வியாழன், 26 மார்ச், 2020

ஊரடங்கு நடைமுறை நிறைவளிக்கிறது மக்களிடம் கூடுதல் ஒத்துழைப்பு தேவை! - DR.அன்புமணி ராமதாஸ்


ஊரடங்கு நடைமுறை நிறைவளிக்கிறது:
மக்களிடம் கூடுதல் ஒத்துழைப்பு தேவை! - DR. அன்புமணி ராமதாஸ்

கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுக்க பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கில் ஒரு நாள் கழிந்திருக்கிறது. ஊரடங்கின் முதல் நாளில் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மனநிறைவு அளித்தாலும், பொதுமக்களில் ஒரு தரப்பினர் இதை விளையாட்டாகவும், விடுமுறையாகவும் நினைத்துக் கொண்டு சாலைகளில் வாகனங்களில் சுதந்திரமாக வலம் வந்தது மிகுந்த கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனாவை தடுக்க 144 தடை ஆணை நடைமுறைக்கு வந்த இரு மணி நேரத்தில், இந்தியா முழுவதும் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அடுத்த 4 மணி நேரத்தில் தமிழக அரசும், காவல்துறையும் பிரதமரின் ஆணையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்தன. சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் சுற்றுக்காவல் மேற்கொண்டு, தேவையின்றி திறக்கப்பட்டிருந்த கடைகளை மூட வைத்தனர். சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை கட்டுப்படுத்தினார்கள். வணிகர்கள் தங்களின் கடைகளை மூடி ஒத்துழைப்பு அளித்தனர். பெரு நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களின் பணியாளர்களை வீடுகளில் இருந்தபடி பணி செய்ய அனுமதி வழங்கின. அதற்கு வாய்ப்பில்லாத நிறுவனங்கள் ஊரடங்கு காலம் முழுவதும் விடுமுறை அறிவித்தன. ஊரடங்கை செயல்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளும், அதற்கு வணிக நிறுவனங்கள் தரப்பில் கிடைத்த ஒத்துழைப்பும் சிறப்பானவை. பொதுநலன் கருதிய அவர்களின் செயல்கள் பாராட்டத்தக்கவை.


கொரோனா தடுப்புக்கான அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களில் பெரும்பான்மையினர் சிறப்பான ஒத்துழைப்பும் அளித்ததை மறுக்க முடியாது. ஆனால், கொரோனா வைரஸ் நோயின் தீமை குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்கள் சாலைகளில் மேற்கொண்ட சாகசங்களும், ஊரடங்கின் போது அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு ஏற்பாடு செய்திருப்பது குறித்த தகவல்களை அறியாதவர்கள் சந்தைகளில் குவிந்து, பாதுகாப்பே இல்லாமல் நடமாடியதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

வீட்டு வாசலைத் தாண்டி ஓர் அடி எடுத்து வைத்தாலும், வீட்டுக்குள் கொரோனாவை விருந்தாளியாக அழைத்து வருவீர்கள் என்று பிரதமரும், விழித்திரு - விலகி இரு - வீட்டில் இரு என்று முதல்வரும் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். பண்பலை வானொலிகள் தொடங்கி, அகில இந்திய வானொலியும், அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளும் 24 மணி நேரமும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், கட்டாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இவ்வளவுக்குப் பிறகும் சிலர் எந்த பொறுப்புமின்றி சாலைகளில் மகிழுந்துகளிலும், இரு சக்கர ஊர்திகளிலும், இன்னும் சிலர் குழந்தைகளை அழைத்துக் கொண்டும் சாலைகளில் வலம் வந்ததை என்னவென்று சொல்வது? அவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது?

சாலைகளில் தேவையின்றி வலம் வந்தவர்களை காவல்துறையினர் கையாண்ட விதம் உன்னதமானது. சென்னை இராதாகிருஷ்ணன் சாலையில் வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர், கையெடுத்து கும்பிட்டு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளாதீர்கள் என்று மன்றாடியதும், அதில் நெகிழ்ந்து போன ஒருவர் அவரது வாகனத்திலிருந்து இறங்கி ஆய்வாளரின் காலில் விழுந்து வணங்கியதும் நெஞ்சில் ஈரத்தை வரவழைக்கும் நிகழ்வுகள். முதல் நாள் என்பதால் நேற்று ஊரடங்கு ஆணையை மீறி சாலைகளில் வலம் வந்தவர்களுக்கு கனிவுடன் அறிவுரை வழங்கிய காவல்துறையினர், இன்று முதல் விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதித்தல், ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். அதை உணர்ந்து சாலைகளில் மட்டுமின்றி, வீடுகளை விட்டு வெளியில் வருவதைக் கூட மக்கள் தவிர்க்க வேண்டும்.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெட்ரோல் நிலையங்களை முழுமையான எண்ணிக்கையில் திறக்க அனுமதித்திருப்பது தேவையற்றது. தமிழகத்தில் அனைத்து வகை பொதுப்போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தமுள்ள 4897 பெட்ரோல் நிலையங்களும் திறக்கப்பட்டிருப்பதால் தான் மகிழுந்துகளும், இரு சக்கர ஊர்திகளும் எரிபொருள் நிரப்பிக்கொண்டு தேவையின்றி பயணம் செய்கின்றன. இதைத் தடுக்க அவசரத் தேவைகளுக்காக 500 பெட்ரோல் நிலையங்களை மட்டும் செயல்பட அனுமதி அளித்து விட்டு, மீதமுள்ளவற்றை மூட மத்திய, மாநில அரசுகள் ஆணையிட வேண்டும்.

அதேபோல், கிராமப்புறங்களிலும் இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை. நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு சென்றவர்கள் அங்குள்ள சொந்தங்களை சென்று சந்திப்பது, தெருக்களில் கூட்டமாக வலம் வருவது போன்றவை கவலையளிக்கின்றன. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு காவல்துறையினர் வீதிவீதியாக சென்று பொதுமக்கள் வீடுகளுக்குள் தங்கியிருக்கும்படி ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்க வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று என்பது ஒரு கொடிய நோய் ஆகும். அந்த நோயிலிருந்து நம்மையும், நாட்டையும் காக்க வேண்டும் என்பதற்காகத் தான் நம்மை சுற்றி ஊரடங்கு என்ற நெருப்பு வளையத்தை எரிய விட்டிருக்கிறோம். அறியாமையாலோ அல்லது சாகச உணர்வாலோ அந்த வளையத்தை தாண்ட முயல்வது விட்டில் பூச்சி விளக்கில் விழுவதற்கும், விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் குதிப்பதற்கும் சமமானது. இந்த நிகழ்வுகளிலாவது தவறு செய்தவர்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படும். ஆனால், ஊரடங்கை மீறுவோர் அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களை சுற்றியுள்ள அப்பாவிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர்.

மனித வாழ்க்கை எந்திரமயமாகி விட்ட இந்த காலத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் பாதுகாப்பான சூழலில் உரையாடி களிக்கவும், மனதிற்கு பிடித்த புத்தகங்களை படித்து மகிழவும் ஊரடங்கு ஆணை சிறந்த வாய்ப்பு ஆகும். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீடுகளை விட்டு வெளியில் வராதீர். வீடுகளுக்குள் இருந்து கொண்டு நாட்டு மக்கள் நலமாக வாழ உதவுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக