புதன், 25 மார்ச், 2020

பிரதமர் மோடியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது! - கி.வீரமணி


ஏப்ரல் 14 ஆம் தேதிவரை மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே இருக்கவேண்டும். என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது! -  கி.வீரமணி

தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்ததால் உயிரிழப்புகள் மிகக் குறைவு!

பல்கலைக்கழகங்களில் மருந்தியல் துறையில் புதிய தொற்றுநோய்த் தடுப்பு ஆய்வினை ஊக்கப்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்!

ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கவேண்டும் என்ற  பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது

பிரதமரின் 21  நாள்கள் வீட்டுக்குள் இருப்பது மிக அவசியம் என்பதை வரவேற்கிறோம். மருத்துவர்களின் அறிவுரை - உலக சுகாதார நிறுவனம் (WHO) போன்ற அமைப்புகள் இதுபோல் தீவிரமான அவசர நடவடிக்கைகள் மிகவும் தேவை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மருத்துவர்களும் - அரசுகளும் சொன்னதைக் கேட்காததால்...

இத்தாலி போன்ற நாடுகளில் மக்களில் பலர் முதலில் மருத்துவர்களும், அந்நாட்டு அரசுகளும் சொன்னதைக் கேட்டு நடக்காமல், கூட்டம் கூட்டமாகக் கூடியதால் சீனாவையும் மிஞ்சும் அளவுக்குக் கரோனா நோய் தாக்கமும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

தடுப்பு முன்னெச்சரிக்கை முறைகளைச் சரியாகக் கண்டறிந்து நடந்துகொண்டதால், மிகவும் குறைவான இழப்புகளே!

தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் இதில் தொடக்கத்திலேயே தடுப்பு முன்னெச்சரிக்கை முறைகளைச் சரியாகக் கண்டறிந்து நடந்துகொண்டதால், மிகவும் குறைவான இழப்புகளே ஏற்பட்டு முற்றுப் புள்ளியை நோக்கி நடைபோடுகின்றன.

நமது நாடு பெரும் அளவுக்கு 130 கோடி மக்களைக் கொண்ட நாடு. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்கள் மற்றும் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் அன்றாடம் உழைத்து வாழும் நிலையில், 21 நாள்கள் வீட்டுக்குள் முடங்கும் தேவையான ஆணையைப் பிறப்பித்த பிரதமர், ஏழைகளின் அன்றாட உணவு மற்றும் வசதிகள்பற்றியும் அந்த உரையில் அறிவித்திருந்தால், அதனை செயல்படுத்துவதற்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்காது.

காலந்தாழ்த்தாமல் அறிவிப்பது முக்கியம்!

இதற்கு உடனடியாக மத்திய அரசு எவ்வகையில் உதவுகிறது, ஏழை - எளிய மக்களுக்கு நிம்மதியாக முடங்கிக் கிடக்க என்னென்ன முறையில் உதவிகள் - உணவு வழங்கல் முதலியன கிடைக்கும் என்பதையும் காலந்தாழ்த்தாமல் அறிவிப்பது முக்கியம்.

மக்கள் மீண்டும் கூடாமல் இருக்க நகரும் உணவு விடுதிகள்மூலம் விநியோகம் செய்யும் ஒரு ஏற்பாட்டைச் செய்வது அவசர அவசியம்! அதுபோலவே, வீட்டுக்கு வீடு விநியோகம் செய்யும் காய்கறி, அரிசி முதலிய அத்தியாவசியப் பொருள்கள் தரும் திட்டமும்கூடச் செய்தால் நலம்!

ராணுவத்தின்  DRDO (Defence Research Development Organisation) போன்றவற்றினையும் முழு வீச்சில் பயன்படுத்தி, புதிய உதவிக் கருவிகளையோ, மருந்தினையோகூட கண்டுபிடிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாமே!

மத்திய - மாநில அரசுகள் யோசிக்கவேண்டும்

டாக்டர்கள் பற்றாக்குறையை தீர்த்து, நாடு தழுவிய அளவில் - கிராமங்களிலும்கூட மருத்துவ உதவிகள் கிடைக்க நீண்ட காலத் திட்டத்தையும், மத்திய - மாநில அரசுகள் யோசிக்கவேண்டும். ‘நீட்’, ‘நெக்ஸ்ட்’ என்ற இந்தத் தேர்வு முறைகளில் அவர்கள் எதிர்பார்த்த பயனைத் தராததால், துணிவுடன் அதனை ரத்து செய்து, பழைய அந்தந்த மாநில கல்வி - நுழைவுத் தேர்வு முறையைப் புகுத்த மறுபரிசீலனை செய்யவேண்டும்!

பல பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிக்கென நிதி ஒதுக்கீடு செய்து, மருந்தியல் துறையில் புதிய தொற்றுநோய்த் தடுப்பு ஆய்வினை ஊக்கப்படுத்திட உதவவேண்டும்!

சோதனைகளிலிருந்துதான் படிப்பினையைப் பெற முடியும்!

எந்த சோதனைகளிலிருந்தும் படிப்பினைப் பெற்று, அதற்கேற்ப வீண் பிடிவாதமின்றி எது வெற்றிகரமானதோ அதனை அமல்படுத்த சிறிதும் கூச்சநாச்சமே கொள்ளக்கூடாது! மத்திய - மாநில அரசுகள் யோசிக்கவேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக