வெள்ளி, 20 மார்ச், 2020

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துக! - கே. பாலகிருஷ்ணன்


கொரோனா வைரஸ் 
தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை  பலப்படுத்துக!
வருவாய் பாதிக்கப்படுவோருக்கு உடனடி நிவாரணங்களை வழங்குக!!
தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!!!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறன. இன்றைய சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைவாக இருந்தபோதிலும் முறையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவில்லையெனில் நோய் பரவுதல் அதிகமாகி மோசமான விளைவுகளை உருவாக்கி விடும் என தொடர்ந்து எச்சரிக்கப்படுகிறது. 

எனவே இதனை கணக்கில் கொண்டு அடுத்த சில நாட்களில் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேலும் பலப்படுத்த வேண்டும், சம்பந்தப்பட்ட துறைகள் மட்டுமன்றி திறமையும், அர்ப்பணிப்பும் கொண்ட அதிகாரிகள் குழு அமைத்து தொடர் கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. ஒருவேளை நோய் பரவுதல் அதிகமானால் அதை எதிர்கொள்வதற்கான முறையிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்கி நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துக!

• கேரள அரசு கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க முதல் தவணையாக ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கி பல்வேறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதுபோல தமிழக அரசும் கொரோனா சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி முதல் கட்டமாக ஒதுக்கி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

• கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் கொரோனா வைரஸ் சோதனைகளுக்கான வசதிகளை வலுப்படுத்த வேண்டும். 

• கிராமப்புறங்களில் நடமாடும் மருத்துவமனைகளை அனுப்பி முதல்கட்ட சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 

• நகர்ப்புறங்களில் மட்டுமன்றி கிராமப்புறங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளையும் இத்தகைய பணியில் ஈடுபடுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். 

• மாநிலத்திற்கு உள்ளே நுழைகிற அனைத்து வழிகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.

• கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ பணிகளில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் பணிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பாராட்டுகிறது.  இப்பணியில் உயிரை பணையம் வைத்து ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்களுக்கும் உரிய பரிசோதனைகள், உபகரணங்கள், உடைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

• சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதுதான் நோய் பரவலை தடுப்பதற்கான முக்கியமான  நடவடிக்கை என சுகாதார நிறுவனங்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றன. இதனால் அன்றாடம் தங்கள் வாழ்க்கை தேவைகளுக்காக உழைப்போர் வாழ வழியற்ற நிலைமை ஏற்பட்டு விடும். பசியா? நோயா? என்கிற கேள்வி வரும்போது நோய் வந்தால் பார்த்துக் கொள்ளலாம், முதலில் பசியைப் போக்குவோம் என மக்கள் தங்கள் அன்றாட தேவைக்காக பணிகளுக்கு செல்லும் நிலைமை ஏற்படும். 

தமிழக அரசு ரேசன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கிடுக

• இதை தடுக்கும்விதமாக அனைவருக்கும் கேரள அரசாங்கம் செய்திருப்பதைப் போல இரண்டு மாதங்களுக்கான உணவு பொருட்களை பொதுவிநியோக முறையில் முன்கூட்டியே வீடுகளுக்கு சென்று நேரில் வழங்கிட வேண்டும்.

• அன்றாட செலவுகளுக்கு தேவையான பண உதவியையும் வழங்கிட வேண்டும்.

• மின் கட்டணம், குடி நீர் கட்டண வசூலை இரண்டு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். 

• முதியோர் உள்ளிட்டு வழங்கப்படும் உதவித் தொகையினை இரண்டு மாதங்களுக்கு சேர்த்து முன்கூட்டியே வழங்கிட வேண்டும்.

• இதேபோன்று ஆட்டோ, டாக்சி சாலையோர வியாபாரிகள், தலைசுமை வியாபாரிகள், சிறுகடை நடத்துவோர் என சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ள அனைத்து பகுதியினருக்கும் இந்த உதவிகளை செய்ய வேண்டும். 

• கடைகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களில் பணி புரிவோர், கிராமப்புற வேலை உறுதிச்சட்டத்தில் பதிவு செய்தோர் ஆகியோருக்கும் உணவுப்பொருட்கள் மற்றும் செலவுகளுக்கான தொகையை வழங்கிட வேண்டும்.

• உற்பத்தியை நிறுத்தி உள்ள நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளத்தை முன்கூட்டியே வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மாநில அரசு உத்தரவாதம் செய்திட வேண்டும்.

• தமிழகம் முழுவதும் உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு முகக் கவசம் மற்றும் கையுறை எதுவும் வழங்கப்படாமல் பணிபுரிந்து வருகின்றனர். இது ஆபத்தானது. எனவே, துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் உடனடியாக வழங்கிட வேண்டும்.

வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ. 5000 வழங்கிடுக!

• தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானம் இல்லாத தொழிலாளர்களுக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா ரூ. 5,000/- சிறப்பு நிதி வழங்கிட வேண்டும்.

• அதேபோல சிறு-குறு தொழில் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், நுண்நிதி நிறுவனங்கள் வங்கியில் வாங்கியுள்ள கடன்கள் கட்டுவதற்கு ஒரு வருடம் விலக்களிக்க வேண்டும். 

மாநிலங்களுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கிடுக

• மத்திய அரசின் சார்பாக நேற்று நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் வரும் 22ம் தேதி அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு முக்கியமானது. அனைவரும் அதை பின்பற்ற வேண்டும். 

• அதேசமயம் இந்த பாதிப்பை எதிர்கொள்வதற்கும் மீண்டு வருவதற்குமான எந்த பொருளாதார உதவிகளையும் மத்திய அரசு நேரடியாகவோ, அல்லது மாநில அரசுகளின் மூலமாக செய்வதற்கான உத்தேசத்தையோ தெரிவிக்கவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. 

• கடுமையான நிதி நெருக்கடியில் மாநில அரசுகள் சிக்கி உள்ள நிலையிலும், மத்திய அரசு மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய மானியங்கள் மற்றும் உதவிகளை முழுமையாக கொடுக்காத நிலையிலும்,  மாநிலங்களுக்கு உரிய நிதிஉதவியை உடனடியாக செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. 

• அதே போல மத்திய உணவு கிடங்குகளில் உள்ள தானியங்களை உடனடியாக மாநிலங்களுக்கு வழங்கிட மத்திய அரசு முன்வர வேண்டும்.

• அனைத்து பொது இடங்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் கைகளை தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் மத்திய, மாநில, அரசுகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக