ஞாயிறு, 22 மார்ச், 2020

கொரோனா தொற்று பேரிடர் - தமிழ்நாடு அரசுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்


கொரோனா தொற்று பேரிடர் - தமிழ்நாடு அரசுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்

கொரோனா தொற்றுப் பரவல் உடல்நல சிக்கலோடு இணைந்து பொருளாதார சிக்கலையும் மக்கள் மீது திணித்திருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவின் பின்னே உள்ள முக்கியத்துவம் சரியானதாக இருக்கும் போதிலும், பொருளாதார நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் இருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக இருக்கிறது.

அன்றாட ஊதியப் பணியாளர்களும், முறைசாரா தொழில்களில் இருப்பவர்களும் (informal sectors), துணிக்கடை, நகைக்கடை போன்ற பெரிய கடைகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களும், கடைநிலை ஊழியர்களும், இதர தினசரி உழைப்பாளர்களும் என பெரும்பான்மை மக்கள் பொருளாதார ரீதியாக மிகப் பெரும் இன்னலை சந்திக்க இருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப ஊழியர்களைப் போன்று வீட்டுக்குள் அமர்ந்து வேலையை முடித்து ஊதியம் பெறும் நிலை பெரும்பான்மை மக்களுக்கு கிடையாது. நோய்த் தாக்குதலோடு இணைந்து வந்திருக்கிற பொருளாதார நெருக்கடி பெரும்பான்மை உழைக்கும் மக்களை பெரும் சிக்கலுக்குள் தள்ளிட இருக்கிறது. அவசர கால அடிப்படையில் அதனை சரிசெய்து மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

பின்வரும் கோரிக்கைகளை மே பதினேழு இயக்கம் தமிழ்நாடு அரசுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கிறது.

* முறைசாரா பணியாளர்களுக்கான நிதிச்சுமையை அரசு ஏற்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மாதத்தின் அத்தியாவசியத் தேவைக்கு அவசியமான நிதியினை அரசு உடனடியாக அளித்திட வேண்டும். 

* பெரிய கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, விடுமுறையாக இருந்தாலும் ஊதியம் அளிக்கப்பட வேண்டியதை உறுதி செய்திட வேண்டும்.

* அரசு மருத்துவமனைகளின் முக்கியத்துவம் எத்தகையது என்பதை கொரோனா தொற்று நம் அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கான பரிசோதனை (Mass testing) பரந்த அளவில் நடத்தப்பட வேண்டும். பரிசோதனையும், சிகிச்சையும் மக்களுக்கு இலவசமாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் மருத்துவ சோதனைகளுக்கு மற்றும் சிகிச்சைகளுக்கு மக்களிடம் பணம் பெறுதல் கூடாது.

* கடன்கள், EMI போன்றவற்றிலிருந்து அனைத்து நிறுவனங்களும் மக்களுக்கு தற்காலிக விலக்கு அளித்திட அரசு உத்தரவிட வேண்டும். 

* மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் குறைவாகவே இருப்பதாக பல்வேறு இடங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடியாக மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கென தனி நிதியினை ஒதுக்கிட வேண்டும். மருத்துவப் பணியாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக மேற்கொள்வதை உறுதி செய்திடும் வகையில் அவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் போதிய கால அளவிலான ஓய்வு வழங்கப்பட வேண்டும்.

* தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதால் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான வெண்டிலேட்டர்களின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. இப்போது வரை கொரோனா தொற்று நிற்கும் காலக்கெடு என்பது தெரியாததால், அதிக அளவிலான வெண்டிலேட்டர்களை அவசரகாலத் தேவை அடிப்படையில் உற்பத்தி செய்திட உத்தரவிட வேண்டும்.

* ரேசன் பொருட்கள் அனைத்தும் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கிடும் வகையில் ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

* துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மிகப் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. அவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்திடும் வகையில் அதி உயர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும். இந்த உபகரணங்கள் மற்றும் கருவிகள் இந்த இடர் காலத்தோடு மட்டுமே நில்லாமல் நிரந்தரமாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தின் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் அரசே வழங்கிட வேண்டும்.

* பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதைப் போல, ஒவ்வொரு பகுதியிலும் பொது சமையலறைகள் உருவாக்கப்பட்டு வீடற்ற மக்களுக்கும், வறுமையில் இருக்கும் மக்களுக்கும் உணவு நேரடியாக வழங்கிட வேண்டும்.

* வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கான வாடகைப் பணத்தினை தற்காலிகமாக தளர்த்திடும் வகையில் அரசு உத்தரவிட வேண்டும்.

* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பணம் பெருமளவில் வழங்கப்படாமல் இருக்கிறது. அதனை உடனடியாக வழங்குவதுடன் மீதமிருக்கும் நாட்களுக்கான பணத்தையும் முன்பணமாக வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும்.

* தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய GST இழப்பீடு தொகையான 7214 கோடி ரூபாயை இன்னும் மத்திய அரசு வழங்காமல் இருக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் அதனை உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் அத்தியவாசியப் பொருட்களின் மீதான GST வரி தற்காலிகமாக நீக்கப்பட்டு பொருட்கள் வரியின்றி விற்பனை செய்யப்பட வேண்டும்.

* கேரள அரசு கொரோனா பேரிடர் நிதியாக 20000 கோடியினை ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழக அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் எதுவும் இதுவரை வராமல் இருப்பது ஏமாற்றத்தையே அளிக்கிறது. “கவனமாக இருங்கள்” என்கிற வாய்மொழி எச்சரிக்கையும், தடுப்பு நடவடிக்கைகளும் மட்டுமே மக்களை இந்த பேரிடரிலிருந்து மீட்க உதவாது. உடனடியாக பேரிடர் நிதி அறிவிப்பினை அரசு செய்ய வேண்டும்.

இந்த முக்கியமான கால சூழலில் தொற்றைத் தடுப்பதற்கான அறிவிப்புகள் மற்றும் அறிவுரையோடு மட்டுமே நில்லாமல், அரசின் கடமையை உணர்ந்து பேரிடர் நிதி ஒதுக்கீடு உடனடியாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் மே பதினேழு இயக்கம் தமிழ்நாடு அரசினையும், இந்திய அரசினையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக