வியாழன், 26 மார்ச், 2020

இதுவரை வந்த அரசாங்கத்தினுடைய எந்த அறிவிப்பும் சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்றுவதாக இல்லை - E.R.ஈஸ்வரன்


சிறு, குறு தொழில் நிறுவனங்களை சார்ந்திருப்பவர்களுக்கு மீண்டும் தொழிலை துவக்க முடியுமென்ற நம்பிக்கையை உதவி அறிவிப்புகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். - E.R.ஈஸ்வரன்

தொடர்ந்த ஊரடங்கு உத்தரவின் மூலமாக அதிகப்படியாக பாதிக்கப்பட்டிருப்பது சிறு, குறு தொழிலை நடத்துபவர்களும், அதை சார்ந்திருக்கின்ற தொழிலாளர்களும் தான். பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்ற சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலம் முடிந்த பின்னால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்ற சூழல் உருவாகி இருக்கின்றது. சிறு, குறு உற்பத்தி தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை அன்றாடம் காய்ச்சிகளை போல தான். அந்தந்த மாதம் வருகின்ற வருமானத்தை வைத்து தான் தொழிலை நடத்தி கொண்டிருக்கிறார்கள். மாதத்தில் முதல் மூன்று வாரங்களில் வருகின்ற வருமானத்தை வைத்து உற்பத்திக்கான கச்சா பொருள் விலையை கொடுப்பதும், கடைசி வாரத்தில் வருகின்ற வருமானத்தை வைத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதும் தொடர் நடவடிக்கையாக இருக்கும்.  ஊரடங்கு உத்தரவு முடிந்து தொழில் நிறுவனங்களை தொடங்க வேண்டுமென்று சொன்னால் அரசாங்கத்தின் நிதியுதவி இல்லாமல் தொடங்க முடியாது. 


இந்தியாவின் 30 சதவீத மக்கள் இதுபோன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் தொடங்கப்படவில்லை என்று சொன்னால் பல கோடி பேர் இந்தியாவில் வேலை இழப்பார்கள். இதுவரை வந்த அரசாங்கத்தினுடைய எந்த அறிவிப்பும் சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்றுவதாக இல்லை. எந்த அறிவிப்பும் வராத நிலையில் இவர்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் மூலம் வீடுகளில் இருந்தாலும் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். அதை அரசாங்கம் புரிந்து கொண்டு சிறு, குறு நிறுவனங்களுடைய உடனடி நிதி தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக