சனி, 21 மார்ச், 2020

கொரொனா அச்சுறுத்தல்: பிரதமரின் பேச்சில் ஆக்கபூர்வமான திட்டம் எதுவுமில்லை! - தொல்.திருமாவளவன்


கொரொனா அச்சுறுத்தல்: பிரதமரின் பேச்சில் ஆக்கபூர்வமான திட்டம் எதுவுமில்லை! - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

இந்தியாவில் கொரொனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது எப்படி என்பதைப் பற்றி தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று(மார்ச்-19) இரவு 8.00 மணிக்கு ஆற்றிய உரையில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டாரே தவிர அரசு என்ன செய்திருக்கிறது; என்ன செய்யப் போகிறது என்பதைப் பற்றி சொல்லவே இல்லை. ஆக்கபூர்வமான திட்டம் எதையும் முன்வைக்காத இந்த உரை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.


உலகில் 176 நாடுகளைத் தாக்கி மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் கொரொனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மிகவும் காலதாமதமாக சில தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும் தமிழக அரசும் எடுத்து வருகின்றன.
நேற்று தொலைக்காட்சியில் தோன்றி பிரதமர் நாட்டு மக்களிடையே இதைப்பற்றி உரையாற்றினார். பொதுமக்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பல அறிவுரைகளை, ஆலோசனைகளை அவர் வழங்கினார். குறிப்பாக மார்ச் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருந்து ‘மக்கள் ஊரடங்கு’ கடைப்பிடிக்க வேண்டும்; அன்று மாலை 5 மணிக்கு தங்கள் வீடுகளின் வாசலிலும் பால்கனியிலும் நின்று நமக்காக சேவையாற்றும் மருத்துவர்களையும் மற்ற ஊழியர்களையும் பாராட்டும் விதமாக கைகளைத் தட்டி உற்சாகப்படுத்த வேண்டும்’ என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

கொரொனா வைரஸ் தாக்குதல் ஒரு சுகாதாரப் பிரச்சனையாக மட்டுமின்றி மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்சனையாகவும் உருவெடுத்திருக்கிறது. நாடெங்கும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதாலும், உற்பத்தி பெருமளவில் குறைக்கப்பட்டு இருப்பதாலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வேலை செய்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் வாழும் கோடிக்கணக்கான விவசாயக் கூலிகள் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கடன் வசூல், வருமான வரி வசூல், ஜிஎஸ்டி வரி வசூல் ஆகியவற்றை ஏப்ரல்வரை ஒத்திவைக்க வேண்டும் என்று வணிக நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதைப்பற்றியெல்லாம் பிரதமர் தனது உரையில் குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைப்பற்றி பிரதமர் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

இந்தியாவைப் போலவே கொரொனா தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் கனடா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் இதேபோல தொலைக்காட்சியில் உரையாற்றும்போது நாட்டு மக்களுக்கு அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை விவரித்தார்கள். அதற்காக அரசு ஒதுக்கியுள்ள தொகை எவ்வளவு என்பதையும் தெரிவித்தார்கள். அதுபோல எந்த ஒரு அறிவிப்பையும் பிரதமர் மோடி செய்யவில்லை.

கேரள மாநில முதலமைச்சர் கொரொனா தாக்குதலை எதிர்கொள்ள 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து ஒரு அவசர காலத் திட்டத்தை அறிவித்திருக்கிறார். வேலைக்குச் செல்ல முடியாத ஏழை மக்களுக்காக பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபோல ஒரு அறிவிப்பை மத்திய அரசின் சார்பில் பிரதமர் வெளியிட்டிருக்க வேண்டும். இது எதையுமே அவர் செய்யவில்லை. அதற்கு மாறாக மக்களே ஊரடங்கு விதித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை மட்டுமே கூறியிருக்கிறார்.

மோட்டார் வாகன வரித் தொகை, வருமான வரி, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றை வசூலிப்பதை ஏப்ரல் 6 ஆம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றமும், அலகாபாத் உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன. அந்த தீர்ப்புக்கு அவசரஅவசரமாக இன்று உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு தடை ஆணை பெற்றிருக்கிறது. இதிலிருந்தே மக்களுக்கு உதவும் விதமாக எந்த ஒரு நடவடிக்கையையும் மோடி அரசு எடுக்கப் போவதில்லை என்பது வெளிப்படையாகி இருக்கிறது.

கொரொனாவைக் கட்டுப்படுத்துவதிலும் கூட மிகுந்த மெத்தனத்தோடுதான் மத்திய மாநில அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் மிகப்பெரிய பாதிப்பு நாட்டுமக்களுக்கு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம்(WHO) பரிசோதனை ஒன்றே கொரொனாவைக் கட்டுப்படுத்த உடனடி வழி என்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் பல மாநிலங்களில் உரிய அளவில் பரிசோதனைகள் செய்யப்படவில்லை. தமிழ் நாட்டிலும் கூட 19ஆம் தேதி பிற்பகல் வரை வெறும் 320 பேருக்கு மட்டுமே கொரொனா சாம்பிள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.இது அதிர்ச்சி அளிக்கிறது.

கொரொனா பாதிப்பில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உடனடியாகப் பொருளாதார உதவி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். கேரள மாநில அரசைப்போல தமிழக அரசும் நிவாரணத் திட்டம் ஒன்றை உடனடியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக