செவ்வாய், 24 மார்ச், 2020

பிரதமர் ஆக்கபூர்வமான அறிவிப்புகளை வெளியிடவேண்டும்- ரவிக்குமார்


மத்திய அரசு தனது அறிவிப்புகளை இனியும் காலந்தாழ்த்தாமல் வெளியிடவேண்டும் - ரவிக்குமார்

இன்று (24.03.2020) இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றவிருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஆக்கபூர்வமான அறிவிப்புகளை வெளியிடவேண்டும். கடந்தமுறை உரையாற்றியபோது அவர் அறிவித்த Economic Task Force இதுவரை அமைக்கப்படவில்லை. கை தட்டச் சொன்னதால் சமூக தனிமைப்படுத்தல் என்பது சீர்குலைந்தது. இவற்றை பிரதமர் கவனத்தில் கொள்ளவேண்டும். 

மாநில அரசுகள் தம்மால் இயன்ற நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. மத்திய அரசு தனது அறிவிப்புகளை இனியும் காலந்தாழ்த்தாமல் வெளியிடவேண்டும்

பொது சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் இருந்தாலும் இத்தகைய பெருந்தொற்று (pandemic) காலத்தில் மத்திய அரசு கூடுதல் பொறுப்பேற்கவேண்டும். 

பிரதமரின் உரையில் பின்வரும் அம்சங்களை எதிர்பார்க்கிறேன்: 

1. சமூகப் பரவலைத் தடுக்க மக்களின் தேவையற்ற போக்குவரத்தைத் தடுப்பது. நாடு முழுவதும் ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை போக்குவரத்துத் தடைகளை நீடித்தல்

2. டெஸ்டிங் வசதிகளைப் பெருமளவில் அதிகரிக்க ‘மொபைல் டெஸ்டிங்’ வசதிகளை ஏற்படுத்துதல். 

3. மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகளையும் கட்டணமின்றி இதில் உள்ளடக்குதல்

4. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு பங்கேற்கவேண்டும். மத்திய அரசின் சார்பில் அறிவிப்புகளை வெளியிடவேண்டும்

5. ஜி எஸ் டி, வருமான வரி வசூல் உள்ளிட்ட வரி வசூலை ஓராண்டுக்கு தள்ளிப் போடுதல். வங்கிகளின் வட்டி விகிதத்தைக் குறைத்தல்.விவசாயக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை ரத்து செய்தல் 

6. மத்திய அரசு, பொதுத்துறை ஊழியர்கள்/ ஓய்வூதியர்களின் வருமான வரியை ஓராண்டுக்கு ரத்து செய்தல். 

7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்(MGNREGA) கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இரட்டிப்பாக்கி 200 நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை. 

8. தனியார் மருத்துவமனைகளிலும் கொரொனா சோதனை/ சிகிச்சை அனைத்தும் இலவசம் என அறிவித்தல்

9.நிவாரண நடவடிக்கைகளின்போது மத, சாதி, பாலின பாகுபாடுகளைத் தவிர்க்க உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவேண்டும். பாகுபாடு காட்டப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

10. வீடற்ற மக்களுக்கும்,  நாடோடிப் பழங்குடியினருக்கும்,  நாடற்ற அகதிகளுக்கும் சிறப்பு நிவாரண  ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்

11. கொரொனாவால் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம்

12. மருத்துவர்கள்/ சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் உயிர்காப்புக் கருவிகள் ( life gears) போதுமான அளவில் வழங்க மத்திய அரசின் சார்பில் நடவடிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக