திங்கள், 23 மார்ச், 2020

விசு அவர்களின் மறைவு.. எனது இதய அஞ்சலி. - பொன். இராதாகிருஷ்ணன்


விசு அவர்கள் நல்லது செய்ய வேண்டும் என எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்தவர்;  பல்துறை வேந்தருக்கு எனது இதய அஞ்சலியை  காணிக்கையாக்குகின்றேன்.  - பொன். இராதாகிருஷ்ணன்

தமிழ்த்திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனரும், நடிகரும், திரைக்கதை வசனகர்த்தாவும் பல்துறை வல்லுநரும், சிறந்த தேசபக்தரும், பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்ட அன்பு தலைவருமான திரு. விசு அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவருடைய பிரிவால் வாடுகின்ற குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இறைவன் மன ஆறுதலை அளிக்க வேண்டுமென பிரார்த்திப்பதுடன், அவரது ஆன்மா நற்கதி அடையவும் பிரார்த்திக்கின்றேன்.

திரு. விசு அவர்களோடு எனக்கு நேரடி பழக்கம் ஏற்பட்ட பின்பு அவரது அறிவுக்கூர்மை, அசைக்கமுடியாத தேசபக்தி போன்ற இயல்புகளை கண்டு நான் வியந்திருக்கிறேன். 

பாரதியாருடைய விழாவை ஆண்டுதோறும் நடத்தி இன்றைய தலைமுறையினருக்கு பாரதியின் பெருமைகளையும், பாரதநாட்டின் சிறப்புகளையும் அவர் எடுத்து முன்வைத்த பாங்கினை பார்த்து வியந்து போயிருக்கிறேன்.

சின்னத்திரையில் அவர் நடத்திய "அரட்டை அரங்கம்" நிகழ்ச்சி  மூலமாக சமூகத்தின் பல பிரச்சினைகளையும் அவர் எடுத்து வைத்து விவாதித்த பாங்கு அற்புதமானது. அதேபோன்ற நிகழ்ச்சிகளை தற்போது பலர் கை கொண்டு வருவது நாம் பார்த்தாலும் கூட அதற்கான பாதையை வகுத்து தந்த விசு அவர்களுக்கு நிகராக யாரையும் கூற முடியாத அளவுக்கு  இன்றுவரை இருக்கின்ற நிலையை பார்க்கிறோம்.

தனது திரைப்படங்களில் எவ்வித ஆபாசமும் இல்லாமல், நம் குடும்பங்களில் அன்றாடம் நடந்து வருகின்ற குடும்ப பிரச்சனைகளை எடுத்துக் காட்டி, அதற்கான தீர்வுகளையும் கூறி திரைப்படங்களை இயக்குகின்ற தன்மை கொண்டவர். இன்றைய திரையுலகிற்கு அவரது படங்கள் ஒரு பாடமாக அமையும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது.

மனதில் பட்டதை மறைக்கத் தெரியாதவர். அதேபோல, தான் பேசியது எழுதியது தவறு என கருதினால் அதற்கு மன்னிப்புக் கேட்கவும் தயங்காதவர்.  தன்னை மனம் வருந்தும்படி எவர் செய்திருந்தாலும், அவர்கள் அதற்காக ஒருவேளை வருந்துவார்கள் ஆகின், அவர்களை மன்னிக்க தெரிந்த மனமும் கொண்டவர். சுருங்கச்சொன்னால், திரையுலகத்தில் ஒரு மாபெரும் ஜாம்பவானாக திகழ்ந்த பெருந்தகை இயக்குனர் விசு அவர்கள்.

தனது இறுதி மூச்சு இருந்த வரை நாட்டிற்கும், இந்த தமிழ் சமூகத்திற்கும் நல்லது செய்ய வேண்டும் என எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்த பல்துறை வேந்தருக்கு எனது இதய அஞ்சலியை  காணிக்கையாக்குகின்றேன். இறைவனின் திருப்பாதத்தில் இந்த நல்ல மனிதரின் ஆன்மா இளைப்பாற எல்லாம் வல்ல அன்னை சக்தியை மீண்டும் பிரார்த்திக்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக