செவ்வாய், 24 மார்ச், 2020

மின்னல் வேகத்தில் கொரோனா: சிறப்பு மருத்துவமனைகள் அமைக்க வேண்டும்! - DR .அன்புமணி ராமதாஸ்


மின்னல் வேகத்தில் கொரோனா: சிறப்பு
மருத்துவமனைகள் அமைக்க வேண்டும்! - DR .அன்புமணி ராமதாஸ்

உலக அளவிலும், இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்திருக்கிறது. கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட போது இருந்ததை விட உலக அளவில் 17 மடங்கு வேகத்திலும், இந்திய அளவில் 45 மடங்கு வேகத்திலும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், அதன் பரவலைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகளும், பொதுமக்களும் இணைந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

சீனாவின் வூகான் மாநிலத்தில் கடந்த ஆண்டு திசம்பர் 31-ஆம் தேதி கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை மார்ச் 6&ஆம் தேதி தொட்டது. அதாவது 67 நாட்களில் கொரோனா தொற்று ஒரு லட்சமாக அதிகரித்தது. அடுத்த 11 நாட்களில் இது இரண்டு லட்சமாகவும், அடுத்த நான்கு நாட்களில், அதாவது மார்ச் 21-ஆம் தேதி மூன்று லட்சமாகவும் அதிகரித்தது. நேற்றிரவு நிலவரப்படி 3,73,548 ஆக இருந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இன்னும் சிறிது நேரத்தில், அதாவது அடுத்த 3 நாட்களில் 4 லட்சத்தை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு 3 லட்சத்தை கடந்த போது, அதன் வேகம் 17 மடங்கு அதிகரித்திருந்தது. இன்று நான்காவது லட்சத்தை கடக்கும் போது அது 22 மடங்காக அதிகரிக்கும். இந்த வேகத்தைக் கண்டு உலகம் அதிர்ச்சியடைந்திருக்கிறது.


இந்தியாவில் தொடக்கக்கட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது. நாட்டின் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜனவரி 30&ஆம் தேதி கண்டறியப்பட்டது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 நாட்களுக்குப் பிறகு மார்ச் 14-ஆம் தேதி நூறைத் தொட்டது. இது அடுத்த 5 நாட்களில் இரு நூறாகவும், அடுத்த இரு நாட்களில், அதாவது மார்ச் 21-ஆம் தேதி முந்நூறாகவும், மார்ச் 23&ஆம் தேதி நானூறாகவும் உயர்ந்தது. அடுத்த ஒரே நாளில், அதாவது இன்று கொரோனா வைரஸ் 500-ஐ கடந்துள்ளது. இதன் மூலம் கொரோனா பரவும் வேகம் 45 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டதன் நோக்கம் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து கொண்டு, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பது தான். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ள நிலையில் தான், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க 144 தடை ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு தான் ஒரே தீர்வு என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்திய நிலையில், அரசு 144 தடை ஆணையை பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க இந்த நடவடிக்கை போதுமானதல்ல என்பது தான் மீண்டும், மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதற்கு நேற்றைய நிகழ்வு தான் உதாரணம் ஆகும். தமிழ்நாட்டில் நேற்று முன்நாள் வரை மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்ட நிலையில், நேற்று மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் இருவர் லண்டனில் இருந்து வந்தவர்கள். மதுரையைச் சேர்ந்த மூன்றாவது நபர் வெளிநாடுகள் எதற்கும் சென்றதில்லை. அவரது உறவினர்களோ, நண்பர்களோ கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. ஆனாலும், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதன் மூலம் தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவல் தொடங்கி விட்டதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஆபத்தின் அறிகுறியாகும்.

இத்தகைய சூழலை சமாளிக்க வேண்டுமானால், அதற்கு 144 தடை போதுமானதல்ல; மாறாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் ஊரடங்கின் மூலம் இன்றைய நிலையை சமாளிக்க முடியும். இதை உணர்ந்து தமிழக அரசு அதன் உத்திகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மற்றொருபுறம், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இது தவிர்த்திருக்கப்பட வேண்டும். அவர்களில் எவருக்கேனும் கொரோனா தொற்று இருக்கக்கூடும். அவர்கள் கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் நெருங்கி பழகுவதன் மூலம் கொரோனா வைரசை பரப்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதைத் தடுக்க அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதன் தேவை குறித்து தண்டோரா, காவல்துறை ஒலிபெருக்கி உள்ளிட்ட பொது அறிவிப்பு முறைகளின் மூலம் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களிலிருந்து மராட்டியம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் சென்று பணியாற்றி வந்த மக்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு நோய் பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அவர்களுக்கு நோய்ப்பரவல் குறித்து விழிப்புணர்வூட்டி, சுய தனிமைப்படுத்தலை கடைபிடிக்க அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதைப் போல கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப் படுத்துதல், சமூக இடைவெளியை ஏற்படுத்துதல், ஊரடங்கை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்தும் தற்காப்பு நடவடிக்கைகள் தான். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்திருப்பதுடன், இனிவரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும்.

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனி மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் நோய்ப்பரவலை தடுக்க முடிந்தது. தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவலைத் தடுக்கும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கு தனி மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். சென்னையில் கொரோனா சிகிச்சைக்கான வசதிகளுடன் தனி மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு கருவிகளையும் அரசு வழங்க வேண்டும்.

கொரோனா வைரசை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். அதன்மூலம் கொரோனா வைரஸ் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக