திங்கள், 23 மார்ச், 2020

தமிழக முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகள் தமிழகமக்கள் நலன் காக்கும் வகையில் அமைந்துள்ளன - ஜி.கே.வாசன்-


தமிழகத்தில் கரோனாவுக்கு எதிராக  தமிழக முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகள் தமிழகமக்கள் நலன் காக்கும் வகையில்அமைந்துள்ளன. - ஜி.கே.வாசன்

தமிழக முதல்வர் கரோனா தடுப்புக்காக அரசு சார்ந்த அனைத்து துறையினரையும் பணிபுரிய வைத்திருப்பதும், தமிழகத்தின் எல்லைகளை மூட உத்தரவிட்டதும், சுய ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக்கொண்டதும், அரசுப் பேருந்துகள் இயக்கப்படாது என்று உத்தரவிட்டதும், சென்னை கடற்கரைப் பகுதிக்கு அனுமதி மறுத்திருப்பதும் துணிச்சலான நல்ல நடவடிக்கைகள்.

மேலும் அத்தியாவசியப் பணிகளைத் தவிர்த்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்; பதற்றத்துடன் பொருட்களை வாங்கத் தேவையில்லை என்றெல்லாம் அறிவுறுத்தியிருப்பது மக்களுக்கு ஆதரவுக்குரலாக இருக்கிறது. அதாவது பால், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு தடை ஏதும் இருக்காது என்பதால் மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.


எனவே, தமிழகத்தில் கரோனா தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தைப் போக்கும் விதமாக, நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அனைத்துத் தரப்பு மக்களின் உடல்நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வரின் தொடர் நடவடிக்கைகள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது.

எனவே, கரோனாவுக்கு எதிராக, தமிழக மக்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காக துணிச்சலான நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தமிழக முதல்வரை தமாகா சார்பில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக, தமிழகத்தில் கரோனாவுக்கு எதிராக தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ள சிறப்பான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பிரதமர் தமிழக முதல்வரைப் பாராட்டியிருப்பது தமிழக முதல்வருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.

எனவே, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது என்றாலும் கூட பொதுமக்களும் கைகளைக் கழுவுதல், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தல், பொது இடங்களில் கூடுவதைத் தவிர்த்தல் போன்றவற்றைக் கட்டாயமாக கடைப்பிடித்து கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்புக்காக துணை நிற்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக