கொரோனாவிலிருந்து மட்டுமல்ல பசியிலிருந்தும் பிணியிலிருந்தும் மக்களைக் காக்கத் தமிழக அரசு புதுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - எம்.எச்.ஜவாஹிருல்லா
கொரோனா நோய்க் கிருமி பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் முழுமையான முடக்கத்தை மத்திய அரசு அறிவித்து அது நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகவும் தேவையானதே. எனவே தான் வழிப்பாட்டுத் தலங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இந்த முடக்கத்தை ஏற்றுக் கொண்டு இல்லங்களில் முடங்கியுள்ளனர். மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் அரசின் பல்வேறு துறையைச் சேர்ந்த ஊழியர்கள் முன்னெப்போதும் சந்தித்திராத இந்த நெருக்கடியான சூழலில் முழு அர்ப்பணிப்பதுடன் செயல்பட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றிகள், பாராட்டுகள், பிரார்த்தனைகள்.
மருத்துவ நெருக்கடி நிலையாக உள்ள இச்சூழலில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மக்களைக் கொரோனாவிலிருந்து மட்டுமல்ல முடக்கத்தின் காரணமாகப் பசியிலிருந்தும். பிணியிலிருந்தும் மக்களைக் காக்கப் புதுமையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
