சனி, 21 மார்ச், 2020

ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் முடிவு நீதிமன்ற அவமதிப்பு! - தோழர் கி. வெங்கட்ராமன்


ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் முடிவு நீதிமன்ற அவமதிப்பு!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட்பயஸ், செயக்குமார், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (20.03.2020) எழுப்பிய கேள்விக்கு விடையளித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்கள், அமைச்சரவை முடிவு குறித்த கோப்பின் மீது ஆளுநர் அலுவலகம் அளித்திருக்கிற பதிலை எடுத்துக் கூறினார்.

இராசீவ் காந்தி கொலை வழக்கில், வாழ்நாள் சிறையாளிகளாக உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்வது என்ற தமிழ்நாடு அமைச்சரவைப் பரிந்துரையில் கையெழுத்திடுவதற்கு முன்னால், இராசீவ் காந்தி கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. உள்ளிட்ட நடுவண் அரசின் புலனாய்வு விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிறகு, அதில் கூறப்பட்டுள்ளவற்றைக் கருத்தில் கொண்டுதான் முடிவு செய்ய முடியும் என ஆளுநர் அலுவலகம் பதில் அனுப்பியிருப்பதாக அமைச்சர் சி.வி. சண்முகம் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

ஆளுநரின் இந்த முடிவு சட்டவிரோதமானதாகும்.


அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161-இன்படி, மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் ஆவார்.

ஆளுநரின் விருப்பு அதிகாரம் குறித்து அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 என்ன கூறுகிறது என்ற வினா நாபம் ரெபியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டது. ஜெகதிஷ் சிங் கேகர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம், 2016 சூலை 13 அன்று அளித்த தீர்ப்பு தெளிவாக விளக்குகிறது.

இத்தீர்ப்பின் பத்தி 4.2.15, “உறுப்பு 163, ஆளுநருக்கு பொதுவான எந்த விருப்பதிகாரத்தையும் (Discretionary power) தந்துவிடவில்லை. மாநில அமைச்சரவையின் முடிவை செயல்படுத்துவதைத் தாண்டி பொதுவாக ஆளுநருக்கு தனித்த அதிகாரம் ஏதுமில்லை. 163 (1) கூறும் விருப்பதிகாரம் கூட மிக மிக வரம்புக்கு உட்பட்டது. தெளிவாக அரசமைப்புச் சட்டத்தின் வேறு உறுப்புகளில் சொல்லப்பட்ட கடமைகளில் மட்டுமே ஆளுநரின் விருப்பதிகாரம் செயல்பட முடியும். அவ்வாறான விருப்பதிகாரம் கூட ஆளுநரின் சொந்த விருப்பு வெறுப்பின்படியோ, அவரது கற்பனைக்கு ஏற்பவோ செயல்பட முடியாது. தெளிவான காரணங்களோடும், அரசமைப்புச் சட்டத்தின் உணர்வோடும் தான் அவ்வாறான வரம்புக்கு உட்பட்ட விருப்பதிகாரம் செயல்பட முடியும்” என்று தெளிவுபடுத்துகிறது.

அதேபோல், இதற்கு முன்னர் இராமேசுவர் பிரசாத் எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் 2006இல் தீர்ப்புரைத்த ஒய்.கே. சபர்வால் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயமும், எஸ்.ஆர். பொம்மை வழக்குத் தீர்ப்பை மேற்கோள் காட்டி உறுப்பு 163இன் கீழ் ஆளுநருக்கு விருப்பதிகாரம் கிட்டத்தட்ட ஏதுமில்லை என்பதை விளக்கிக் கூறியது.

உறுப்பு 163 என்பது பொதுவில், மாநில அமைச்சரவைக்கும் ஆளுநருக்கும் உள்ள நிர்வாக உறவை வரையறுக்கிறது. ஆனால், அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன் கீழ், முன் விடுதலை குறித்தோ மன்னிப்பு குறித்தோ மாநில அரசு செய்யும் முடிவை அப்படியே ஏற்பதைத் தவிர ஆளுநருக்கு எந்தத் தனிப்பட்ட அதிகாரமும் கிடையாது.

இதுகுறித்து, மாரூராம் வழக்கில் (1981 - SCC 107) உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் தெளிவாக வரையறுக்கிறது. மாரூராம் வழக்குத் தீர்ப்பின் பத்தி 21 கூறுவது கவனிக்கத்தக்கது.

“குடியரசுத் தலைவர் என்பவர் நடுவண் அரசின் அடையாளத் தலைமை ஆவார். ஆளுநர் என்பவர் பெயரளவில் மாநில அரசின் தலைவராவார். மாநில அமைச்சரவை ஆளுநர் வழி தனது முடிவுகளை செயல்படுத்திக் கொள்கிறதே தவிர, தனிப்பட்ட அதிகாரம் ஏதும் ஆளுநருக்கு இல்லை. உறுப்பு 161இன் கீழ் ஒரு மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை ஆளுநர் விரும்புகிறாரோ இல்லையோ, அதை அவர் செயல்படுத்தியே ஆக வேண்டும். ஆளுநருக்கு அமைச்சரவையின் முடிவுக்கு மாறாக, முன் விடுதலை குறித்தோ, முன் விடுதலை மறுப்பு குறித்தோ சுதந்திரமாக தனி முடிவெடுக்க உரிமையில்லை. விதி 161இன்படி அமைச்சரவையின் முடிவு ஆளுநர் பெயரால் வெளியிடப்படுவது அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறை இங்கிதமே தவிர, அது ஆளுநருக்கு எந்தவித தனி அதிகாரத்தையும் அளிக்கவில்லை. உறுப்பு 161இன்படியான அரசமைப்புச் சட்டத்தின் முடிவை இவ்வாறு வரையறுக்கலாம் - ஆளுநர் என்பவர் மாநில அரசின் சுருக்கெழுத்து வடிவம் தவிர வேறொன்றுமில்லை” என பத்தி 21 உறுதிபடக் கூறுகிறது.

ஏழு தமிழர் விடுதலை என்பது அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக முடிவாகும் (Executive decision). இதில் கையெழுத்திடுவதைத் தவிர, ஆளுநருக்குத் தனிப்பட்ட விருப்பு அதிகாரம் எள்ளளவும் கிடையாது!

இராசீவ் காந்தி கொலையில் உள்ள பன்னாட்டு சதிகள் குறித்தோ, உள்நாட்டு சதிகள் குறித்தோ நடைபெறும் புலனாய்வுக் குழுக்களின் விசாரணைக்கும், அமைச்சரவையின் நிர்வாக முடிவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நடுவண் புலனாய்வுக் குழுக்களின் விசாரணை அறிக்கை மாநில அமைச்சரவை நிர்வாக முடிவின் மீது எந்த செல்வாக்கையும் செலுத்த முடியாது.

இராசீவ் காந்தி கொலையில் 26 தமிழர்கள் மீது தடா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிற்கும், நடுவண் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கும் தொடர்பு ஏதும் இருந்திருந்தால் அந்த வழக்கே இதுவரையில் நடந்து முடிந்திருக்காது. உச்ச நீதிமன்றம் வரை நீதித்துறை 26 பேர் மீதான வழக்கை தனித்த ஒன்றாகவே நடத்தி, இறுதித்தீர்ப்பை அளித்து விட்டது.

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடுவண் புலனாய்வுக் குழுக்களின் இடைக்கால அறிக்கைக்காகக் காத்திருப்பதாகச் சொல்வது நீதிமன்றச் செயல்பாடுகளையே அவமதிப்பதாகும்.

தொடர்பில்லாத வெவ்வேறு செய்திகளைச் சொல்லி, தனது சட்டக் கடமையைத் தட்டிக் கழிக்கும் ஆளுநரின் இச்செயல் தமிழினப் பகையில் மேற்கொள்ளப்படும் அப்பட்டமான சட்ட மீறலாகும்! எனவே, தமிழ்நாடு அரசு மேற்சொன்ன உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும், இதுபோன்ற சட்டக் காரணங்களையும் எடுத்துக் காட்டி ஆளுநரின் அரசமைப்புச் சட்ட மீறலை சுட்டிக்காட்டி – ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து, ஏழு தமிழர் விடுதலை குறித்த முடிவை செயல்படுத்த முனைய வேண்டும். மாநில அரசின் தன்மானத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையாகவும் இது அமையும்.

எனவே, தமிழ்நாடு அரசு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் முடிவு அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என எடுத்துக்காட்டி, பேரளிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலைக்கு உரிய மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக