமே உள்ளன. உலகமே அதனை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இந்த சூழலில் தமிழக அரசு, நமது மாநிலம் சார்ந்த பாரம்பரிய சித்த மருத்துவத்திலிருந்தும் இந்த வைரஸ் பரவலுக்கு எதிரான மருந்து கிடைக்குமா என்பதை ஆலோசிக்க வேண்டிய தருணமிது.

இதுவரை கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பு மருந்து கண்டறியப்படாத சூழலில், தமிழக அரசு அலோபதி மருந்து தவிர்த்து மாற்று மருத்துவ முறைகளில் தீர்வை கண்டறிய முடியுமா என்பதையும் ஆராய வேண்டும்.

இதற்கு முன்னர் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவலின் போது முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் சித்த மருத்துவர்கள் கண்டறிந்த மருந்துகளை அரசாங்கம் மூலமாகவே கொடுக்கச் செய்தார். அதன் மூலம் அந்த நோய் பரவல் கட்டுக்குள் வந்தது. அதுமுதல் நிலவேம்பு கசாயம் பிரபலமானது.

அதேபோல் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகவும் நமது பாரம்பரிய சித்தா மருத்துவத்தில் தடுப்பு மருந்துகளை கண்டறியும் வகையிலான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ்க்கு எதிராக தங்களிடம் மருந்துகள் உள்ளதாக ஆங்காங்கே சித்தா மருத்துவர்களிடம் இருந்து குரல்கள் எழுந்துவருகின்றன. ஆனால் உலகமே அலோபதி மருந்துகளை எதிர்நோக்கி இருப்பதால் அவர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. எனவே, தமிழக அரசு கொரோனோ உள்ளிட்ட வைரஸ் பரவலுக்கு எதிராக, சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் அலோபதிக்கு மாற்றான பாரம்பரிய மருந்துகளை கண்டறியும் நோக்கில் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஒரு கலந்தாலோசனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோல் சித்தா மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ளும் சென்னையில் செயல்படும் நேசனல் இன்ஸ்டியூட் ஆஃப் சித்தா சயின்ஸ் நிறுவனத்தையும் தமிழக அரசு இதுதொடர்பாக அணுக வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர் தணிகாசலம் அவர்கள் தான் கண்டறிந்த வைரஸ் காய்ச்சலுக்கு எதிரான மருந்து குறித்து ஜெனிவாவில் உள்ள ஐ.நா.விலும் அறிக்கை அளித்துள்ளார். அவருடைய அந்த மருத்துவத்துடன் அலோபதியையும் இணைத்து சீனா கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக பயன்படுத்தி நிவாரணத்தை கண்டறிந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகவே, அவரையும் தமிழக அரசு உட்படுத்தி கொரோனா வைரஸ்க்கு எதிரான மாற்று மருத்துவ மருந்தினை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

கொரோனா பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற வகையில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தமிழக அரசு, அலோபதி தவிர்த்த மாற்று மருத்துவ முறைகளில் குறிப்பாக சித்த மருத்துவத்தில் அதற்கான நிவாரணியை கண்டறிவதை நோக்கிய முன்னெடுப்பு நடவடிக்கைகளையும் வேகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக