வியாழன், 26 மார்ச், 2020

சிதம்பரம் தொகுதிக்கு ரூ1.27 கோடி ஒதுக்கீடு! மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் அறிவிப்பு!


சிதம்பரம் தொகுதிக்கு ரூ1.27 கோடி ஒதுக்கீடு!
மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் அறிவிப்பு! 

கொரோனா வைரஸின் கொடூரத்திலிருந்து நாட்டைக்காப்பாற்றும் முயற்சியில் நம் ஒவ்வொருக்கும் பொறுப்பு உள்ளது.

வீட்டிலேயே இருந்தால் அன்றாட செலவுகளுக்கான  பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? ஒரு மாதத்துக்குரிய அனைத்துத் தேவைகளையும் எப்படி ஒரேநேரத்தில் வாங்கி சேமித்து வைக்கமுடியும்?  உறவினர்களோடும் நண்பர்களோடும்  பழகாமல் எப்படி விலகி இருக்கமுடியும்? நம்மையெல்லாம்  அது அண்டாது? நாமென்ன வெளிநாட்டுக்கா போய்விட்டு வந்தோம்? நம் ஊரில் வெளிநாட்டுக்குப் போய்விட்டு வந்தவர் யாருமில்லை; எனவே நாம் ஏன் பயப்படவேண்டும்? என்றெல்லாம் எண்ணி அலட்சியமாக இருக்கக்கூடாது. இது எப்படி பரவுகிறது என்பதை ஊடகங்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் . எனவே அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். நமக்கும் பரவக்கூடாது; நம்மால் யாருக்கும்  பரவக்கூடாது என்கிற பொறுப்புணர்வு டன் இருப்போம். நோய்த் தொற்றிக்கொண்டதற்கான அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ளவேண்டும். 

இதற்கு ஏதுவாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினரகளும் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் தேவைகளின் அடிப்படையில் நிதியை ஒதுக்கி வருகின்றனர். 

மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலம் தழுவிய அளவில் பொதுவாக நிதி ஒதுக்க முடியும். ஆனால், மக்களவை உறுப்பினர்கள், அவரவர் தொகுதியிலுள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கான தேவைகளின் அடிப்படையில் மட்டுமே நிதிஒதுக்க இயலும். 

அந்தவகையில், சுகாதாரத்துறையின் மாவட்ட அதிகாரிகள் மூலம் பெற்ற வேண்டுகோள்களின்படி, உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள்(வென்டிலேட்டர்ஸ்), முகக்கவசம் (மாஸ்க்)  போன்றவை வாங்குவதற்கென சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1,26,61000/- (ரூபாய் ஒருகோடியே இருபத்தாறு இலட்சத்து அறுபத்தோராயிரம்) ஒதுக்கப்படுகிறது. அதிகாரிகளிடமிருந்து அந்த தேவைகளைப் பெறுவதற்கு முன்னரே ரூபாய் பத்து இலட்சம் ஒதுக்கீடு செய்து அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது தேவைகளுக்கான பட்டியல் பெற்றதன் அடிப்படையில் இது முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனைக்கான தேவகைளையும் உரிய அதிகாரிகளிடம் பெற்று அதற்கான நிதியும் விரைவில் இரண்டாவது கட்டமாக ஒதுக்கப்படும்.  

பொதுமக்களின் நலன்கருதி இது அறிவிக்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் பாதிப்பால்  மருத்துவமனைகளுக்குச் செல்லும்நிலை யாருக்கும் ஏற்படக்கூடாதென்பதே நம் ஒவ்வொருவரின் விருப்பமாகும். 

எனவே, வீட்டில் பாதுகாப்பாக இருந்தால் மருத்துவமனைக்குச் செல்லும் சூழல் அமையாது என்கிற பொறுப்புணர்வோடு செயல்படுவோம் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக