வியாழன், 26 மார்ச், 2020

கொரோனாவிலிருந்து மட்டுமல்ல பசியிலிருந்தும் பிணியிலிருந்தும் மக்களைக் காக்க வேண்டும் - எம்.எச்.ஜவாஹிருல்லா


கொரோனாவிலிருந்து மட்டுமல்ல பசியிலிருந்தும் பிணியிலிருந்தும் மக்களைக் காக்கத் தமிழக அரசு புதுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - எம்.எச்.ஜவாஹிருல்லா

கொரோனா நோய்க் கிருமி பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் முழுமையான முடக்கத்தை மத்திய அரசு அறிவித்து அது நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகவும் தேவையானதே. எனவே தான் வழிப்பாட்டுத் தலங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இந்த முடக்கத்தை ஏற்றுக் கொண்டு இல்லங்களில் முடங்கியுள்ளனர். மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் அரசின் பல்வேறு துறையைச் சேர்ந்த ஊழியர்கள் முன்னெப்போதும் சந்தித்திராத இந்த நெருக்கடியான சூழலில் முழு அர்ப்பணிப்பதுடன் செயல்பட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றிகள், பாராட்டுகள், பிரார்த்தனைகள்.

மருத்துவ நெருக்கடி நிலையாக உள்ள இச்சூழலில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மக்களைக் கொரோனாவிலிருந்து மட்டுமல்ல முடக்கத்தின் காரணமாகப் பசியிலிருந்தும். பிணியிலிருந்தும் மக்களைக் காக்கப் புதுமையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.


அரசு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை விற்பனைச் செய்யும் மளிகை, பால், காய்கறி, இறைச்சி. மீன், மருந்துக் கடைகள். உணவகங்கள் திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்தக் கடைகள் திறந்திருக்க வேண்டுமெனில் அவற்றுக்குத் தேவையான சரக்குகளைக் கொண்டு வரும் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் கோவை உள்ளிட்ட பல நகரங்களில் சிறிய கடைகளுக்குச் சரக்குகளைக் கொண்டு வரும் வாகன ஒட்டிகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளார்கள் என்பது வருந்தத்தக்கது. திறந்திருக்கும் கடைகளுக்குச் சரக்குகள் வருவதற்குத் தடை ஏற்பட்டால் இன்னும் சில நாட்களில் அனைத்து பொருட்களும் விற்றுத் தீர்ந்து கடைகள் மூடப்பட வேண்டிய நிலை தான் ஏற்படும்.

பிக்பாஸ்கட். பிளிப்கார்ட், அமேசான் போன்ற இணைய வழி நிறுவனங்கள் திறந்திருக்கும் என்றும் அந்த நிறுவனங்களின் ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து பொருட்களை அளிப்பதற்குத் தடையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பெரும் வர்த்தக நிறுவனத்தில் பொருட்களை வாங்கும் வழி தெரியாமல் இருக்கும் ஏழை நடுத்தர மக்கள் நாடும் அருகாமையில் உள்ள சிறிய வணிக நிறுவனங்களுக்குச் சரக்கு வருவதற்கே தடை என்றால் 21 நாட்கள் ஊரடங்கைச் சாமானிய மக்கள் எப்படித் தாங்குவார்கள். தமிழகத்தில் மார்ச் 31 வரை தான் ஊரடங்கு என்ற நிலையில் அதற்கு மட்டும் தயாராக இருந்த மக்களுக்கும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு நீடிப்பு என்ற நிலையில் அரசு அருகாமையில் உள்ள சிறிய கடைகள் இயங்குவதற்கு உரிய வழி வகுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

சமையல் செய்ய வழியில்லாத நிலையில் வாழும் இளைஞர்கள் முதியோர்கள், தனி நபர்கள் உணவகங்கள் செல்லும் போதும் அவர்கள் தாக்கப்பட்டால் அவர்கள் உணவிற்கு எங்கே செல்வார்கள். ஆதரவற்ற மக்களுக்குச் சமூகச் சேவை நிறுவனங்கள் சமைத்த உணவை வழங்கக் கூடாது என்று சென்னை மாநகராட்சி செய்துள்ள அறிவிப்பு நிராதரவான மக்களின் நிலையைக் கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்டுள்ளது.
144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஒருவர் செல்லலாம் என்று அறிவிப்புச் செய்யப்பட்ட நிலையில் அவ்வாறு அவசர தேவைகளை நிறைவேற்றச் செல்பவர்கள் மீது காவல்துறை பிரம்படி பிரயோகிப்பதும் தண்டிப்பதும் நியாயமான செயலாகத் தெரியவில்லை.

மக்கள் அவசியத் தேவைக்குத் தனியாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றால் ஒவ்வொரு வீட்டிற்குமான தேவைகளை நிறைவேற்ற அரசு என்ன வழி சொல்கிறது.

சில மாவட்டங்களில் சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்வதற்குச் செல்வதையும் காவல்துறையினர் தடுத்ததாக வரும் செய்திகள் ஆரோக்கியமானதாக இல்லை.

வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் திறந்திருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அவசர தேவையாக இவற்றுக்குச் செல்பவர்களும் காவல்துறையினரால் தாக்கப்பட்டால் மாற்று வழி என்ன?

தமிழக அரசு நியாய விலை கடைகள் மூலமாக வழங்குவதாக அறிவித்து ரொக்கம் மற்றும் பொருட்கள் வரிசைக்கிரமமாக வில்லைகள் அளிக்கப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற வரும் பொது மக்களும் வழியில் இடையூற்றைச் சந்திக்க நேரிடும். எனவே நியாய விலை கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று இவற்றை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசும் மக்களும் சந்தித்திருக்கும் இச்சூழல் கொடுமையானது. இருப்பினும் புதுமையான வழிமுறைகளைக் கையாண்டு அரசு மக்களின் துயரங்களை நீக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிர்கள் காக்கப்படவேண்டும். கொரோனாவிலிருந்து மட்டுமல்ல பசியிலிருந்தும் பிணியிலிருந்தும் என்பதைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக