புதன், 25 மார்ச், 2020

SDPI கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக நின்று களத்தில் செயலாற்றுவார்கள்


கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள்: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக நின்று களத்தில் செயலாற்றுவார்கள் - எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது;

கொரோனா வைரஸ் மூலம் பரவிவரும் கோவிட் -19 என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வகை நோய் இந்தியா உட்பட உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.  தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் முழுமையான தடுப்பு மருந்து கண்டறியப்படாத சூழலில், இந்த வைரஸ் பரவலானது தும்மல், இருமல் மூலமாகவும், நோய் பாதித்தவரை தொடுதல் மூலமாகவும் பரவுவதால் நோய் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்துதல் மூலம் மட்டுமே வைரஸ் தொற்று பரவலை தடுக்க முடியும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்காக சுய தனிமைப்படுதல் மற்றும் ஊரடங்கினை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். அதன் காரணமாக பல்வேறு அரசுகளும் அந்த வேண்டுகோளை மக்களுக்கு விடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கடந்த மார்ச் 22 அன்று சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. 

இந்த சூழலில் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மார்ச் 31 வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவினை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையுடன் கூடிய மக்கள் நலனை அடிப்படையாக கொண்ட உத்தரவு என்பதால் அந்த உத்தரவுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். மேலும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிகள் அரசின் இந்த உத்தரவை செயல்படுத்த தேவையான உதவிகளையும், மக்களுக்கு தேவையான உதவிகளையும் அவர்கள் சார்ந்த பகுதிகளில் களத்தில் நின்று செயல்படுத்துவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அரசுடன் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகள், சுகாதார நடவடிக்கைகளில் 24 மணி நேரமும் அவர்கள் ஈடுபடுவார்கள். மேலும், 144 தடை உத்தரவு காரணமாக மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதோடு, கொரோனா தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக நின்று செயல்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவிர்த்து, அனைத்து மாவட்ட மற்றும் கிளை மட்ட அளவிலான நிர்வாகிகளும் அரசு மற்றும் சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல் அடிப்படையில் தேவையான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக