வெள்ளி, 27 மார்ச், 2020

கொரோனா கொடூரம்:மத்திய அரசின் நிவாரண அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது! - தொல்.திருமாவளவன்

கொரோனா கொடூரம்:
மத்திய அரசின் நிவாரண அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
கொரோனா கொடூரத்தையொட்டி மைய அரசு அறிவித்துள்ள  தேசம் தழுவிய முழு அடைப்பின் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உதவும் பொருட்டு மத்திய நிதியமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள நிவாரண அறிவிப்புகள் ஏமாற்poறமளிக்கின்றன என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். 
மேம்படுத்தப்பட்ட நிவாரணத் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

21 நாள் ஊரடங்கு உத்தரவால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நிலமற்ற விவசாயக் கூலிகள் சிறுகுறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நிவாரணத் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எல்லோரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் நிதியமைச்சர் நிவாரணத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்றார். 

குறிப்பாக, 'ஜன்தன்' கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் 500 ரூபாய் என மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என் று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொகை போதுமானது அல்ல. குறைந்தது மாதம் 2000 ரூபாயாவது அறிவிக்கவேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். 

100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கபட்டிருக்கிறது.  இதனால் நிலமற்ற கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை. அவர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை முன்பணமாக வழங்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். 

விவசாயிகளுக்கு 2000 ரூபாய் என்பது புதிய அறிவிப்பு அல்ல. ஏற்கனவே 'பி எம் கிசான்'  திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை தான். மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் உயிர்காக்கும் கருவிகள் இல்லாமல் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான கருவிகளை உடனடியாக வழங்குவதில் இந்த அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருவது வேதனை அளிக்கிறது. உயிரைக் காப்பாற்றுவதற்கு எதுவும் செய்ய மாட்டோம், இறந்துபோனால் இன்சூரன்ஸ் பணம் தருகிறோம் என்பதைப்போல மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்ட அறிவிப்பு உள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் என்பதும் கண்துடைப்பு தான். ஏற்கனவே பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது இல்லை, கல்விக்கடன் பெறுவதும் அவ்வளவு எளிதாக இல்லை. இந்நிலையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்பதும், வைப்பு நிதியை எடுத்துக்கொள்ளலாம் என்பதும் மக்களை முட்டாளாக்கும் நோக்கம் கொண்ட அறிவிப்புகளாகவே உள்ளன. 

ஒட்டுமொத்தத்தில் இந்த அறிவிப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதத்திலும் நிவாரணமாக அமையவில்லை. எனவே மேம்படுத்தப்பட்ட நிவாரணத் திட்டத்தை அரசு அறிவிக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர்,
விசிக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக