ஞாயிறு, 22 மார்ச், 2020

கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கத்தால் உலக நாடுகளே உருக்குலைந்து நிற்கின்றது. - ஜி.கே.வாசன்


உலகம் முழுவதும் மதங்களை கடந்து, இனங்களுக்கு அப்பாற்பட்டு, சமூகத்தில் உள்ள பல்வேறு சமுதாயத்தினரையும் தாண்டி ஒட்டுமொத்த மனித இனத்தின் இன்றைய உச்சரிப்பு “கொரோனா”.

அதாவது கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கத்தால் உலக நாடுகளே உருக்குலைந்து நிற்கின்றது. மேலும் இந்நோய் பரவி வருவதைக்கண்டு உலகமே மிகப்பெரிய அச்சத்தில் இருக்கிறது. அந்த வகையில் இந்திய மக்களும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

நமது மாநிலமான தமிழகத்திலும் கொரோனா தாக்கம் குறித்த பெரும் அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இத்தகைய அசாதாரண சூழலில் இருந்து மீள மருத்துவத்துறை சார்ந்த அறிவிப்புகளையும், பொதுவான அறிவிப்புகளையும் உதாசீனப்படுத்தாமல் உணர்ந்து செயல்பட வேண்டும்.


குறிப்பாக ஒவ்வொருவரும் தன்னலன் கருதி செயல்படுவதோடு, பொது நலனையும் மனதில் வைத்து இந்த நோய்த்தடுப்புக்காக செயல்பட முன்வர வேண்டும். வீட்டு நலன் மற்றும் நாட்டு நலனுக்காக அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

இன்றைய காலக்கட்டத்தில் பொது மக்களை நோயின் பிடியிலிருந்து பாதுகாக்க பிரதமரும், மத்திய மாநில அரசுகளும், அமைச்சர்களும், அரசு இயந்திரங்களும் விழிப்புடன் முனைப்போடு செயல்படுவதற்காக நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தலைவணங்கி வாழ்த்த வேண்டும், வணங்க வேண்டும்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக மத்திய மாநில அரசுகள் விடுக்கும் கட்டுப்பாடுகளையும், அறிவுரைகளையும், சுய ஊரடங்கையும் ஏற்றுக்கொண்டு அதன் வழி செயல்பட வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்கள் நலன் காத்து வளமான மாநிலத்தையும், வலிமையான பாரதத்தையும் உருவாக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக