புதன், 25 மார்ச், 2020

10, 12-ஆம் வகுப்புகள் தவிர பிற வகுப்புகளுக்கான கட்டாயத் தேர்ச்சி அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் - DR.S.ராமதாஸ்


+2 தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும்
ஒரு வாய்ப்பு: மற்றவர்களுக்கு தேர்ச்சி! - DR.S.ராமதாஸ் 

தமிழ்நாட்டில் கடந்த இரு நாட்களில் நடைபெற்ற 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 70,000 மாணவர்கள் எழுதவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. முக்கியமான இத்தேர்வுகளை எழுத முடியாதது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 23-ஆம் தேதி 11-ஆம் வகுப்புக்கு உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக்கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. அதேபோல், 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கடந்த 24-ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த இரு தேர்வுகளையும் மொத்தம் 16.67 லட்சம் பேர் எழுதியிருக்க வேண்டும். ஆனால், இந்த இரு தேர்வுகளையும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என்று அரசுத் தேர்வுத்துறையை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த இரு தேர்வுகளையும் எழுத முடியாததால் தங்களின் எதிர்காலம் வீணாகி விடுமோ, உயர்கல்வி வாய்ப்பு பறிபோகுமோ? என்ற மன உளைச்சல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


கொரோனா தொற்று குறித்த அச்சம் தான் பெரும்பான்மையான மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்படியான பொதுத்தேர்வுகளும், பிற மாநில பாடத்திட்ட தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற தவறான நம்பிக்கையில் பல மாணவர்கள் தேர்வுக்கு செல்ல தவறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் பதற்றம் நிலவி வந்த சூழலில், பொதுத்தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் +1. +2 பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டது தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும்.

இதனால் சம்பந்தப்பட்ட வகுப்புகளின் மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. எனவே, கொரோனா அச்சம் தணிந்த பின்னர் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன் பிறகு தான் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தேர்வுத்துறைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 10, 12-ஆம் வகுப்புகள் தவிர மீதமுள்ள அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் 9-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயத்தேர்ச்சி அளிக்கப் பட்டுள்ளது. அதேபோல், நான் ஏற்கனவே வலியுறுத்தியதைப் போன்று தமிழகத்திலும் 9-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு தேர்வுத்துறை அறிவிக்க வேண்டும்.

11-ஆம் வகுப்பைப் பொறுத்தவரை வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்நாள் நடைபெற்ற உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக்கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளை ஏராளமான மாணவர்கள் எழுதாத நிலையில் 11-ஆம் வகுப்பிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும். 21 நாள் ஊரடங்கு ஆணை காரணமாக அனைத்துத் தரப்பினருக்கும் மன அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகளும் கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடாது. எனவே, 10, 12-ஆம் வகுப்புகள் தவிர பிற வகுப்புகளுக்கான கட்டாயத் தேர்ச்சி அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழக அரசையும், அரசு தேர்வுத்துறையையும் கேட்டுக் கொள்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக