வியாழன், 26 மார்ச், 2020

நாடே கரோனா பீதியில் உள்ளபோது இப்படி பார்ப்பனீயம் அதன் வேலையை செய்ய முனைந்துள்ளது. - கி.வீரமணி


உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு - கூடுதல் நிதி ஒதுக்கீடு! சமூகநீதிப் போராளிகள் ஓரணியில் நின்று வென்று தீர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்! - கி.வீரமணி

'பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க. அரசின் உள்ளார்ந்த எண்ணம் இடஒதுக்கீட்டை அறவே ஒழித்து -& சமூகரீதியாகவும், கல்வி ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமைகளைப் பறிப்பதுதானே! இதனை சமூகநீதிப் போராளிகள் ஓரணியாக நின்று முறியடித்து வென்று தீர வேண்டியது காலத்தின் கட்டாய மாகும்' என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள சமூகநீதி  அறிக்கை வருமாறு:

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய ஜாதியினருக்கும் - குறிப்பாக பார்ப்பனர் போன்ற உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு என்பதற்கான இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை சென்ற பொதுத் தேர்தல் - 2019க்கு முன்பே - இறுதிக் கட்டத்தில் "அவசரக் கோலம் - அள்ளித் தெளித்த கதையாக" விரிவான விவாதங்களுக்கு இடம் தராமல் நாடாளுமன்றத்தில் 103ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக கொண்டு வந்து நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் உடனடியாகப் பெற்று, அதை அமல்படுத்தி, பல்கலைக் கழகங்களுக்கும், மற்றவைகளுக்கும் 10 சதவிகித இடஒதுக்கீடுபற்றிய தனிச் சுற்றறிக்கை, தனி கூடுதல் நிதி ஒதுக்கீடு என எல்லாவற்றினையும் 'ராக்கெட்' வேகத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு செய்தது!

வாக்கு வங்கிக்காக வரலாற்றுப் பிழை

எதிர்க்கட்சி காங்கிரசும், மார்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ் போன்றவர்களும் இதன் அடிப்படையைப் புரிந்து கொள்ளாமலோ அல்லது தங்கள் கட்சிகளுக்கு எதிராக 2019 பொதுத் தேர்தலுக்கான வாக்கு வங்கியை - 'ஏழைகளுக்குத் தருவதை தடுக்கிறார்கள் இவர்கள்' என்று கூறி தங்களது தோல்விக்கு வழி வகுத்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமாகவோ  மாநிலங்களவையில் இதனை ஆதரித்து வாக்களித்து வரலாற்றுப் பிழை செய்தனர்.

நாடே கரோனா பீதியில் உள்ளபோது இப்படி  பார்ப்பனீயம் அதன் வேலையை செய்ய முனைந்துள்ளது.

"சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்"

தி.மு.க.வின் அன்றைய மாநிலங்களவை - தலைவரான திரு. கனிமொழி கருணாநிதி அவர்கள்தான் இதை எதிர்த்து, "சமூகநீதிக்கும், இந்திய அரசமைப்புச் சட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கையான 15(4)இன்படி "சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்" என்ற அடிப்படையை மீறுவதாகவும் இது உள்ளது" என்று கூறினார்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், லாலு பிரசாத் அவர்களின் R.J.D.யும், தி.மு.க.வின் நிலைப்பாட்டினையே ஏற்று எதிர்த்து வாக்களித்தனர்.

அன்று அவர்கள் குறைந்தபட்சம் செலக்ட் கமிட்டிக்கு அத்திருத்த மசோதாவை அனுப்பும்படி திருமதி கனிமொழி (தி.மு.க.) கூறிய யோசனையை ஏற்று வாக்களித்திருந்தால், இப்படி "தும்பைவிட்டு வாலைப் பிடித்து முறுக்கும்" வேதனை ஏற்பட்டிருக்காது!

அநீதிக்கு மேல் அநீதி

உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத் திலும், இப்படி அப்பட்டமான அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தையே தகர்த்துப் பொருளாதார அடிப்படையைக் கொண்டு வந்து நுழைப்பதற்கு எதிரான வழக்கொன்று தி.மு.க., தி.க. மற்றும் பல சமூக அமைப்புகள் தொடுத்துள்ளதை உடனடியாக விசாரணைக்கு எடுத்து இடைக்காலத் தடை விதித்திருந்தாலும் (ஏற்கெனவே மண்டல் வழக்கான இந்திரா சகானி வழக்கில் 10 சதவிகித இடஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி ஏழையர்களுக்கு வழங்கியது செல்லாது என்று 9 நீதிபதிகள்  தந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு இருப்பதால்) பல இடங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பங்கிலிருந்து திறந்த போட்டி வாய்ப்பில் உள்ள 10 சதவிகிதம் - ஏற்கெனவே ஏகபோக ஆதிக்கம் செலுத்திய உயர்ஜாதியினருக்கு புளியேப்பக்காரருக்குப்போய் இருக்காது; இன்று மேலும் அநீதிக்கு மேல் அநீதி செய்யும் வகையில் அமைச்சரவைக் குறிப்பு என்ற ஒன்றை பார்ப்பன மூத்த அதிகாரிகள் தயாரித்து பிற்படுத்தப்பட்ட (OBC) வர்களுக்கு மத்திய அரசில் வயது வரம்பு விலக்கு தருவது போலவே இவர்களுக்கும் பதவி உயர்வில் தர வேண்டும் என்பதற்கான ஆயத்தங்களை செய்யும் வகையில் அந்தக் குறிப்பினை வைத்துள்ளது.

மத்திய சமூகநலத்துறையின் வேறு ஒரு சூழ்ச்சித் திட்டம்

நாட்டில் உள்ள எதிர்ப்புக் காரணமாக அல்லது வேறு ஏதோ ஒரு சூழ்ச்சித் திட்டத்தினை கருவில்  உருவாக்குவதாலோ, இந்த ஆலோசனை குறிப்பை பின் வாங்கியுள்ளது மத்திய அரசின் சமூகநலத்துறை.

நாட்டின் அனைத்து சமூகநீதிப் போராளிகளும், கட்சிகளும், இயக்கங்களும் இது போன்றவற்றை இடைவிடாமல்  சதா விழிப்புடன் இருந்து கண்காணித்து வர வேண்டும். இன்றேல் நமது தலைவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு மேல் போராடிப் பெற்ற சமூகநீதி உரிமைகள் 'பொய்யாய்' 'பழங்கதையாய்', 'கனவாகி' போய் விடும் ஆபத்து ஏற்படும். எனவே மிகுந்த கவனம் தேவை! தேவை!!

ஆர்.எஸ்.எஸ். அரசின் உள்ளார்ந்த எண்ணம் அறவே, சமூகரீதியாகவும், கல்வி ரீதியிலும் பின் தங்கியுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை, கல்வி உத்தியோக உரிமைகளைப் பறிப்பதுதானே!

பெரியாரும், அம்பேத்கரும், திராவிட இயக்கமும் போராடிப் பெற்றுத் தந்த இடஒதுக்கீட்டு உரிமையை  சமூகநீதிப் போராளிகளும், பல்வேறு அரசியல்  கட்சிகளும் பிணக்குகள்  இருந்தாலும் அனைவரும் ஓரணியாக நின்று, இதை வென்று தீர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக